Tuesday, March 21, 2017

'புங்கன் விதையில் இருந்து பயோ-டீசல் எடுத்துப் பயன்படுத்த முடியுமா?

'புங்கன் விதையில் இருந்து பயோ-டீசல் எடுத்துப் பயன்படுத்த முடியுமா? புங்கன் மரத்துக்கு வேறு பயன்பாடுகள் இருக்கின்றனவா?

மேட்டுப்பாளையம், வனக்கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சியாளர் பெ. குமார், பதில் சொல்கிறார்.
''புங்கம், 'பாப்பிலியோனாசே’ என்கிற (Papilionaceae)குடும்பத்தைச் சார்ந்த ஒரு நடுத்தர பசுமை மாறா மரம். இந்தியாதான் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. 5 முதல் 10 வருட வயதுள்ள ஒரு மரத்தில் இருந்து... தோராயமாக 250 கிலோ விதை கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிலோ விதை 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புங்கன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயோடீசலாகப் பயன்படுத்தலாம். டீசல் வாகனங்கள் மற்றும் நீர் இறைக்கும் டீசல் இன்ஜின்களில், டீசலுடன் 20% அளவு கலந்து பயன்படுத்தலாம். இதற்காக இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.
இந்த எண்ணெயை சுத்திகரித்து தனியாகவே பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் புங்கன் பயோ-டீசல் பெருமளவிலான பயன்பாட்டுப் பொருளாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடை உள்வாங்கும் திறன், புங்கன் மரத்துக்கு உண்டு. ஆகையால், இம்மரம் 'கார்பன் கிரெடிட்’ திட்டத்துக்கும் பயன்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இது, அனைத்து மண் வகைகளிலும் நன்றாக வளரும் தன்மையுடையது. உவர் நிலத்திலும்கூட வளரும் சிறப்புத்தன்மை இதற்கு உண்டு.
நல்ல ஈரப்பதத்துடன், வடிகால் வசதியுள்ள மண்ணில், இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். மானாவாரி நிலத்தில் மண் அரிப்பைத் தடுப்பதற்காக வளர்க்கலாம். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களில்கூட சிறிது காலம் தாக்குப் பிடித்து வளரும். நன்கு பழுத்த முதிர்ந்த விதைகளை.. ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்துக்குள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 1,000 விதைகள் வரை இருக்கும். சேகரிக்கப்பட்ட விதைகளை நாற்றங்கால் உற்பத்திக்கு உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இதை சேமித்து வைத்துப் பயன்படுத்தினால், முளைப்புத்திறன் குறையும்.
புங்கன் மரத்தை வரப்பு ஓரங்களில் நடவு செய்யலாம் அல்லது மரப்பயிர்களுடன் ஊடுபயிராகவும், சாகுபடி செய்யலாம். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்தை புங்கன் மரம் தனது வேர்முடிச்சுகள் மூலம் சேகரித்து பிரதான பயிருக்கு அளிக்கும். மேலும், இதன் இலை, சருகுகள், எளிதில் மட்கி விடுவதால், நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால்,  பிரதான பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். இயற்கைப் பூச்சிவிரட்டி பயன்பாட்டுக்கு புங்கன் பிண்ணாக்கு மற்றும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.''
தொடர்புக்கு, செல்போன்: 99769-54274.

No comments:

Post a Comment