Tuesday, March 21, 2017

உயிர்வேலி


எங்கள் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். நிலத்தைச் சுற்றிலும் உயிர்வேலி அமைக்க விரும்புகிறோம். இதற்கு ‘சூடான் முள்’ என்ற ஒருவகை செடியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். இதைப் பற்றி விவரம் சொல்லவும்...?” 

திருச்சி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள ‘டி. களத்தூர்’ பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோகனகிருஷ்ணன் பதில் சொல்கிறார். 

‘‘இளம் வயதிலிருந்தே எனக்கு அரிய வகைப் பயிர் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த தேடுதல் மூலம்தான், ‘சூடான் முள்’ என்று சொல்லப்படும் ‘மெல்லிபேரா’ பற்றித் தெரிந்துகொண்டேன். பருவமழை தொடங்கும் முன் விதைகளை விதைத்துவிட்டால் போதும். கிடுகிடுவென வளர்ந்து வந்துவிடும். ஆடுகள், இதன் இலைகளைத்  தின்னும் என்றாலும், செடிகளில் உள்ள முள்ளைத் தாண்டி நிலத்துக்குள் வர முடியாது. என்னுடைய அனுபவத்தில் சூடான் முள் போல, ஒரு உயிர்வேலியைப் பார்த்ததில்லை. இந்த முள்ளை அப்படியே விட்டுவிட்டால், வளர்ந்து மரமாகிவிடும். ஆகையால் நமக்குத் தேவையான உயரத்தில் கவாத்து செய்துவிட வேண்டும். மானாவாரி நிலங்களுக்கு இந்த உயிர்வேலி பாதுகாப்பானது. செலவும் குறைவு. இதன் விதை, கிலோ 1,000 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. 

மானாவாரி நிலங்கள் என்றால், விதைப்பதைக் காட்டிலும் கன்றுகளாக வளர்த்து நடவு செய்வது நல்லது. சில நர்சரிகளில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில், சூடான் முள்ளை உயிர்வேலியாக அமைத்து, பாதுகாப்பு அரணை உருவாக்கலாம். விலை உயர்ந்த சந்தனம், தேக்கு போன்ற மரங்கள் ஓரளவு வளர்ந்த பிறகு, இந்த முள்ளை உயிர்வேலியாகப் போட்டால், ஆடு, மாடுகள் உள்ளே நுழைவது தொடங்கி திருடர்கள் பயம் வரை இருக்காது. ஜே.சி.பி., பொக்லைன் போன்ற வாகனங்களை வைத்து, முள்ளை அகற்றிவிட்டுத்தான் மரங்களை அறுவடை செய்ய முடியும். அந்த அளவுக்குச் சூடான் முள் வளர்ந்து நின்று பாதுகாக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன், ‘பசுமை விகடன்’ இதழில் இந்தச் சூடான் முள் குறித்த தகவல்களைச் சொல்லியிருந்தேன். அதன் பிறகு சூடான் முள் மூலம் உயிர்வேலி அமைத்தவர்களின் தோட்டம், இயற்கையான பாதுகாப்புக் கோட்டையாக மாற்றியுள்ளது. ஒருமுறை செலவு செய்தால், வாழ்நாள் முழுக்க பலன் கொடுக்கக்கூடியது.’’
தொடர்புக்கு, செல்போன்: 98944 01680. 

No comments:

Post a Comment