Thursday, September 29, 2016

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.


இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.!
🍃🌾🍁🎋🍂☘🍂

💥இணையப்பகிர்வு

இதய நோயாளிகளுக்கு முதலுதவி

இயற்கை வழியில் அவசர சிகிட்சை

CPR cardio Pulmonary Resuscitation
உங்கள் வீட்டில் உள்ளவர்களோ அல்லது பொது இடங்களில் யாரேனும் திடீரெனெ மயங்கி விழுந்து  சுவாசம் தடைப்பட்டிருந்தால் செய்ய வேண்டிய அவசரசிகிட்சை

1.முதலில்  பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி காற்றோட்டமாக படுக்க வைக்கவும்

2.அடுத்து அவரின் இடது பக்கமாக நின்றுகொண்டு  பாதிக்கப்பட்டவரின் இதயத்தின் மேல் இடதுகையையும் அதற்கு மேலே வலது கையையும் வைத்து  விநாடிக்கு இரண்டு முறை என்ற வேகத்தில் 30 முறைகள் போதிய அளவு பலமாக அழுத்தம் கொடுங்கள்

3.பிறகு பாதிக்கப்பட்டவரின் மூக்கை  நமது விரல்கள் பிடித்துக் கொண்டு வாயோடு வாய் வைத்து இரண்டு முறை வேகமாக ஊதுங்கள்

4.மீண்டும் இரண்டு கைகளையும் இதயத்தில் வைத்து வேகமாக 30 முறை அழுத்துங்கள்

5.மீண்டும்  இரண்டு முறை  பாதிக்கப்பட்டவரின் நாசியை அடைத்துக் கொண்டு வாயோடு வாய்வைத்து காற்றை வேகமாக
உள்ளே ஊதுங்கள்.!
இப்படியே  தொடர்ந்து  இதயத்துடிப்பு வரும்வரை செய்யுங்கள்.!
இது செய்வதற்கு மிக எளிய வழிமுறையாய் இருந்தாலும் இருதய பலவீனம், மாரடைப்பு, மூளை திசுக்களுக்கு இரத்த செல்லாமை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.!
இந்த CPR சிகிட்சை உடனடியாக செய்வதால் 100/ 90 சதவீதத்தினர் மருத்துவமனைக்கு போகும் முன்பே நார்மல் நிலைக்கு வருவதாகவும்  மருத்துவமனையில் சேர்த்தும் இதை உடனடியாக செய்யாத பட்சத்தில் அதன்பிறகு எத்தனை உயர் சிகிட்சை அளித்தாலும் அது பலருக்கு  போதிய பலன் அளிப்பதில்லை என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.!
இதை செய்வதற்கு மருத்துவம் கற்றவர்கள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்த பட்ச அறிவுள்ள உயிரை காக்க வேண்டும் என்ற துடிப்புள்ள யாரும் செய்யலாம்.!
இதன் உடனடி பலனாக சுவாச மீட்பு, இருதய தசைகளுக்கு இரத்தம் செல்வது, மூளை திசுக்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜனும் இரத்த ஓட்டமும் செல்வது போன்றவை நடைபெறு வதாலேயே உயிர் மீட்கப் படுகிறது.!

ஏன்?

நான்கூட இதெல்லாம் சும்மா 'ஃபார்மாலிட்டி'க்காக தான் பண்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஞ்ஞானம் இருப்பது ஆச்சரியப்படவைத்தது:


வாழை இலை சாப்பாடு ஏன்?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. 'ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.

விபூதி பூசுவதன் ஏன்?

தலைக்கு குளித்து விட்டு விபூதியை நெற்றி நிறைய பூசினால் தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் தண்ணீரை விபூதி உறிஞ்சி விடும்.

விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. இந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

பித்தம்.

பித்தம் என்றால் என்ன ?


மனிதனின் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம் ) என்று 3 விதமான நாடிகள் உண்டு.

உடலில் உள்ள பித்தபை எனப்படும் சுரபி வேலை செய்தால் மட்டுமே நல்ல பசி, உண்ட உணவுகள் செறிக்கும் தன்மை அடைகிறது. இதை அக்னி, சூடு என்று சொல்வதுண்டு . இது அதிகமாக சுரக்கும் உணவுகளை ( எண்ணை உணவுகள் ) எடுத்தாலும், நீர் தன்மை உடலில் குறைந்தாலும் பித்தம் சமநிலை தவறும்.

இன்று உள்ள அல்லோபதி மருத்துவத்தில் தரப்படும் மாத்திரைகள் பித்தசுரபிகளை தொல்லை படுத்துகிறது.

சித்த வைத்திய முறையில்:

உணவின் ரசத்தை பிரிப்பது கபம் அதாவது உண்டபின் கபமும், குருதியில் இருந்து சதைக்கு சேர்ப்பது பித்தம் (ஜீரணம் நடக்கும் பொழுது பித்தம்).

குடலில் இருந்து காற்றை பிரிப்பது ,கழிவு பொருளை வெளியேற்றுவது வாதம் என்றும் (ஜீரணம் நடந்த முடிந்த பின்) சொல்ல படுகிறது .

⭕அதிகாலை கபமும்
⭕சூரிய சக்தி அதிகமானதும் பித்தம் என்றும்
⭕சூரிய சக்தி தணியும் பொழுது வாதமும் வேலை செய்கிறது என்றும் சொல்ல படுகிறது .

🌀 இந்த பித்தம் சளியின் நண்பன். பித்தம் அதிகம் உண்டாகும் பொழுது சளி உண்டாகும். இப்படியும் சொல்லலாம் சளி உண்டாகும் பொழுது பித்தம் உண்டாகும்.

🌀 இந்த சளி எனப்படும் eosinophilia மிகுந்த தொல்லை தரும் செயல் என்று நாம் அறிவோம்.

🌀 இந்த பித்தம் உடல் சூட்டை உண்டாக்கும் , மேலும் பித்த தேகம் உடையவர்கள் ஒல்லியாக இருப்பர்.

🌀 உடலில் பித்தத்தினால் ஏற்படும் சூடு என்னும் உஷ்ணம் மலம், மூத்திரம் மற்றும் விந்து வழியாகவெளி ஏறி உடலை சமநிலை அடைய செய்யும் .

🎯 இந்த பித்தம் நம்மில் சம நிலை அடைய இஞ்சி சிறிதளவு, எலுமிச்சை பழத்தின் அரை பாதி, இத்துடன் சமளவு தேன் கலந்து காலை எழுந்தவுடன் பருக வேண்டும். அதாவது முதல் நாள் இஞ்சியை சிறிதளவு நசுக்கி அதில் சிறிது நீர் சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை இந்த நீரை வடிகட்டி இந்த நீரின் அளவு தேன், இதன் அளவு எலுமிச்சைசாறு சேர்த்து பருக வேண்டும். 60 நாட்கள் 3 முறை செய்ய பித்தம் சமப்படும் .
இவைகள்தான் நம் உடலில் உள்ள பித்தத்தின் செயல்.

இந்த பித்தம் சிலரின் உடலில் சமநிலை அடைவதும் அடையாமல் இருப்பதும் என்று தெரிந்து கொள்ள உடலில் சில அடையாளம் மற்றும் சில மாற்றங்கள் வெளிபடுத்தும் .

✔ பித்தம் அதிகமாக உற்பத்தியாகி சிலருக்கு வாய்களில் கசப்பு உற்பத்தியாகி மஞ்சள் நிறத்துடன் வாந்தியாக வெளியே வரும்.இதுவே சிலருக்கு பச்சை நிறமாகவும் வெளியே வரும். சிலருக்கு தலை சுற்றல் வரும். உடலில் பித்தம் மிகவும் அதிகம் சேர்ந்து பிறகு இப்படி வெளிபடும் .

1⃣ பித்தத்தின் முதல் நிலை மஞ்சள்
2⃣ இரண்டாம் நிலை பச்சை
3⃣ முன்றாம் நிலை கருமை ....

⭕ முதல் இரண்டு நிலைகளை தான் பெருபான்மையோர் அனுபவித்து வருகின்றனர் .

⭕ இரண்டாம் நிலை உடலில் தாக்கியவுடன் தலையில் உள்ள மூடிகள் வெண்மை நிறமாக மாறிவிடும். இதை பித்த நரை என்று சொல்வது உண்டு. இது இளமையில் வருவது கொடுமை .

நமக்கு காலம் செல்ல செல்ல (வயது கூட) பித்தப்பை தன் செயலை குறைப்பதினால் மற்றும் எண்ணை உணவுகளை செரிக்கும் தன்மை குறைவதால் நமக்கு பித்தம் தலைக்கு ஏறி நரை வருகிறது. இப்படி சொல்வது சித்த நூல்கள் .

அலோபதி மருத்துவர்கள் விட்டமின்ஸ் இல்லை என்பார்கள். உடல் கூறுகளை அருமையாக காரணத்துடன் விளக்கி சொல்லியது நம்முடைய
சித்த நூல்கள் மட்டுமே .

⭕ மூன்றாம் நிலை பைத்தியம். இதை சித்த நூலகள் பித்தம் தலைக்கு ஏறி பித்து பிடித்து விட்டது என்பார்கள். வாய்க்கு வந்த பித்தம் மஞ்சளாக மாறி பச்சையாக மாறி பிறகு கருப்பாக மாறி தலைக்கு ஏறி சித்தத்தை குழப்பி கெடுத்து விட்டது என்பார்கள் .

இதை சித்த மருத்துவர்கள் சில பச்சை இலைகளை கொடுத்ததும், முலீகை இலைகளை கலந்து, ஊறி, அலசி வரும் நீரினாலும் இதை குடிப்பதாலும்,  தலைக்கு குளிப்பதினாலும், சித்தம் திரும்ப பெறவும், பித்தம் குறைந்து போகும் என்று மருத்துவம் செய்தார்கள்.

இந்த மருத்துவத்திற்காக விளைந்த முலிகைகளை கொண்ட திரிகூடமலை (சித்திர சபை )
வனத்தில் சித்தர்கள் தங்கி மருந்து செய்தார்கள் .

இந்த மலையில் அசையும் சக்தி நீராகவும், அசையாத மலை சிவனாகவும் இருந்து இதில் குளிப்பவர்களுக்கு பித்தம் சமநிலை அடைய செய்வார்கள் என்று நம்பிகை உள்ளது .

இப்படி பித்தம் என்பது சித்தத்தை குழப்பும் சக்திகளை கொண்டது .

பித்தம் ஏறினால் எப்படி பித்து பிடிக்கும் என்று புரிந்து கொண்டோம் .!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

மூக்குத்திப் பூ

அதிசய மூலிகை..!


எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.

பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள்.என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக்கூப்பிட்டு விபரம் கேட்டார்.அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்கவைக்கிறேன் என்றார்.

எனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம்.மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.

அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு.!