Saturday, November 19, 2016

புதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்




நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

தென்னையில் ரகங்கள்

தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.
இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது.
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன.
இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம்.
இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன.

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை

தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும்.இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை.
இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது

விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும்.
இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?

தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன.
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம்.
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மண்வள மீட்பு

மண் உயிருள்ளது என்பதையும், மண்ணில் உயிரினங்களின் செயல்பாடுகள் பற்றியும், இயற்கையின் சில விதிகளைப் பற்றியும் பார்த்தோம். இவைகளை அடிப்படையாகக் கொண்டே மண் வளத்தை மேம்படுத்தும் நுட்படங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். சரியான மண் மேலாண்மை நுட்பங்களையும், நீர் மேலாண்மை மற்றும் பயிர் வளர்ப்பு முறைகளையும் இதன் அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொண்டால் மண் வளத்தை மேம்படுத்த முடியும்.

கரிம அளவைக் கூட்டுவது

மண் மேலாண்மை நுட்பத்தின் முதல் அடிப்படை மண்ணின் கரிமச் சத்தை அதிகரிப்பதே. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவே மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கின்றது. கரிமப் பொருள் அதிகரிக்கப்பட்ட மண்ணில் அனைத்து வகை நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வாழ் உயிரினங்களின் செயல்திறனும் அதிகரிக்கின்றது. பயிர் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான அனைத்துப் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் பயிருக்கு இயல்பான முறையிலும், சிறப்பான நிலையிலும், தேவையான அளவிலும் தொடர்ந்து கிடைக்கின்றன. மண் துகள் அமைப்பு சீர்பட்டு மண் பொலபொலப்பாகின்றது. எனவே, காற்றோட்டமும், நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. கரிம அளவு கூடும் பொழுது மண்ணின் கார அமில நிலை (PH) மேம்படுகின்றது. பயிர்களுக்கு மிக இன்றியமையாத வேர்ப்பூசண உறவு நிலை (மைக்கோரைசா) ஏற்படுகின்றது.
கரிமச் சத்தை மண்ணிலே அதிகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

தொழு எரு (FYM - farm yard manure)

மண்ணின் கரிமச் சத்தை உயர்த்துவதற்கு நம் முன்னோர்கள் அதிக அளவில் கடைப்பிடித்த ஒரு முறை தொழு எருவைத் தொடர்ந்து நிலத்தில் சேர்த்ததே ஆகும்.
உழவுத் தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது. பயிர்ச் சாகுபடியின் போது கிடைக்கும் கழிவுகள் கால்நடைகளுக்கான உணவாகின்றன. கம்பு, சோளம், போன்ற தானியப் பயிர்களின் தட்டையும், வைக்கோலும், தவிடும், பிண்ணாக்கும், பருத்திக் கொட்டையும், வயல் வரப்புகளில் விளைந்து கிடக்கும் புல்-பூண்டுகளும் கால்நடைகளுக்கான உணவாக அமைகின்றது.
இவைகளின் கழிவுகளான மாட்டுச் சாணமும், ஆட்டுப் புழுக்கையும், கால்நடைகளின் தீவனக் கழிவுகளும், ஒன்றாக குவிக்கப்படும் ஒவ்வொரு முறை உழவின் போதும் குவிக்கப்பட்டுள்ள தொழு எரு நிலத்தில் இடப்படும் பெரும் பகுதி மட்கிய நிலையில் உள்ள இந்தத் தொழு எரு நிலத்தின் தன்மையை நன்கு மேம்படுத்தும். இவ்வெரு மண்வாழ் உயிரினங்களுக்கான மிகச் சிறந்த உணவாகும். இவ்வெரு இடுவதன் மூலம் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால் உயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் கிடைக்கின்றது.
தொழு எருவைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் தேவை. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தொழு எரு வீணாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிழலுள்ள மேடான இடத்தில் கால்நடைக் கழிவு, மற்றும் தீவனக் கழிவுகளைக் கொட்டி வைத்து அடிக்கடிப் புரட்டிக் கொடுப்பதும், போதிய ஈரம் உள்ளவாறு பார்த்துக் கொள்வதும் இன்றியமையாதது. தொழு எருவில் மணிச்சத்து சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதைச் சரி செய்ய கால்நடைகளின் சாணக் கழிவுகளோடு அவற்றின் சிறுநீரையும் சேர்த்துவர வேண்டும்.
தொழு எருவை நிலத்தில் இடும் பொழுது, நீர்பாயும் வசதியுள்ள நன்செய் மற்றும் தோட்டக்கால் நிலங்களுக்கு கூடுதலாகவும், மானாவாரி நிலங்களுக்குச் சற்றுக் குறைவாகவும் இட வேண்டும்.
அதாவது, மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்குப் பதினைந்து முதல் இருபது வண்டி அளவு போதுமானவை. பாசன வசதி உள்ள நிலங்களுக்கு 25 முதல் 35 வண்டி அளவி வரை இடலாம். நீர்வசதி நிறைந்த இடத்தில் விளைவிக்கப்படும் கரும்பு, மக்காச்சோளம், காய்கறிப் பயிர்கள், பழ மரங்கள் ஆகியவற்றுக்கு 40 முதல் 50 வண்டி வரை தொழு எரு இடலாம்.

மட்கு எரு (compost)

பண்ணையில் கிடைக்கக்கூடிய அனைத்துப் பயிர்க் கழிவுகள் கால்நடைக் கழிவுகள், சாம்பல், வண்டல், பசுந்தழைகள், கால்நடைகளின் சிறுநீர் கலந்த மண், மீன் கழிவுகள் ஆகியவைகளை வைத்து மட்கு எரு தயாரிக்கப்படும். மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்படும் மட்கு எருவில் மண் வளத்தை உயர்த்தக்கூடிய அனைத்துக் கூறுகளும் உண்டு. மட்கு எருத் தயாரிப்பையும், அதன் பயன்பாட்டையும், பல்வேறு அறிவியலாளர்களும், வெவ்வேறு முறையான ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்படும் மட்கு எருவில் மிகக் கூடுதலாகவே பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் உள்ளன.
காய்ந்த குச்சிகள் மற்றும் பயிர்களின் கடினமான பகுதிகள் அதாவது தட்டை, தாள், சூரிய காந்திப்பூவின் அடிப்பகுதி, மக்காச் சோளக் கதிரின் தக்கை முதலான பகுதிகளை முதல் அடுக்காகப் போட வேண்டும். 5 அடி அகலத்தில் தேவையான நீளத்தில் இந்தப் படுக்கையைப் போட வேண்டும். ஏறத்தாழ, 3/4 அடி உயரத்திற்குப் போடப்பட்ட இந்த அடுக்கின் மீது சாணம், சிறுநீர் கலந்த சற்றுக் கெட்டியான கரைசல் ஊற்றப்பட வேண்டும். இதன்மீது பசுந்தழைகள் 3/4 அடி உயரம் இடப்பட வேண்டும். இதன் மீது நெல் உமிச்சாம்பல், அடுப்புச் சாம்பல் போன்றவைகளை இரண்டு அங்குல உயரம் இட வேண்டும். இப்படி அனைத்துக் கழிவுகளையும் ஒவ்வோர் அடுக்காக இட்டு வர வேண்டும். நான்கிலிருந்து ஐந்த அடி உயரம் வந்தவுடன் மேலே தோட்டத்து மண்ணை இரண்டு அங்குல அளவுச் சிதறி நீரைத் தெளித்து விடவேண்டும். கூடுதல் ஈரமும், குறைவான ஈரமும் மட்டுப்படுக்கையில் நுண்ணுயிர்களின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். எனவே, போதிய ஈரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படுக்கையை இருபது நாட்களுக்கு ஒரு முறையாகப் புரட்டிவிட வேண்டும். அப்போது போதிய ஈரம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை புரட்டியபின் இந்தப் படுக்கை நன்கு மட்கி விடும். இதை நாம் முடிந்தவரை உடனே நிலத்திலிட்டு உழுதுவிட வேண்டும். அல்லது, பயிர்களுக்கு அருகில் இட்டு மூடிவிட வேண்டும். ஏனெனில், மட்கு நன்கு உழுவானதற்குப் பின்னரும் தொடர்ந்து வைத்திருப்போமேயானால் இம்மட்கில் நுண்ணுயிரிகளால் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தழைச்சத்து முதலான சத்துக்களை படிப்படியாக இழந்துவிட வேண்டும். நிழல் மிகுந்த இடத்திலேயே மட்கு எரு தயாரிக்ப்படல் வேண்டும்.
பல்வேறு ஆய்வாளர்களின் சோதனைகள் காட்டியுள்ளபடி மட்கு எரு தொடர்ந்து இடப்பட்டு வரும் நிலம் மிக வளமான நிலமாக மாறும்.

கிடை வைத்தல்

ஆடு மற்றும் மாடுகளை நிலத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் அவைகளின் பசுஞ்சானக் கழிவையும், சிறு நீரையும் மண்ணில் சேர்ப்பது என்பது மண் வளத்தைப் பேணும் மரபு வழிப்பட்ட ஒரு நுட்பமாகும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ஆடுகள் வரை நிறுத்தப்படும். அதேபோல் இரண்டாயிரம் மாடுகள் வரை ஓர் ஏக்கர் நிலத்தில் நிறுத்தி வைக்கப்படும். இவைகள் இடும் சாணமும், சிறுநீரும் உழுவதன் மூலம் மண்ணில் நன்றாகக் கலக்கப்படும்.
கிடை வைப்பதற்கென்றே தனி இன மாடுகள் பெரும் எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. மலை மாடுகள் அல்லது கிடைமாடுகள் என்று அவை அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய இம்மாடுகள் பகலில் பல்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டு இரவில் தேவைப்படும் நிலங்களில் அடைக்கப்படும். செம்மரி மற்றும் வெள்ளாடுகளும் இவ்வாறே பகலில் மேய்ச்சலுக்குப் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு இரவில் குறிப்பிட்ட நிலத்தில் அடைக்கப்படும்.
“ஆட்டெரு அவ்வருடம், மாட்டெரு மறு வருடம்” என்ற முதுமொழி இன்றும் நடைமுறையில் உள்ளது. இளந்தளிர்களையும், பயிர்களின் மென்மையான பகுதிகளையும் உணவாகக் கொள்ளும் ஆட்டின் கழிவு உடனே மட்கம் தன்மையுடன் இருக்கும். சற்று கடினமான பயிர்ப் பகுதிகளையும், முதிர்ந்த தாள் தட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும் மாட்டின் கழிவு மட்குவதற்குச் சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும் . கிடை வைக்கப்படாத நிலமே தமிழகத்தில் இல்லை என்ற நிலை அண்மைக்காலம் வரை இருந்தது. கிடை வைப்பதன் மூலம் கால்நடைகளின் சிறுநீர் நிலத்தில் பெருமளவு சேர்வதால் தழைச்சத்தும், பாசுவரச் சத்தும் பயிர்களுக்குக் கூடுதலாய் கிடைக்கும். நிலத்தில் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் மிகுதியாகும்.

பசுந்தாள் எரு

ஒரு பயிரை சாகுபடி செய்வதற்கு முன்னால், அந்நிலத்தில் சில வகைப் பயிர்களை வளர்த்து மடக்கி உழுவதையேப் பசுந்தாள் எருவிடுதல் என்கின்றோம். இதுவும் ஒரு மரபு வழி நுட்பமேயாகும்.
தக்கைப் பூடு, சணப்பு, அகத்தி, கொளுஞ்சி, அவுரி போன்ற பயறு வகைப் பயிர்களை வளர்த்து, அப்படியே நிலத்தில் மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் பயிரை பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதால் நார்ப்பொருள் அப்பயிரில் இல்லாமலிருக்கும். எனவே, இளம் பசுந்தாள்ப் பயிர் உடனே மட்கிவிடும். கூடுதல் தழைச்சத்து நிலத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால், இளம்பயிரை மடக்கி உழும் பொழுது நிலத்தில் சேரும் கரிமப் பொருளின் அளவு குறைவாகத் தான் இருக்கும். முதிர்ந்த நிலையில் உள்ள பசுந்தாள் பயிர் நிலத்தில் கூடுதல் மட்கைச் சேர்க்கும். ஆனால் மிக மெதுவாகத் தான் இதன் பலன் பயிருக்கும் கிடைக்கும்.
எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப் போகும் பயிருக்கு ஏற்றவாறும், சாகுபடிப் பயிர் வைக்கப் போகும் காலத்தை மனதில் கொண்டும் பசுந்தாள் எருவைப் பயன்படுத்த வேண்டும்.

பசுந்தழை எரு

ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அதே நிலத்திலேயே மடக்கி உழுது எருவாக்கப்படும் பயிரைப் போலல்லாமல், பயிரிடப்படும் நிலத்திற்கு வெளி இடங்களில் வளர்ந்திருக்கும் பல்வேறு பயிர்களின் பசும் தழைகளை நிலத்திலிட்டு உழுது எருவாக்கும் முறைக்குப் பசுந்தழை எரு விடுதல் என்று பெயர்.
பூவரசு, வேம்பு, புங்கம், ஆவாரை, எருக்கு, வாதமடக்கி, கொளுஞ்சி போன்ற நம் நாட்டு பயிர்களின் தழைகளோடு, வெளி இடங்களிலிருந்து இங்கு கொண்டு வந்து தழைக்காகவே வளர்த்து விடப்பட்டுள்ள நெய்வேலிக் காட்டமாகி, கிளைரிசிடியா போன்ற பயிர்களின் தழைகளையும் பசுந்தழை எருவாகப் பயன்படுத்தலாம்.
எருக்களை என்ற பெயரே அந்தப் பயிரின் சிறப்பைத் தெரிவிக்கின்றது. விளக்கு எரிக்கப் பயன்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்ற பெயரால் அழைக்கப்பட்டதைப் போல தழை எரு இடுவதற்கென்றே சிறப்பான முறையில் பயன்பட்ட செடியை எருக்களை என்றே அழைத்தனர். இந்தப் பெயரே பசுந்தழை எருவிடுவதன் தொன்மையைக் குறிக்கும். பொதுவாக நெல் பயிரிடப்படும் வயலுக்குப் பயிர்களை அக்களர் நிலங்களில் இட்டு உழுதனர் நம் முன்னோர்.
"களர் கெடப் பிரண்டை"
"களர் கெட வேம்பு"
"களர் முறிக்க காணம்"
என்பவை இதன் அடிப்படையில் உருவான முதுமொழிகள்.
பயிரின் மிச்சங்களை மடக்கி உழுதல்
சாகுபடிப் பயிர்களின் அறுவடைக்குப் பின்பு மீதமுள்ள பயிர்ப் பகுதிகளை அப்படியே நிலத்தில் மடக்கி உழ வேண்டும். பயிரின் மிச்சங்களைத் திருப்பி மண்ணுக்கே அளிப்பதன் மூலம் மண்வளம் அதிகரிப்பதைப் பற்றிய பல ஆய்வுகள் நடந்துள்ளன.
ஒரு தொட்டியில் வளம் நிறைந்த மண்ணை இட்டு ஒரு வாழைக்கன்றை நட்டு வைப்போம். தொட்டியில் நூறு கிலோ எடை கொண்ட மண் இடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குப்பின் வாழைக்குலையை வெட்டி எடுத்து விட்டு, வாழை மரத்தை எடை போட்டுப் பார்ப்போம். அந்த வாழை மரத்தின் எடை ஏறத்தாழ ஐம்பது கிலோ இருக்கும். இப்பொழுது தொட்டியில் உள்ள மண்ணின் எடை 95 கிலோவாக உள்ளது. 5 கிலோ அளவு மண்ணின் எடை குறைந்துள்ளது. ஆனால், குலையை நீக்கி எடை போடப்பட்ட வாழை மரமோ ஐம்பது கிலோ உள்ளது. இதில் 40 கிலோ அளவுக்கு நீர் இருப்பதாய் வைத்துக் கொண்டால் கூட பத்து கிலோ அளவுக்குக் கரிமப் பொருள் நிலத்தில் சேர்கின்றது. அதாவது 5 கிலோ எடையை இழந்த மண் 10 கிலோ அளவு பயிர்க் கழிவைப் பெறுகின்றது. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது.
அதாவது, நிலத்திலிருந்து ஒரு பயிரால் எடுத்துக்கொள்ளப்பட்ட பல்வேறு தனிமங்களும், தாதுப் பொருட்களும், மீண்டும் நிலத்திற்கே பயிர்க்கழிவு வடிவத்தில் அளிக்கப்படுகின்றது. நுண்ணுயிர்கள் இதைச் சிதைத்து மீண்டும் பயிருக்கான ஊட்டங்களை உருவாக்குகின்றன.
பல தானியப் பயிர் விதைப்பு
இது பசுந்தாள் எருவிடுவதின் மேம்படுத்தப்பட்ட முறையாகும். பல தானியப் பயிர் விதைப்பு என்பது இயற்கை வழிப்பட்ட வேளாண்மையில் தீவிர ஈடுபாடு கொண்ட தமிழக உழவர்களால், அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிக நல்ல நுட்பமாகும். ஒவ்வொருப் பயிரும் வெவ்வேறு வேதிப்பண்புகளைப் பெற்றுள்ளது. எருக்களையில் போரானம், கிளைரிசிடியாவில் மக்னீசியமும், துத்தியில் கால்சியமும் கூடுதலாய் உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டே இதன் மூலம் மண் பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களையும கொண்டதாக மாறுகின்றது.
கேழ்வரகு, தினை, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற பல்வேறு தானியப் பயிர்கள் உள்ளன. கொள்ளு, துவரை, உளுந்து, நரிப்பயறு, தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற பல்வேறு பயறுவகைப் பயிர்கள் உள்ளன. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் உள்ளன. இதைப் போன்றே கொளுஞ்சி, அவுரி, அகத்தி, சணப்பு, தக்கைப்பூடு போன்ற உயிர்ப் பயிர்களும், சீரகம், வெந்தயம், கொத்துமல்லி, சோம்பு போன்ற மணப்பொருட்களும் உள்ளன. இவைகளில் ஒவ்வொரு வகைப் பயிரிலும் நான்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் மொத்தம் இருபது வகைப் பயிர்கள் இருக்கும். இந்த இருபது வகைப் பயிர்களின் விதைகளை இருபத்தி ஐந்து கிலோ அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை எடுத்துக்கொள்ளும் போது, சிறிய விதைகளாக இருந்தால் சற்றுக் குறைவாகவும், பெரிய விதைகளாக இருந்தால் சற்று அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கேழ்வரகு ஒரு கிலோ என்றால் சூரியகாந்தி விதை மூன்று கிலோ என்று விதையின் அளவுக்குத் தகுந்தவாறு எடுத்து விதைகளைக் கலந்து விதைக்க வேண்டும். பயிர் வளர்ந்து 45 நாட்களில் இருந்து 55 நாட்களில் இவற்றை மடக்கி உழுது நிலத்தில் சேர்த்துவிட வேண்டும். பயிருக்காகன சமச்சீர் ஊட்டம் கிடைக்க இப்பல தானியப் பயிர் விதைப்பு வழிவகுக்கும்.
ஏரி, குளத்து வண்டல்
மேல் மண்ணின் தரத்தைக் கூட்டுவதில் இது கூடுதல் பங்கு வகிக்கின்றது. அதுவன்றி, மண் அரிப்பும் மூலம் ஏற்படும் மேல்மண் இழப்பையும் இம்முறை ஈடு செய்கின்றது. பெரும் மழைக்காலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடைகளிலும், கால்வாய்களிலும் ஓடி ஏரி, குளங்களைச் சென்று சேர்கின்றது. நிலத்தில் விழும் மழைநீர் வளமான மேல்மண்ணையும், பல்வேறு தாதுப் பொருட்களையும், விலங்கு, பயிர்க் கழிவுகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்று ஏரி, குளங்களைச் சேர்கின்றது. இவை யாவும் ஏரி, குளங்களின் அடியில் மெதுவாய்ப் படிகின்றது. ஊட்டங்கள் நிறைந்த இப்படிவு வண்டலாய் மாறுகின்றது. கோடை காலத்தில் ஏரி, குளங்கள் வற்றியபின் இவ்வண்டலை எடுத்து நிலத்திலிட்டு உழுவதன் மூலம் நில வளம் மேம்படுகின்றது.
சாம்பல் இடுதல்
நிலத்திற்குச் சாம்பல் இடும் நுட்பமும் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட் ஒன்றாகும். சாம்பல் இடுவதன் மூலம் நிலத்தில் பல்வேறு கனிமங்களின் அளவும், தாது உப்புக்களின் அளவும் கூடுகின்றது. சாம்பல் இட்டு உழுத நிலத்தில் பயிரிடப்படும் பயிர் தனக்குத் தேவையான சாம்பல் சத்தையும், தாது உப்புக்களையும, பல்வேறு நுண்ணு£ட்டத் தனிமங்களையும் இயூல்பான முறையில் பெற்றுக் கொள்கின்றது. அது மட்டுமின்றி பயிர் பூசண நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது. சாம்பல் இடுவது நிலத்தில் நூற்புழுத் தாக்குதலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
10 மூடை உமியை எரிக்கும் பொழுது 1 மூடை உமிச் சாம்பல் கிடைக்கின்றது. எனவே 1 மூடை உமிச்சாம்பல் இடுவது என்பது 10 மூடை உமியை நிலத்தில் இடுவதற்குச் சமமானது. அரிசி ஆலைகளில் கிடைக்கும் உமிச் சாம்பல் மட்டுமினறி செங்கல் காளவாசல்களிலிருந்து கிடைக்கும் விறகுச் சாம்பலையும் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 25 கிலோ எடை கொண்ட 40 மூடை சாம்பல் இடலாம்.
எலும்புத்தூள் இடுதல்
இறந்து போன கால்நடைகளின் எலும்புகளையும், கொம்பு போன்ற பாகங்களையும் சேகரித்து, அவைகளைத் தீயில் வேக வைக்க வேண்டும். செங்கலைக் காளவாசலில் வைத்து எரிப்பதைப் போல, எலும்பு, கொம்பு போன்றவைகளையும், விறகு, கரி போன்ற உரிபொருட்களையும் மாறி மாறி அடுக்கி மண்வைத்துப் பூசித் தீ வைத்துவிட வேண்டும். விறகு, கரி போன்றவை நன்கு வெந்து தணிந்த பின், ஓரிரு நாட்கள் கழித்து எலும்பு, கொம்பு இவைகளை எடுத்துவிட வேண்டும். இவைகள் நன்கு உடைந்து நொறுங்கும் தன்மையுடன் இருக்கும். இவைகளை நாம் நொறுக்கி நிலத்தில் தூவி விடலாம். நிலத்தில் உள்ள கரையாப் பாசுவரத்தைக் கரைத்துக் கொடுக்கும் நுண்ணுயிர்கள், வெந்து போன இந்த எரும்புக் கழிவுகளை சிதைத்துப் பயிர்களுக்கான மணிச்சத்தாக மாற்றிக் கொடுக்கும்.

விலை போன விதைகள்


  வேளாண்மையில் மிகவும் முதன்மையான இடுபொருள் விதை என்பதை யாரும் மறுக்க முடியாது. விதைகள் நமது மரபில் வளமையின் அடையாளமாகும். விதைகள் வெறும் பொருள்கள் அல்ல, அவை மக்களின் வாழ்க்கைக்கான ஆதாரங்களாகவும் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்த குலம் உணவிற்காக விதையை தொடர்ச்சியாக தெரிந்தெடுத்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளது. நாகரிகத்தின் முதன்மைக் கண்ணியாக விதைகள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. வரலாற்றுக் காலத்திற்கு முன்பே விதைகள் மக்களோடு மிக நெருக்கமாக வந்துவிட்டன. நெருப்பைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிக்கு சற்றும் குறைவில்லாது விதைகளும் தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வந்தன. இந்த விதைகள் கானகப் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு அதாவது காட்டுத் செடிகொடிகளில் இருந்து கண்டறியப்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் விதைக்கப்பட்டு மீண்டும் விதைக்கப்பட்டு நாம் இப்போது உண்ணும் பயிர்களின் விதையாக உருமாற்றம் செய்யப்பட்டன. இந்த விதைகள் திறந்தநிலை மகரந்தச் சேர்க்கை (open pollination) என்ற முறையில் இனப்பெருக்கம் செய்பவை.
இந்தப் பணியில் மாந்தர்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும்கூட ஈடுபடுகின்றன. கானகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இத்தகைய விதைகள் பின்னர் வயல்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்டன. எனவே இதற்குப் பொறுக்கு விதைகள் (selection breed seeds) என்று பெயர். இவை பல்லாயிரம் ஆண்டுகளாக பல பருவங்கள், பல நோய்கள், பல பூச்சிகள் இவற்றைத் தாங்கி வளர்ந்தவை. நன்கு விளைந்து கிடக்கும் வயலில் இறங்கி பூச்சித் தாக்குதல் நோய் தாக்குதல் ஏதும் இல்லாமல் சிறப்பாக வளர்ந்துள்ள கதிர்களை அறுத்து அதன் நடுப்பகுதியில் இருந்து விதைகள் சேமிக்கப்படும். இவை பல்லாயிரம் ஆண்டுகளான உழவர்களின் கைகளுக்குள் வந்துவிட்டதால் பலவகையான பருவங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கண்டு திறமிக்க விதையாக இருக்கும். இந்த விதைகள் சூழலுக்கு ஏற்ற முறையில் கூடுதலாகவோ குறைவாகவோ விளைச்சலைத் தரும். நாடோடிகளாக அலைந்து வாழ்ந்த பண்டை மாந்தர்களின் உணவில் குறைந்து 3000 வகையான கானகப் பயிரினங்கள் இடம் பெற்றிருந்தன. அதற்கடுத்து நிலையாக வாழத் தொடங்கிய பண்டை நாகரிகக் கால மக்கள் 500க்கு மேற்பட்ட பயிரினங்களை உணவாகக்கொண்டனர். இதில் ஆறு மட்டுமே இப்போது 85 விழுக்காடு மக்களால் உண்ணப்படுகிறது என்று உலக உணவு வேளாண்மை நிறுவனம் கூறுகிறது. இப்படியாக உழவர்களின் கைகளில் இருந்த விதைகள் வணிக நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்த அடிப்படையில் விதைகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. பொறுக்கு விதைகள்
2. கலப்பின விதைகள் அல்லது வீரிய (சோதா) விதைகள்
3. மரபீனி மாற்றப்பட்ட விதைகள் அல்லது மலட்டு விதைகள்
கலப்பின விதைகளின் கதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.எச். ஸ்கல் என்ற மரபீனியியல் ஆராய்ச்சியாளர் 1906ஆம் ஆண்டளவில் மக்காச் சோளம் எனப்படும் மொக்கைச் சோளத்தில் கலப்பின ஆராய்ச்சியுடன் தொடங்குகிறது. இவருக்குப் பின்னர் 1921ஆம் ஆண்டில் டி.எஃப். ஜோன்ஸ் என்பவர் வணிக முறையிலான மக்காச்சோள விதையை வெளியிட்டார். இதன் பயனாக ஏராளமான கலப்பின விதைகள் சந்தைக்குள் நுழைந்தன. அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்கள் இந்த விதைப் பெருக்கும் பணிகளில் ஈடுபட்டன. குறிப்பாக அமெரிக்காவின் துணைத் தலைவராக இருந்த ஃகென்றி ஏ. வாலஸ் என்பவர், நெல்சன் ராக்பெல்லர் மற்றும் சிலர் சேர்ந்து பயோனியர் ஃகைபிரிட் என்ற கும்பணியைத் தொடங்கி மக்காச்சோள விதைகளைச் சந்தைப்படுத்தினர். மூன்றாம் உலக நாடுகளுக்கு பசுமைப் புரட்சித் திட்டத்தை ராக்பெல்லர், ஃபோர்டு நிறுவனங்கள் பரிந்துரைத்ததற்கான காரணம் இப்போது நன்றாக விளங்கியிருக்கும். அரசியல் தலைவர், வணிகக் கம்பணி, ஆராய்ச்சியளார்கள் என்று முக்கூட்டு முயற்சியால் 1940ஆம் ஆண்டளவில் வடஅமெரிக்காவின் 90 விழுக்காடு மக்காச்சோள சாகுபடி இவர்களது விதையாலேதான் நடந்ததாம். வெறும் 7000 அமெரிக்க டாலர்களில் தொடங்கப்பட்ட இந்தக் கம்பணி மான்சாண்டாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது பெரிய விதை வணிக நிறுவனமாக உள்ளது.
1999ஆம் ஆண்டில் டுபாண்ட் என்ற கும்பணி இந்நிறுவனத்தின் 80 விழுக்காட்டுப் பங்கை வாங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியாக ராக்பெல்லர் நிறுவனம் மெக்சிகோ நாட்டிற்கு மக்காச்சோள 'ஆராய்ச்சி'க்கு என்று ஒரு நன்கொடையை வழங்கியது. இதுவே பசுமைப் புரட்சித் திட்டமாகும். உண்மையில் மெக்கிகோவில் கம்யூனிஸ்டுகளின் தலையீடுகளைத் தடுக்கும் பொருட்டும் குறிப்பாக மெக்சிகோவில் இருந்த ஏராளமான ராக்பெல்லர் மற்றும் அமெரிக்கப் பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க இந்த நிதி நல்கை வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மெக்சிகோவின் தலைவராக இருந்த லசாரோ காடர்டினாஸ் பெருமளவில் வேளாண்மைச் சீர்திருத்தங்களைச் செய்து வந்தார். 450 லட்சம் ஏக்கர் நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். இதில் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு 1020 லட்சம் அமெரிக்க டாலர்களாகும். இது வட அமெரிக்க முதலாளிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது. இதைச் சமாளிக்கவே பசுமைப் புரட்சி அறிமுகம் ஆனது.
மெக்சிகோவில் இறக்கப்பட்ட பசுமைப் புரட்சி பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவிலும் 1956ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மாந்தநேய உதவிகள் என்ற அடிப்படையில் இந்த பசுமைப் புரட்சியில் ஃபோர்டு பவுண்டேசன், யு.எஸ்.எய்டு, உலகவங்கி ஆகியோர் இணைந்து கொண்டனர். மெக்சிகோவில் பசுமைப் புரட்சித் திட்டம் மெக்சிகோ வேளாண் திட்டம் (Mexican Agricultural Program - MAP) என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு ஜே. ஜியார்ஜ் ஃகரார் என்பவர் தலைமை வகித்தார். அவருக்கு உதவும் பொருட்டு வந்து சர்ந்தவர்தான் நார்மன் போர்லாக் என்பவர். இவர் டுபாண்ட் கம்பணியில் பணியாற்றியவர். அதாவது இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தயாரித்த 'மன்ஃகட்டன்' (manhattan project) என்ற திட்டச் செயல்பாடில் டூபாண்ட் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதற்காகப் பணியாற்றிவர். புகழ் பெற்ற பியர்ல் துறைமுகச் (pearl harbor) சண்டைக்குப் பின்னர் (ஆங்கிலப் படம் பார்த்தவர்கள் நன்கு அறிவர்) மெக்சிகோ வந்து தனது புகழ் பெற்ற பசுமைப் புரட்சி ஆய்வைத் தொடர்ந்தார். ஏற்கனவே மக்காச்சோள விதை மாற்றப்பட்டு வந்துவிட்டது. அடுத்ததாக கோதுமை விதை போர்லாக்கின் பணியால் வெளியானது.
குட்டை வகைக் கோதுமை விதைகள் லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியானது. இதற்கிடையில் நெல்லில் பலவகையான ஆராய்ச்சிகளை இதே நிறுவனங்கள் முடுக்கிவிட்டன. குறிப்பாக பிலிப்பைன்சுக்கு தாராளமாக நிதி உதவி செய்து தேசங்களிடை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தை (International Rice Research Institute - IRRI) தொடங்கின. இந்தச் சூழலில் நார்மன் போர்லாக் 1962ஆம் ஆண்டு மே மாதம் மா.சா. சுவாமிநாதனால் இந்தியாவிற்கு ப்பி.பி. பால் மூலமாக அழைக்கப்படுகிறார். சுவாமிநாதன் அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural Research Institute) கோதுமை ஆராய்ச்சித் திட்டத்திற்கான உறுப்பினராக இருந்தார். இதே காலகட்டத்தில்தான் ராக்பெல்லர் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு தேசங்களிடை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ராபர்ட் சாண்ட்லர் அமர்த்தப்படுகிறார். இவர் இந்தியாவிற்கு வந்து நெல் ஆராய்ச்சிகளையும், இந்திய நெல் வகைகளையும் பற்றி தெரிந்து கொள்கிறார். இவரது வருகையின் போது கட்டாக்கில் உள்ள நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Rice Research Institute CRRI ) தலைவராக ரிச்சாரியா என்ற அறிஞர் இருந்தார். இவர் இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான நெல் இனங்களைத் திரட்டி வைத்தவர். நெல் வகைகளைத் திரட்டுவதையே தனது தலையாய பணியாக அவர் கொண்டிருந்தார். ஏறத்தாழ 19000 வகையான நெல்லினங்களை இவர் ஆவணப்படுத்தியிருந்தார் (பார்க்க : CRUSHED, BUT NOT DEFEATED : An interview with Dr Richharia. Illustrated Weekly of India. March 23, 1986). அத்துடன் இரண்டு லட்சம் நெல்லினங்கள் இந்தியா முழுமைக்கும் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
ராபர்ட் சாண்ட்லர் கட்டாக் வந்தபோது தாய்வான் வகை நெல்லான டி.என்.1 (Taichung Native 1 (TN 1) என்ற வகையை அவருக்கு ரிச்சார்யா காட்டினார். அதன் மீது சாண்ட்லருக்கு தீராத காதல் வந்துவிட்டது. இது நடந்து சிறிது நாட்களுக்குப் பின்னர் டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு ரிச்சாரியா செல்கிறார். அப்போது அரிசி ஆராய்ச்சித் திட்டக் குழுவிற்கு அவர்தான் தலைவர். எனவே அவர்தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தலைவராக இருந்து டாக்டர். ப்பி.பி. பால் அந்தக் கூட்டத்திற்கு ராக்பெல்லர் நிறுவனத்தைச் சார்ந்த கம்மின்ஸ் என்பவரை அனுமதிக்க வேண்டுகிறார். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சட்டப்படி முடியாதவர். ஆனால் கேட்டுக்கொள்ளப்படுகிறார். அப்போது பால் கூறியதாவது, 'அவர்கள் 'அந்த' விதைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டார்கள். சாண்ட்லர் பிலிப்பைன்சில் உள்ள தேசங்களிடை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவற்றைக் கொடுத்துவிட்டார்.' இது ரிச்சாரியாவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த விதைகள் மிகவும் அதிகமாக நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக் கூடியது என்று கூறிய பிறகும் அவர் கூற்று யார் காதிலும் விழாமலேயே போய்விட்டது.
சாண்ட்லர் அப்போது வேளாண் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தைச் சந்தித்து பேசிய பிறகு ரிச்சாரியாவை கட்டாய ஓய்வில் போகுமாறு சி.சுப்பிரமணியம் பணித்ததும், அதன் பின்னர் ரிச்சாரியாவின் போராட்டமும் இந்திய வேளாண்மை வரலாற்றில் மிக மோசமான சோகக் கதை. இதன் பின்னர் மளமளவென்று 'வீரிய விதைகள்' அரங்கேறின. உண்மையில் இவை 'சோதா' விதைகள். வறட்சியைத் தாங்க முடியாது, நோய் எதிர்ப்பத் திறன் கிடையாது, ஊட்டங்கள் குறைவு. ஆனால் அவை வீரிய விதைகள் என்று அறிமுகம் செய்யப்பட்டன. இந்தக் கலப்பின விதைகள் அதிக அளவு வேதி உரங்களையும் அதாவது மூன்று முதல் நான்கு மடங்கு வேதி உரத்தையும், அதிக நீரையும் விரும்புபவை. அத்துடன் இந்தப் பயிர்களை மிக அதிகமாக பூச்சிகள் தாக்குகின்றன. இன்கிரிட் பால்மர் என்பவர் உயர்விளைச்சல் வகை விதைகளை மிகவும் கண்டிக்கிறார். இவை அதிக உரத்தையும், அதிக நீரையும் எடுத்துக்கொள்ளும் வகையில் உயர்விளைச்சல் விதைகள் உருவாக்கப்பட்டதை விளக்கினார். இதன் பின்னணியில் அதிமாக அளவு வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை விற்பதற்கான சந்தை உருவாக்கப்பட்டது. இவை இல்லாவிடில் நாட்டின விதைகளைவிட குறைவான விளைச்சலையே உயர்விளைச்சல் இனங்கள் தர முடியும். அதுமட்டுமல்லாது நாட்டினங்கள் உழவர்களின் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கால்களைக் கொடுக்கக் கூடியவை. குட்டை வகை உயர்விளைச்சல் விதைகள் வைக்கோலை போதிய அளவு கொடுப்பதில்லை. இதனால் கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உயர்விளச்ல் விதைகளால் இந்தியாவின் வேதியுர இறக்குமதி அதிகமாகிக்கொண்டேபோனது. உலகில் உள்ள வேதியரப் பயன்பாட்டு நாடுகளில் அமெரிக்கா, ருசியா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. ரிச்சாரியா அவர்களின் ஆய்வுப்படி உள்நாட்டு விதைகளில் கூட மிக அதிக விளைச்சல் தரும் இனங்களும் இருந்தன. குறிப்பாக மக்டோ (Makto of Bastar) என்ற வகை எக்டருக்கு 3700 கிலோ முதல் 4700 கிலோவரை தருவாக இருந்துள்ளது. ராயபூர் பகுதியில் கின்னார் நெல் வகை பயிரிடும் உழவர் எக்டேருக்கு 4400 கிலோ விளைச்சலை எடுத்துள்ளார். இவை எல்லாம் மரபு இனங்கள் கொடுத்த விளைச்சல். இப்பாது இவ்வளவு உரங்களைக் கொட்டியும் இந்தியாவின் சராசரி நெல் விளைச்சல் எவ்வளவு தெரியுமா? வெறும் எக்டேருக்கு 1930 கிலா மட்டுமே. இந்த உயர் விளைச்சல் விதைகளைத் திணித்தவர்கள் நம்மிடம் இருந்த மரபு இன விதைகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விளைவு பல்லாயிரக்கணக்கான நெல்லினங்கள் இன்று காணாமல் போய்விட்டன. உழவர்களும் உயர்விளைச்சல் விதைகளுக்குக் கொடுத்த ஊக்கத்தால் தமது கையில் இருந்த விதை நெல்லை விட்டுவிட்டனர். இந்த மரபினங்கள் இன்று காலநிலை மாற்றம் என்று சொல்கிறார்களே அதற்கு ஈடுகொடுக்கும் திறன் மிக்க விதைகளை வழங்கக் கூடியவை. ஆனால் இவை யாவும் இன்று மறைந்துவருகின்றன, அத்துடன் இப்போது பயன்பாட்டில் உள்ள விதையினங்கள் யாவும் பன்னாட்டுக் கம்பணிகளின் கைகளுக்குள் சென்று அடக்கமாகின்றன.     
ஐரோப்பிய நாடுகளில் 1960களிலும் அமெரிக்காவில் 1970களிலும் அறிமுகம் செய்யப்பட்ட விதைச் சட்டங்கள் சிறுகுறு உழவர்களின் கைகளில் இருந்த விதைகளை கம்பணிகளின் கைகளுக்கு மாற்றின. இந்தியாவில் அறிமுகம் செய்து பாதி நிறைவேறிய நிலையில் உள்ள விதைச்சட்டம் முற்றிலும் உழவர்களிடமிருந்து விதையை பறிக்க உள்ளது. இப்போது கூட மறைமுகமான முறையில் விதைகள் உழவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. உலகம் முழுமையும் விதைச் சந்தைகளை விரல்விட்டு எண்ணக்கூடிய கம்பணிகளே கைகளில் வைத்துள்ளன. இவர்கள் காப்புரிமைச் சட்டங்களைப் (patent rights) பயன்படுத்தி அறிவுச்சொத்துரிமை (intellectual property rights) என்ற பெயரில் பிறர் யாரும் விதைகளைப் பெருக்கவோ உரிமைத் தொகை கொடுக்காமல் பயன்படுத்தவோ முடியாத வகையில் வைத்துள்ளனர். தொழில்மய நாடுகளின் 10 முதன்மை நிறுவனங்கள் உலகின் 55 விழுக்காடு விதைச் சந்தையைக் கையில் வைத்துள்ளன.
விதைக் கும்பணி 2006 விதை விற்பனை அமெரிக்க டாலர்களில் 2011 விதை விற்பனை அமெரிக்க டாலர்களில் 1. மான்சண்டோ (அமெ) $4,028 $10.5 தீவீறீறீவீஷீஸீ 2. டூபாண்ட் (அமெ) $2,781 $38 தீவீறீறீவீஷீஸீ 3. சின்ஜெண்டா (சுவிஸ்) $1,743 $1 தீவீறீறீவீஷீஸீ 4. லிமாகிரைன் குழுமம் (பிரெ) $1,035 €1,555 னீவீறீறீவீஷீஸீ (ஈரோ) 5. லேண்ட் ஓ லேக்ஸ் (அமெ) $756 $12.8 தீவீறீறீவீஷீஸீ 6. கேடபிள்யுஎஸ் ஏஜி (ஜெர்) $615 €855.4 னீவீறீறீவீஷீஸீ (ஈரோ) 7. பேயர் கிராப் சயன்ஸ் (ஜெர்) $430 € 6,830 னீவீறீறீவீஷீஸீ (ஈரோ) 8. டெல்டா & பைன் லேண்ட் (அமெ) $418 இதை மான்சாண்டோ வாங்கிவிட்டது 9. சகாதா (சப்பான்) $401 $466.12 னீவீறீறீவீஷீஸீ ஷிஷீuக்ஷீநீமீ: ணிஜிசி நிக்ஷீஷீuஜீ ணீஸீபீ ஷ்மீதீsவீtமீs
இந்த விதைகள் எல்லாம் ஏழை நாடுகள் என்று சொல்லப்படும் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. இவை ஐ.நா.உதவியுடன் விதை சேமிப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்தவை. கடந்த 1970களில் மட்டும் (இதுதான் பசுமைப் புரட்சிக்காலம்) 54 விதைச் சேர்ப்பு நிலையங்கள் செயல்பட்டன. இவற்றில் 15 மிகப் பெரியவை. இந்த விதைகளையும் முளை ஊன்மங்களையும் (germ plasms) பாதுகாக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஏழை நாடுகளிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே தங்களது விதை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. பன்னாட்டுக் கும்பணிகள் விதைகளை தமது தேவைக்காக ஆராய்ச்சி என்ற பெயரில் பறித்துக் கொள்கின்றன.
உலகிலேயே பெரியதாக இருந்த வாவிலோவ் விதைக் களஞ்சியம் 1,77,680 மரபின விதைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் விட அமெரிக்கா கூடுதலாகச் சேர்த்துவிட்டது. இந்நாட்டின் இரண்டு பெரிய விதைக் களஞ்சியங்களிலும் சேர்த்து 3,87,000 மரபினங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, வளர்ந்த நாடுகளிடம் உள்ள விதைகளின் அளவு 45.3 விழுக்காடு. வளரும் ஆசிய நாடுகளில் 21.1 விழுக்காடும், ஆப்பிரிக்காவில் 6.2 விழுக்காடும் இலத்தீன் அமெரிக்க, கீழை நாடுகளில் 16.9 விழுக்காடும் விதைகள் உள்ளன.
எல்லா நாட்டிற்கும் பொதுவான விதைகள் தேசங்களுக்கிடை வேளாண் ஆராய்ச்சி அறிவுரைஞக் குழுமத்திடம் 10.4 விழுக்காடு விதை உள்ளது. இது பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த விதைகளில், மூலமான தவசங்களும் பயறு வகைகளுமே மிகுதியாக உள்ளன. அதாவது மொத்த சேமிப்பில் 48 விழுக்காடு நெல், கோதுமை, போன்ற தவசங்களும் 16 விழுக்காடு அவரை, மொச்சை போன்ற பயறு வகைகளும் 12 விழுக்காடு காய்கறி, பழ விதைகளும் 10 விழுக்காடு தீவனப்பயிர்களும் எஞ்சியவை பிற வகைப் பயிர்களுமாகும். உயர்விளைச்சல் விதைகளின் தோல்வி உலகநாடுகள் யாவற்றிலும் அப்பட்டமாக வெளியானதன் விளைவாக அடுத்த கட்டமாக வணிகத்தை விரிவாக்குவதற்கு மரபீனி மாற்ற விதைகளை சந்தையில் புழங்கவிட்டுள்ளனர். இவைதாம் மரபீனி மாற்ற மலட்டு விதைகள். உலகநாடுகள் சேமித்த மரபின வளங்களின் தன்மையாலும் பன்னாட்டுக் கும்பணிகளிடம் உள்ள நுட்பவியல் திறனாலும் மென்மேலும் புதிய விதைகளை உருவாக்குகின்றனர். அதற்கு இப்போது உயிரி நுட்பவியல் என்ற துறை பயன்படுகிறது. இதில் மரபீனிப் பொறியியல் என்ற பிரிவு உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஓர் உயிரினத்தின் மரபீனியை எடுத்து மற்றொரு உயிரினத்தில் பொருத்தி குறிப்பிட்ட பண்பை மட்டுமே உருவாக்குகின்றனர். பி.ட்டி பருத்தி என்று அழைக்கப்படும் பாசில்லஸ் துருஞ்சியன்சிஸ் என்ற குச்சிலத்தின் (Bacteria) மரபீனியில் இருந்து பெறப்பட்ட பருத்தி இப்படிப்பட்டதுதான். மரபீனிப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட விதைகள் விற்பனைக்காகக் காப்புரிமை பெற்றுவிட்டனர். விதையை மட்டும் இந்த கும்பணிகள் சந்தைப்படுத்தவில்லை, விதையுடன் பூச்சிக்கொல்லிகளையும், அதனால் உருவாகும் நோய்களுக்கான மருந்துகளையும் விற்பனை செய்கின்றன. மான்சாண்டோ விதைகள், பூச்சிக்கொல்லிகள் களைக்கொல்லிகளை விற்பனை செய்கிறது. சிபா கியாஜி, சின்சென்டா, நொவார்டிஸ் என்ற முக்கூட்டு நிறுவனம் விதை, பூச்சிக்கொல்லி, மருந்துகள் ஆகியவற்றை விற்கின்றது. ஆக உயர்விளைச்சல் விதைகள் அதற்கு கட்டாயம் தேவைப்படும் வேதிஉரங்கள் அதன் பயனாக வரும் பூச்சி, நோய்களைத் தடுப்பது என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகள் இந்தப் பூச்சிக்கொல்லிகளால் வரும் உடல்நலக் குறைவைத் தடுப்பதற்காக மருந்துகள்! இப்படியாக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் இவர்களை என்னவென்பது? இதற்குத் துணைபோகும் நமது ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் என்ன செய்வது?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கும்பணி மூலம் பெறப்பட்ட மரபீனியைக் கொண்டு மரபீனி மாற்றக் கத்தரிச் செடியுடன் பப்பாளி, நெல், மக்காச் சோளம் என்று பல்வேறு பயிர்களில் தனது ஆராய்ச்சியை செய்து வருகிறது. இந்திய அமெரிக்க அறிவு முயற்பாடு (Indo-US Knowledge Initiative) இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு முழுமையாக ஊக்கம் அளிக்கின்றது. இதன் விளைவாக இந்திய விதைச் சந்தையை முற்றிலும் பன்னாட்டுக் கும்பணிகள் கைப்பற்றிவிடும். விதைகளைக் காப்பதற்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மரபீனி மாற்ற விதைகளுக்கான போராட்டம் பரவலாக உழவர்கள், பொதுமக்கள் என்று விரிவடைந்து வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு பல்வேறு முறைகளில் தடை விதித்துள்ளன. ஆஸ்திரியாவும், ஃகங்கேரியும் முற்றிலும் தடை கொண்டு வந்துள்ளன. ஆனால் பன்னாட்டுக் கும்பணிகள் தமது பணவலுவால் பல நாடுகளில் தடைகளை உடைத்து நுழைந்து வருகின்றன. கொரியா, இன்தோனேசியா, கிழக்குத் தைமூர், அமெரிக்கா, காங்கோ, ஸ்பெயின், சிலி, கனடா, குரேசியா, வெனிசுலா போன்ற நாடுகளில் சின்சென்டா என்ற சுவிட்சர்வாந்து கும்பணியை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உலக வணிக நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் மென்மேலும் எழை உழவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதை எதிர்த்து லீ கியுங் ஃகே (Lee Kyang Hae) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார். விதைகள் உழவர்களின் கையை விட்டுப் போவது என்பது நாட்டின் தற்சார்பு அழிவதற்கு வழிகோலும்.
உழவர்களின் முதல் ஆதாரமான முதன்மை இடுபாருளான விதை அவர்களின் கைகளைவிட்டு இப்படித்தான் பறிபோனது.

இயற்கை வழி நெல் சாகுபடி


இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ள பல்வேறு பண்ணையாளர்கள் இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்முறைகளை இப்போது பார்ப்போம்.
நாற்றங்கால் தயாரிப்பு
தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மட்கி உரமாகும் வாகை, வேம்பு, எருக்கு, கிளிரிசிடியா, நெய்வேலிக்காட்டாமணக்கு, புங்கன், ஊமத்தை, எருக்கு போன்ற இலை தழைகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இந்த தழைகள் விரைவாக மட்க அசஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்களை 200 கிராம் என்ற அளவில் எடுத்து மக்கிய குப்பையுடன் கலந்து நாற்றங்காலில் கடைசி உழவின்போது இட வேண்டும். இதனால் தழைகள் விரைவில் மட்கிவிடும்.
விதைநெல் நேர்த்தி
தேவையான நீரில் உப்பைப் போட்டு அடர்த்தியான கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு நல்ல முட்டையை எடுத்து உப்புக் கரைசலில் போட்டுப் பார்த்தால் அது மிதக்கும். இந்த அளவு கரைசலில் விதை நெல்லைப் போட வேண்டும். பதர்களும் சண்டு நெல்லும் மிதந்துவிடும். அவை சரியாக முளைக்காது. அவற்றை நீக்கிவிட வேண்டும். மூழ்கிய நெல் நல்ல முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அசோஸ்பைரில்லம் முதலிய உயிர்உரங்களைக் போதிய நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 24 மணி நேரம் விதை நெல்லை ஊற வைக்க வேண்டும். 2 விழுக்காடு (2%) ஆவூட்டமும் 200 கிராம் சூடோமோனஸ் புளோரோசன்ஸ் சேர்த்த கரைசலில் 15 நிமிடங்கள் நெல்லை ஊறவைத்து எடுக்க வேண்டும். பின்னர் ஈரச் சாக்கில் நெல்லைப் போட்டுக் கட்டிய மூட்டையைச் சுற்றி ஈரச்சாக்கைக் கொண்டு மூடிவிடவும். அடுத்த 24 மணி நேரத்தில் நெல் முளைவிடும். பின்னர் நாற்றங்காலில் நெல்லை விதைக்க வேண்டும்.
நாற்றங்காலில் தெற்கு வடக்காகவோ, அல்லது கிழக்கு மேற்காகவோ நன்கு நீர் வடிக்க ஏதுவாக ஒரு அடி அகலம் வைத்து கயிறு பயன்படுத்தி கண்டி அமைக்கவும். நாற்றங்காலில் சீராக நெல் பரவ இது உதவியாக இருக்கும். தண்ணீர் வடிக்கவும் வடிகாலாக இந்தக் கண்டி பயன்படும்.
நாற்றங்கால் பயிர் பராமரிப்பு
நெல் பயிர் சீராக வளர விதைத்த 10 முதல் 15 நாட்களில் கீழ்க்கண்ட கரைசலை தயாரித்து நாற்றங்காலுக்கு நீர் பாயச்சும்போது சீராகக் கலந்துவிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை 4 முதல் 7 நாள்
இடைவெளியில் இக்கரைசலைப் பயன்படுத்தலாம்.
பின்னர் 5 கிலோ மண்புழுக் கழிவு உரம் அல்லது சாணியுடன் 20 லிட்டர் நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் ஆவூட்டம் 200 மிலி முதல் 400 மிலி அல்லது தேங்காய்பால் மோர் கரைசல் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் அத்துடன் 300 மிலி மீன் அமினோ அமிலமும் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 50 கிராமும் சேர்த்து 3 நாட்கள் ஊறல் போட்ட பின்னர் தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும்.
நடவு வயல்
அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் கோழி உரம் மற்றும் அசோஸ் பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒவ்வொன்றும் ஒரு கிலோவீதம் நன்கு மக்கிய குப்பையில் கலந்து பயன்படுத்தவும்.
நடவு செய்த பின்னர் 30 முதல் 40 நாளில் மேலுரமாக 500 முதல் 1000 கிலோ பயிரின் வயர்ச்சியைப் பொருத்து கோழி உரம் பயன்படுத்த வேண்டும். வேறு தொழு உரங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்ட நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்டது தவிர நடவு வயலில் முன்கூட்டிய பலவகை தானியங்களை ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ என்ற அளவில் விதைத்து 30 முதல் 60 நாட்களில் இதனை மடக்கி உழுது நெல் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழு எரு அளவை பாதியாகக் குறைக்கலாம். வயதான நாளுள்ள நெல் வகைகளுக்கு தூர்கட்டும் திறன் குறைவாக இருக்கும். இதனை சரிக்கட்ட நடவு சமயம் ஒரு குத்துக்கு 4 முதல் 6 நாற்றுக்கள் பயன்படுத்தி நெருக்கி நடவு செய்ய வேண்டும்.
பல்வகைப் பயிர் வளர்ப்பு
இயற்கையான முறையில் ஊட்டங்களை நிறைவு செய்வதற்கான முதல்படி பல்வகைப் பயிர் வளர்ப்பாகும். இதன்படி நிலத்தை 200 நாட்களில் வளம் ஏற்றிவிட முடியும். வேதி உப்புக்களால் வளமிழந்த நிலத்தையும் வளமூட்ட முடியும்.
  1. தவசம் (தானியம்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. சோளம் 1 கிலோ, கம்பு 1 கிலோ, தினை 1 கிலோ, சாமை 1 கிலோ)
  2. பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. உளுந்து 1 கிலோ, பாசிப்பயறு 1 கிலோ, தட்டைப் பயறு 1 கிலோ, கொண்டைக் கடலை 1 கிலோ)
  3. எண்ணெய் வித்துகள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. எள் 1 கிலோ, நிலக்கடலை 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ, ஆமணக்கு 2 கிலோ)
  4. பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயறு 2 கிலோ, கொள்ளு 1 கிலோ)
  5. மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. கடுகு 1 கிலோ, வெந்தயம் 1 கிலோ, சீரகம் 1 கிலோ, கொத்தமல்லி 1 கிலோ)
மேலே கூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 50-60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச்சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு இது போதும். இருநூறு நாட்களில் நிலம் வளமேறிவிடும். இம்முறையை தபோல்கர் என்ற மராட்டிய அறிஞர் சிறப்பாகச் செய்து காட்டினார். இதன் மூலம் மண்ணில் இருந்து எடுப்பதை மண்ணிற்கே பலமடங்காக்கி உயிர்க்கூளமாகக் கொடுக்கிறோம்.
பயிர் பராமரிப்பு
பயிர் பராமரிப்பிற்கும் ஊட்டத்திற்கும் எந்தவித விலையுயர்ந்த‌ வெளி இடுபொருட்களும் தேவை இல்லை. நம் கொல்லையிலேயெ கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில எளிதான கரைசல்கள் தயாரித்து நம் பயிரை மிக நேர்த்தியாக வளர்க்கலாம். (எழுதுவதைப் படித்து மலைக்க வேண்டாம்; சாம்பார் செய்வது எப்படி என்று எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு வரும்! ஆனால் நம் தாய்மார்கள் தினமும் சாம்பார், குழம்பு என்று சமைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்! மேலும், இயற்கைக்கு மாறினால் போகத்துக்கு போகம் , மண்ணின் வளம் கூடிக் கொண்டே போகும் எனவே நாமும் ஒவ்வொரு சாகுபடிக்கும் நம் உழைப்பைக் குறாஇத்துக் கொண்டே போகலாம் - ஆசிரியர்).
அமுதக் கரைசல்
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவு செய்து 25 முதல் 30 ஆம் நாள் முதல் பின்வரும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். அமுதக் கரைசல் என்பது உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இதைத் தயார் செய்வதன் மூலம் 24 மணி நேரத்தில் நமது கையில் ஒரு வளர்ச்சி ஊக்கி கிடைக்கும். இதற்குச் செய்ய வேண்டியது மிகச் சிறிய அளவு வேலையே. முதலில் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 1 கிலோ மாட்டுச் சாணம் இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்கவேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்து விட்டதா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10%) சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.
[அடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் பயன்படுத்தலாம்] .
இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலை வழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது. இதைப் பயன்படுத்திவிட்டு அடுத்ததாக 7 முதல் 10 நாள் இடைவெளியில் பயிர் வளர்ச்சி ஊக்கியான ஆவூட்டத்தை தெளிக்க வேண்டும்.
ஆவூட்டம்
ஆவூட்டம் என்பது பசுவின் (ஆவின்) ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை.
  1. பசுமாட்டுச் சாணம் 5 கிலோ
  2. மாட்டுச் சிறுநீர் 5 லிட்ர்
  3. 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் 2 லிட்டர்
  4. பால் 2 லிட்டர்
  5. நெய் 500 மி.லி. இவற்றுடன்
  6. பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சக்கரை (வெள்ளைச் சீனி சேர்க்கக் கூடாது)1 கிலோ
  7. அரசம் பழம் 500 கிராம்- 1கிலோ
  8. இளநீர் 3 முதல் 5 எண்ணம்
  9. வாழைப்பழம் 10 முதல் 15 எண்ணம் ஆகியவை தேவை
சாணத்தையும், உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து 4 நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறுநீர், பனங்கருப்பட்டியை தேவையான நீரைச் சேர்த்து 5 லிட்டர் ஆக்கிக்கொண்டு மண்பானையில் ஊறவிட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு நாள் தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16 ஆம் நாள் இதுவரை (தனியாக) புளித்த தயிரையும், பாலையும் இத்துடன் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் 7 நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் 3 முறை கலக்கிவர வேண்டும்.
இருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் உங்கள் முன்னால் மிகச் சிறந்த மணத்துடன் இருக்கும். இதை 35 முதல் 50 லிட்டர் நீரில் 1 லிட்டர் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்து விடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. (கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும்). பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.
அரப்புமோர்க் கரைசல்
இதற்கு அடுத்தபடியாக மூன்றவதாக அரப்புமோர்க் கரைசல் தெளிக்க வேண்டும் இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே. அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 1 முதல் 2 கிலோ பறித்து வந்து,
தேவையான நீர் சேர்த்து, நன்கு அரைக்கவும். அதில் இருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும். இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்குப் பத்துலிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கின்றது. பூச்சிகளை விரட்டுகிறது. பூசண நோயைத் தாங்கி வளர்கிறது. இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.
தேமோர் கரைசல்
நெல் பயிரில் பூட்டை வெளிவரும் நேரத்தில் (ஙிஷீஷீt றீமீணீயீ stணீரீமீ) நெற்பயிர்கள் நன்கு வாளிப்பாக வளர்ந்து வருவதற்கும் பூக்கும் திறன் அதிகரித்து நெல்மணிகள் திரட்சி அடையவும் கீழ்க்கண்ட தேமோர் கரைசல் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும். இதற்கடுத்த வளர்ச்சி ஊக்கி தேமோர் கரைசல். தேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர். நன்கு புளித்த மோர் 5 லிட்டர், 10 தேங்காய்களை உடைத்து எடுக்கவும். தேங்காயிலுள்ள தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை துருவி எடுத்து தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி பால் எடுக்கவும். இத்துடன் முன்பு எடுத்து வைத்த தேங்காய் நீரையும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவை 5 லிட்டர் வருமாறு இருக்க வேண்டும். கொஞ்சம் குறைவாக இருந்தால் 5 லிட்டர் வரும் வகையில் நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். கலவை நன்கு நொதித்துப் புளித்து வரும். இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும், பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைத் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்.
சரி பயிருக்கு ஊட்டமும், ஊக்கமும் குடுத்து வளர்த்தாயிற்று; இனி அதை பூச்சி மற்றும் நோய்களில் இருந்து காப்பாற்றுவது எப்படி? இதற்கும் எளிய இயற்கை முறைகள் உள்ளன. மனிதருக்கு மூலிகை மருத்துவம் பார்ப்பது போல் பயிர்களுக்கும் பார்க்கலாம். எப்படி என்று அடுத்த இதழில் காண்போம்.
பூச்சிக கட்டுப்பாடு பூச்சிகளைக் கட்டுப்படுத்த பின்வரும் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும். இவை சாதாரணமாக நமது வயல்வெளிகளில் எங்கும் கிடைக்கும்.
1.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் - ஆடுதொடா, நொச்சிபோன்றவை.
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.
3.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் - வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.
4. உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் - காட்டாமணக்கு, போன்றவை.
5. கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் - கடுக்காய், வேப்பங்காய், எட்டிக்காய் இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.
இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறி கின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன.இதனால் முட்டை பொரிப்பது குறைந்து விடுகிறது, இனப் பெருக்கம் தடைப்பட்டுவிடுகிறது, எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது, தப்பியவை ஊனமடைகின்றன, இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.
மாதிரி அளவு சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை எருக்கு அல்லது ஊமத்தை நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை வேம்பு அல்லது புங்கன் உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடா மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை (கடுக்காய் 1 கிலோ, வசம்பு 200 கிராம், வேப்பங்காய் 2 முதல் 3 கிலோ, எட்டிக்காய் 500 கிராம்) எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றைக் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம். ஊறல் முறை இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். இத்துடன் 1 லிட்டர் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.
வேகல் முறை இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 20 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் 20 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்கி சாறை வடிகட்டி எடுக்க வேண்டும். இதேபோல மொத்தம் 5 முறை வடிகட்டி எடுக்கலாம். இதன் மூலம் 100 லிட்டர் சாறு கிடைக்கும். சாறு ஆறிய பின்னர் ஒரு லிட்டர் மஞ்சள்தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இச்சாற்றைக் கைத் தெளிப்பால் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
நோய்க் கட்டுப்பாடு இலைப் புள்ளி நோய் மற்றும் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பின்வரும் தழைக் கரைசல் பயன்படும். நுண்ணுயிர் இலைக்கருகல் இந்நோயும் பரவலாக காணப்படும் ஒன்று இதற்கு, 1. சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ 2. இஞ்சி - 200 கிராம். 3. புதினா அல்லது சவுக்கு இவை-2 கிலோ. இவற்றை முன்னர் கூறியபடி வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள்தூள் 1 லிட்டர், சூடோமோனஸ் புளோரசன்ஸ் 500 கிராம் 1 கிலோ சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்துக் தெளிக்க வேண்டும். இதனால் நோய் கட்டுப்படும்.
இலைப்பேன் செம்பழுப்பு நிறமுடைய இலைப் பேன்களும், அதன் குஞ்சுகளும் இலையின் அடிப்புறத்தில் தங்கி இலைச் சாற்றினை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் இலைகளின் ஓரங்கள் சுருண்டு வாடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட கரைசல் பயன்படுகிறது. உண்ணிச் செடி, வேம்பு, நொச்சி, புகையிலை, வசம்பு, பூண்டு, சீதா, பீச்சங்கு, வில்லவம் சோற்றுக்கற்றாழை, பிரண்டை இவற்றில் ஏதாவது 4 இலைவகைகளை துண்டு துண்டாக நறுக்கி அத்துடன் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து ஏற்கனவே சொன்ன ஊறல் முறையில் ஊறவைத்து 7 நாட்கள் கழித்து வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்பேன் தாக்குதலை வைத்து 7-10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். வேகல் முறையிலும் தயாரித்துத் தெளிக்கலாம். பொதுவாக வேகல்முறையில் உடனடியாக நமக்கு கரைசல் கிடைக்கின்றது. ஊறல்முறையில் சிறிது காத்திருக்க வேண்டும். புழுத்தாக்குதல் புழுத்தாக்குதல் அல்லது இலைத்துளைப்பான் அல்லது தண்டுதுளைப்பான் சேதத்தில் இருந்து பாதுகாக்க பின்வரும் கரைசல் தேவைப்படுகிறது. சீதா விதை - 100 கிராம் பீச்சங்கு - 1 கிலோ ஆடாதொடா - 500 கிராம் சிறியா நங்கை - 500 கிராம் தங்கரளி காய்/பழம் - 1 கிலோ நொச்சி - 1 கிலோ சோற்றுக் கற்றாழை - 1 கிலோ இவற்றைப் பசையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பத்து லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூள் 1கிலோ கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மேலே சொன்ன பசையுடன் புகையிலைச் சாறையும் சேர்த்து 2 முதல் 3 நாள் ஊறல் போட வேண்டும். புளிப்புச் சுவை வரும். மஞ்சள் தூள் 1 கிலோவுடன் பசைபோல ஆக்கத் தேவையான அளவு களிமண் மற்றும் சாணம் இவற்றை மூன்று நாள் ஊறிய கலவையுடன் சேர்த்து பசையாக ஆக்கவும். 1 கிலோ பசையை எடுத்து 100 முதல் 125 லிட்டர் நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்கவும்.
இலைப்புள்ளி நோய் இந்நோயின் தொடக்கத்தில் இலைகளின் மேல்புறத்தில் நீண்ட கண் வடிவப் புள்ளிகள் தென்படும். இப்புள்ளிகளின் நடுவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோய் பெரிதாகும்போது பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை 3 முதல் 5 கிலோ காகிதப்பூ இலை 3 முதல் 5 கிலோ உண்ணிச் செடி இலை 3 முதல் 5 கிலோ சீதா இலை 3 முதல் 5 கிலோ பப்பாளி இலை 3 முதல் 5 கிலோ இவற்றில் ஏதாவது இரண்டு வகையை மட்டும் எடுத்து வேகல்முறை அல்லது ஊறல் முறையில் கரைசலை தயார் செய்து பயன்படுத்தலாம்.
பாசனமுறை ஒவ்வொரு வயலிலும் தண்ணீர் நுழையும் இடத்தில் இரண்டடி நீள, அகல, ஆழ குழி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு மக்கும் வேம்பு, எருக்கு, ஊமத்தை, தங்கரளி, நெய்வேலிக் காட்டாமணக்கு போன்றவற்றின் இலைகளைக் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் கல் அடுக்கி வைத்து நீர் பாய்ச்சி வர வேண்டும். இந்தக் கசாயம் நீரில் சீராகப் பரவி வளர்ச்சிக்கு உதவும். நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நூற்புழுவுக்கு எதிரான நுண்ணுயிர்கள் இதில் வாழ வாய்ப்புக் கிடைக்கும். நெற்பயிரின் தூரில் தங்கி சேதப்படுத்தும் புகையான் தாக்குதலையும் கட்டுப்படுத்தும். நெற்பயிரின் சீரான வளர்ச்சி மற்றும் தூர்க் கட்டும் திறன் அதிகரிக்க வாளிப்பான நெற்குலைகள் உருவாக, திரட்சியான நெல் மணிகள் உருவாக கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம். சாண எரிவாயுக் கலனில் வெளிவரும் சாணக்கரைசல் 75 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீர் 75 லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். எரிகலன் இல்லாதவர்கள் 50 கிலோ சாணியை 100 லிட்டர் நீருடன் கலந்து சாணக் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இத்துடன் முன்னர் சொன்ன வளர்ச்சி ஊக்கிகளில் தெளிப்பதற்கு தேவையான ஒன்றைக் கலந்து 3 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். பின்னர் அவற்றை பாசன நீருடன் கீழ்க்கண்ட அளவில் கலந்து விட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 - 80 லிட்டர் ஆவூட்டம் 5 - 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 - 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 - 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.
ஒட்டுண்ணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துதோடு மட்டுமல்லாமல் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த ‘ஜப்பானிகம்’ என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ‘பிரக்கானிட்’ என்ற குளவியை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் மிக அதிகமாக இருப்பின் மூலிகைப் பூச்சிவிரட்டியுடன் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ பவேரியா ப்ராங்கியார்ட்டி அல்லது பவேரியா பாஸ்ஸியானா கலந்து தெளிக்கலாம். எப்பொழுதும் ஒரு வளர்ச்சி ஊக்கி-ஒரு பூச்சிவிரட்டிச் கரைசல்-சூடோமோனஸ் என்று மாற்றி மாற்றி நெல்லுக்கு உணவைக் கொடுத்துவர வேண்டும். இவ்வாறு சீராக இயற்கை வழி வேளாண்மையில் நெல் அறுவடை செய்யலாம்.

கலக்கும் கறியாடு வளர்ப்பு



 ''ஆடு, மாடுகளை ஒரு காலத்தில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். தற்போது, மேய்ச்சல் நிலங்கள் அழிந்து கொண்டே வருவதால், கொட்டில் முறையில் வளர்க்கிறார்கள். கிட்டத்தட்ட கொட்டில் முறையைத்தான், 'நவீன முறை’ என்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. உதாரணமாக, கொட்டில் முறையில் 100 ஆடுகள் வளர்ப்பதாக இருந்தால், குறைந்தது மூன்றரை ஏக்கர் நிலம் வேண்டும். அப்போதுதான் போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில் 500 ஆடுகள் வரை வளர்க்கும் அதிநவீன 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிற தொழில்நுட்பம் சில நாடுகளில் அறிமுகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில்கூட ஒன்றிரண்டு பண்ணையாளர்கள் அந்த முறைக்கு மாறியுள்ளார்கள்.

 குறைந்த இடத்தில் அதிக தீவனம்!   

 அது என்ன 'ஹைட்ரோபோனிக்’ முறை..? வேறொன்றும் இல்லை. கிராமங்களில் திருவிழா சமயங்களில் நவதானியங்களைப் போட்டு முளைப்பாரி செய்வார்களே அதே தொழில்நுட்பம்தான். சின்னப்பானைகளில் முளைப்பாரி போடுவது போல, பெரிய பெரிய 'பிளாஸ்டிக் டிரே’க்களில் பயிரை முளைக்க வைக்கும் தொழில்நுட்பத்தைத்தான் 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிறார்கள். கப்பல்களில் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கண்டெய்னர் போல உள்ள ஒரு அமைப்பில், டிரேக்களை அடுக்கி வைக்க வசதியாக இரும்புக் கம்பிகளை அமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு டிரேக்கும் இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்கும். உள்ளே குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். டிரேக்களில் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கப்பட்ட மக்காசோள விதையைத் தூவி, வரிசையாக டிரேக்களை அடுக்கி வைத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரித்தால், 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் மக்காசோளம் பயிராக வளர்ந்து விடுகிறது. அதை அப்படியே எடுத்து ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள். ஒற்றை நாற்று நடவுக்கு நெல் நாற்றை பாய் நாற்றாங்காலில் சுருட்டி எடுத்து வருவது போல, இந்தப் பயிரை எடுத்து வெட்டாமல், அப்படியே ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள். இந்த முறையில் பத்து கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, ஒன்றேகால் கிலோ விதை போதுமானது. சாதாரண புல்லைவிட, இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் தீவனத்தில் 6% புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. காலை, மாலை இருவேளையும் இந்தத் தீவனத்தைக் கொடுத்து, மதியம் உலர் தீவனத்தை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 10 கிராம் தாது உப்புக்கலவையைக் கொடுக்கிறார்கள். இதனால், ஆடுகளின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. 

இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் தீவனம் வளர்க்க ஒரு யூனிட்டுக்கு (ஒரு கண்டெயினர்) 18 முதல் 20 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால், இதே தொழில்நுட்பத்தை கன்டெய்னருக்கு பதிலாக பாலி ஹவுஸ் மற்றும் காற்றுப் புகாத அறைகளில்கூட முயற்சி செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலமாக குறைந்த செலவில் அதிக தீவனத்தை உற்பத்திச் செய்யலாம்'' என்ற பீர்முகமது, அடுத்ததாக, 'பிராய்லர் கோட்’ எனப்படும், கறியாடு வளர்ப்பு முறை பற்றி சொன்னார். 

கறியாடு வளர்ப்பு! பிராய்லர் கோட் வளர்ப்பு தமிழகத்தில் இன்னும் பிரபலமாகவில்லை. ஆனால், கேரளாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இந்த முறையில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். இதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. ஆடுகள் வெளியே போகாத அளவுக்கு படல், வலை, வேலி ஆகியவற்றில் ஏதாவதொன்றை அமைத்தாலே போதும். அருகில் உள்ள கிராமங்களில் கூடும் சந்தைகளில் கிடைக்கும் பால் குடி மறந்த நிலையிலுள்ள 80 நாள் வயதுள்ள வெள்ளாட்டுக் கிடாய் குட்டிகளை வாங்க வேண்டும். குட்டிகளைப் பண்ணைக்குக் கொண்டு வந்தவுடன் விரை நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகள் என்பதால், குறைவான தீவனங்களைத்தான் உட்கொள்ளும். அதனால், குறைவான இடத்தில் பசுந்தீவனங்களை வளர்த்தாலே போதுமானது. மூன்று மாதம் வயதுள்ள குட்டிக்கு ஒரு நாளைக்கு முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரையும்; 3 முதல் 6 மாதம் வயதுடைய குட்டிக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையும்; 6 மாதம் முதல் 9 மாதம் வரை வயதுடைய குட்டிக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரையும் பசுந்தீவனம் தேவைப்படும். குட்டிகளை ஆறு மாதம் வரை வளர்த்து, அதாவது குட்டிகளுக்கு 9 மாத வயதில், விற்பனை செய்து விட வேண்டும். கறிக்காக வளர்க்கும்போது அதிக பராமரிப்பு தேவைப்படாது. கறிக்காக 9 மாத வயதுள்ள ஆடுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வயதுள்ள ஆடுகளின் கறிதான் சுவையானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், பெரும்பாலான இடங்களில் ஐந்து மாத குட்டிகளைக்கூட அறுக்கிறார்கள். அது தவறு. அந்த வயதுள்ள குட்டிகளின் கறியில் சுவையோ சத்தோ இருக்காது'' என்றவர் கறியாடு வளர்ப்பின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைப் பற்றிச் சொன்னதும், வியப்பில் விழிகளை விரித்தனர், விவசாயிகள். மாதம் 56 ஆயிரம்! ''80 நாள் வயதுடைய குட்டியை 2 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கலாம். அதை அடுத்த ஆறு மாதங்கள் வளர்ப்பதற்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் செலவு. 9 மாத வயது ஆடு, குறைந்தபட்சம் 25 கிலோ எடை இருக்கும். உயிரோடு இருக்கும் ஓர் ஆட்டின், இன்றைய குறைந்தபட்ச பண்ணை விலை கிலோவுக்கு 250 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், 6 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் செலவுத் தொகையை கழித்து விட்டால், ஒரு ஆடு மூலமாக 2 ஆயிரத்து 250 ரூபாய் லாபம். இந்த முறையில் 25 குட்டிகளை வாங்கி வளர்த்தால், 56 ஆயிரத்து 250 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சுழற்சி முறையில் மாதம் 25 குட்டிகள் என வாங்கி வளர்த்தால், தொடர்ச்சியாக மாதாமாதம் வருமானம் கிடைக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த முறை வளர்ப்பில் ஈடுபடலாம். தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா ஆடுகளில் பெட்டைக்குட்டிகளை வைத்துக் கொண்டு, கிடாய் குட்டிகளை விற்று விடுகிறார்கள். அவர்களிடம் கூட கிடாய் குட்டிகளை சுலபமாக வாங்க முடியும். ஆடுகளைப் பொருத்தவரை விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. வியாபாரிகள் தேடி வந்து பிடித்துக் கொள்வார்கள்'' என்று சொன்னார். தொடர்ந்து ஆடு வளர்ப்பில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசிய அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் சதாசிவம், ''வெள்ளாடுகள், பனி, மழை, வறட்சினு எல்லா காலத்துக்கும் ஒத்துப்போகும். ஒரு இடத்துல இருந்து அடுத்த இடத்துக்கு மாத்துனாலும், பத்து நாள் ஒழுங்கா பராமரிச்சாலே, அந்த இடத்துக்கு தக்க மாதிரி மாறிக்கும். விவசாயத்தை மட்டும் பாத்தா... பல நேரத்துல நட்டம்தான் வரும். விவசாயத்தோட சேர்த்து ஆடு, மாடுகள வளர்த்தா நிச்சயம் நட்டம் வராது. ஒரு ஏக்கர் நிலத்துல வாழை போட்டா... ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதே ஒரு ஏக்கர்ல தீவனத்தை உற்பத்தி செஞ்சி அம்பது ஆடுகளை வளத்தோம்னா வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்கலாம்.

 பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது! 

 பெரும்பாலான ஆட்டுப்பண்ணைகள் ஜெயிக்காமப் போறதுக்கு காரணம் பண்ணையாளர்களோட நேரடிப்பார்வை இல்லாததுதான். 'பணத்தைப் போட்டு பண்ணையை ஆரம்பிச்சா போதும், வருமானம் வந்துடும்’னு நினைக்கறாங்க. அது ரொம்ப தப்பு. என்னதான் வேலைக்கு ஆளுங்கள வெச்சிருந்தாலும் நாமளும், தினமும் பண்ணையைப் பார்வையிடணும். 'நாம பண்ணைக்குப் போக முடியாது’னு நினைச்சா... நிச்சயம் ஆடு வளப்புல இறங்காதீங்க. கண்டிப்பா நஷ்டமாகிடும். பண்ணையை சுத்தமா வெச்சுக்கிட்டாலே, பாதி பிரச்னை தீர்ந்துடும். ஒரு வெற்றிகரமான பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது. அந்தளவுக்கு பராமரிப்பு இருக்கணும். கொட்டில் முறையில, தரையிலிருந்து கொட்டிலோட உயரம் கம்மியா இருந்தா... கீழ புழுக்கையில இருந்து வர்ற மீத்தேன் வாயுவால பிரச்னை வரும். அதனால, கொட்டில் உயரமாத்தான் இருக்கணும். நாலஞ்சு நாட்டுக்கோழிகளை வாங்கி விட்டா, கீழ விழுற புழுக்கையைக் கிளறி, காத்தோட்டமாக்கிடும். ஆடுகள், காதை சுவத்துலயோ, வாயிலயோ சொறிஞ்சா, காதுகள்ல முடியில்லாத இடத்துல உண்ணிப் பூச்சி இருக்குனு அர்த்தம். அதைப் பாத்து, துடைச்சி எடுத்துடணும். இதுமாதிரி சின்னா விஷயங்கள்தான். ஆனா, சரியா செய்யணும். ஆடு வளக்கணும்னு நினைக்கிறவங்க, கொட்டகை போடுறதுக்கு முன்னயே, கோ-4, கோ-5, வேலிமசால், அகத்தி, குதிரைமசால், ஆப்ரிக்கன் டால் மக்காசோளம், கோ.எஃப்.எஸ்.-29...னு தீவன உற்பத்தியை ஆரம்பிச்சுடணும். தீவனம் இல்லாம ஆடுகளை வாங்கிட்டு வந்தா... நிச்சயம் அந்தப் பண்ணையை நடத்த முடியாது. அனுபவம் அவசியம்! ஆடுகளுக்கு எந்த மாசம் என்ன தடுப்பூசி போடணும்? எப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு அட்டவணை போட்டு பண்ணையில தொங்க விடணும். அதைப் பாத்து அந்தந்த மாசம் செய்ய வேண்டியதைத் தவறாம செஞ்சாலே நோய்ங்க தாக்காது. அதேபோல நல்ல தரமான ஆடுகளைப் பார்த்து வாங்கணும். உங்களுக்கு நல்லா தெரிஞ்ச தரமான பண்ணைகள்ல இருந்து குட்டிகளை வாங்குங்க. வியாபாரிங்க சில நேரம் வயிறு முழுக்க தண்ணிய நிரப்பி ஆடுகளை போஷாக்கா காட்டி ஏமாத்தி வித்துடுவாங்க. அதனால, சந்தைகள்ல வாங்கும்போது, ரொம்ப கவனமா இருக்கணும். எந்த ஒரு தொழில்லயும் முன் அனுபவம் இல்லாம இறங்கக்கூடாதுனு சொல்வாங்க. ஆடு வளர்ப்புக்கும் அது பொருந்தும். அதனால புதுசா பண்ணை அமைக்கறவங்க, எடுத்தவுடனே அதிக எண்ணிக்கையில ஆடுகளை வாங்காதீங்க. 20 ஆடுக, ஒரு கிடாய் மட்டும் வாங்கி பண்ணையை ஆரம்பிங்க. அந்த இருபது ஆடுகள்லயும் சினை ஆடுக, பால் கொடுக்குற ஆடுக, பருவத்துக்கு வந்த ஆடுக, குட்டிகனு கலந்து வாங்கணும். அப்பத்தான் எல்லா வயசு ஆடுகள பத்தின அனுபவமும் கிடைக்கும். அனுபவம் வந்த பிறகு அதிக எண்ணிக்கையில ஆடுகள வளர்க்கலாம்'' என்ற சதாசிவம் நிறைவாக, ஆண்டுக்கு 3 லட்சம் லாபம்! ''ஒரு பண்ணையில 50 ஆடுக இருக்கு. அதுல கிடாய் போக, 47 ஆடுக குட்டி போடுதுனு வெச்சுக்குவோம். ஒரு வயசு முடிந்த ஆடு, ரெண்டு வருஷத்துல மூணு தடவை குட்டிப் போடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தபட்சம் ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். இந்தக் கணக்குப்படி 47 ஆடுக மூலமா 282 குட்டிக கிடைக்கும். சராசரியா 250 குட்டினு வெச்சுக்குவோம். அதை மூணு மாசம் வளர்த்து விக்கும்போது ஒரு குட்டி 3,500 ரூபாய்க்கு விக்கும். 250 குட்டிக்கு, 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். வேலையாள் கூலி, பசுந்தீவனம், அடர்தீவனம், கரன்ட் பில், பராமரிப்பு எல்லா செலவும் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 6 லட்சத்து 75 ஆயிரம் லாபமா நிக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தா வருஷத்துக்கு 3 லட்சத்து சொச்சம் லாபமா கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து அதிகம் அலட்டிக்காம இந்த வருமானம் வேற எந்தத் தொழில்ல கிடைக்கும்?'' என்று கேட்க... ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்ற விவசாயிகள்... கணக்குப் போட்டபடியே கலைந்தனர்! 

தொடர்புக்கு, 
பீர்முகமது, செல்போன்: 94433-21882 
சதாசிவம், செல்போன்: 94420-94446 
ராஜமாணிக்கம், செல்போன்: 99432-65061 

கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி! 
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் பற்றி கருத்தரங்கில் பேசிய சித்த மருத்துவர். ராஜமாணிக்கம், ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும். வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும். காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும். 50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும். கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும். ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும். கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும். சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும். ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு, ''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.

மண் புழு உரம் - லட்ச கணக்குல பணம் வரும்...


  பொன்னு சிரிக்கனுமா நகைய போடு, மண்னு செழிக்கனும்னா (மண்) புழுவ போடுனு... யார் சொன்னதுனு கேக்குறீங்களா? நான்தான்யா சொல்லுறேன்... அனுபவம் அய்யா அனுபவம்.. 

இது என் வாழ்க்கையில் நடந்த நிருபனம். மண் புழு உரம் (vermicompost) தயாரிப்பில் ஈடுபடும்  மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது:  
 எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம்.  அதற்கேற்ப காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும் காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத் திட்டமிட்டோம். இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம்.  காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும்.  உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.  ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது.  உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.  லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது.  இதன் மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50 பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4 ஆயிரம். மொத்தம் ரூ. 26,500. இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500.  இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக,  12 ஆயிரம் லாபம் கிடைக்கும். மண் புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க, இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும்.  ஒரு ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப் போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம். சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும். மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?  செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம்.  விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.   மூலதன செலவு என்ன? 

கட்டமைப்புகள்:      
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.  10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி.  அதைச்சுற்றி  இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம். 

உற்பத்திச் செலவு: 
அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500. காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500. மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம். 5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் ரூ. 5 ஆயிரம் பராமரிப்பு கூலி  ரூ. 500. இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500 மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம். இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது. 

தயாரிப்பது எப்படி? 
மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன்  காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி,  2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.  இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும். 

நண்பேன்டா.... 
விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.  ‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம் எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.  மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.  விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.  மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர். 

சந்தை வாய்ப்பு: 
 இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல், மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம் தேவைப்படுகிறது. வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும், தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.