‘கற்பம்’ என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற கருவி. கற்பம் உண்பவர், நீண்ட நாள் வாழ்வர் என்பதும், கற்பம் உண்டவர் நோயற்ற நிலையடைவார் என்பதும் பொது வழக்கு.
கற்பம் இரண்டு வகை அவை.
ஒன்று மருந்து கற்பம்; மற்றொன்று யோகக் கற்பம்.
‘கற்பம்’ எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்பதும் பொருந்தும்.
முக்கடுகு என்பது சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியன. முதிர்ந்த எருக் கங்கட்டையை வேருடன் கொணர்ந்து வரிசைப் படியே ஒரு மண்டலம், ஒரு நெல்லளவு, சுக்குடன் தண்ணீரில் உண்டால், வாதப் பிணியும், திப்பிலியுடன் உண்டால் பித்தப் பிணியும், மிளகுடன் உண்டால் ஐயப்பிணியும் அற்றுப் போகும் என்பதும் கற்ப முறையில் ஒன்றாகும்.
மூன்று வகை நோயும் இருக்கவொட்டாமற் செய்வதே கற்பத்தின் சிறப்பு என்பதனால், கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்தாகும். கற்பம் உண்டால், நெடுங்காலம் உயிர் வாழலாம். உடம்பு கல்லினைப் போல் உறுதி கொண்டு விளங்கும். சித்தொளி தோன்ற வாழலாம் என்னும் அகத்தியர் வாக்கினால் கற்பத்தின் சிறப்பினை அறியலாம்.
கற்பமுறை:
கற்பம் உண்ணுகின்ற காலத்திலும், உண்டபின்பும் ஆசைக்கும், பாசத்திற்கும் இடமளித்தால் கற்பம் உண்டது வீணாகும் என்று அறியவும். இருப்பினும், உடலில் நோய்கள் தங்காமல் பாதுகாக்க கற்பம் வகை செய்யும். கற்பங்கள், காசினியில் நூற்றெட்டுக் கப்ப மானால், பேசாது மவுனமுற்றுக் கொள்ள வேண்டும்,என்று, கடுமையான கட்டளை பிறப்பிக்கப் படுவதனால், கற்பங்கள் 108 என அறிய முடிகிறது. மூலிகைகள், இரசங்கள், உப்புகள், உபரசங்கள் முதலியவற்றைச் சிறந்த முறையில் மருந்துகளாக அமைத்து, அவற்றை உடல் அழியாமல் இருத்தற் பொருட்டு உபயோகித்தார்கள். அவ்வாறு உபயோகித்த மருந்துகளையே ‘கற்பம்’ என்பர்.
கற்பம் உண்ணும் காலம்
கற்பம் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் உண்ணக் கூடியதாக இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு உண்ணுகின்ற முறையில் வேறுபாடு வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது. அதாவது,
“ ஆனி, ஆவணி மாதங்களில் வெல்லத்திலும்,
சித்திரை, வைகாசி யில் சுக்கு கசாயத்திலும்,
புரட்டாசி, ஆடியில் குறிஞ்சித் தேனிலும்,
ஐப்பசி, கார்த்திகையில் குமரிச் சோற்றிலும்,
மார்கழி, தை, மாசியில் கற்கண்டிலும்,
பங்குனியில் நெய்யிலும்” உண்ணுமாறு உரைக்கப் பட்டுள்ளது.
இதனால், கற்ப மருந்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது.
மருந்தின் துணைப் பொருளாக உரைக்கப் பெற்ற வெல்லம், சுக்கு, குறிஞ்சித் தேன், குமரிச் சோறு, கற்கண்டு, நெய் ஆகிய பொருள்களின் குணத்திற்கும், மேற்கண்ட மாதங்களின் பெரும்பொழுது குணத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளதை உணரலாம்.
கடுக்காய் கற்பம்:
கடுக்காயைத் தேர்ந்தெடுத்து உடைத்து, அமுரியில் ஊறவைத்து மறுநாள் வெய்யலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய கடுக்காய் சுத்தியாகும். சுத்தி செய்த கடுக்காய் செங்கடுக்காய் ஆகும்.
பத்திய முறைகள்:
காலை வல்லாரை, மதியம் அமுது, மாலையில் கடுக்காய்த்தூள் வெருகடி அளவு உண்ணவும். சிறுபயறு, சர்க்கரை, பழம், நல்ல காய்கறிகள் உண்டுவர காய சித்தியாகும்.
கற்பம் உண்போர் ஒரு வேளை உணவே உட்கொள்ள வேண்டும். பச்சரிசியும் சிறு பயறும் சேர்த்து சமைத்த சோறும், சர்க்கரை, தேன், முக்கனி, பால் இவற்றுடன் ஒரு போதே உண்ண வேண்டும்.
ஒரு படி அமுதுடன் துவரம் பருப்பும் சேர்த்து சோறு பொங்கி, அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை, நெய்யுங் கூட்டி உண்ணவும். அதன்பின் கற்பம் உண்ணவும். அப்படி உண்டால் உடல் உறுதியாகும்.
இவ்வாறு பல்வேறு முறைகளில் கற்பங்கள் உரைக்கப்படு கின்றன. ஒரு வேளை உணவும், உணவுக்குப் பின் கற்ப மருந்து என்பதும் எல்லா முறைகளிலும் ஒன்றாகவே காணப்படுகின்றன.
கற்பங்கள் உண்ணும் போது, சாதாரணமான உப்பைத் தின்றால் கற்பத்தினால் கிடைத்த பலன் கெடுவதுடன், கண் இரண்டும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே, கட்டிய உப்பை மட்டுமே உண்ண வேண்டும் என்னும் சிறப்பு விதிகள் உரைக்கப் படுவதனால், மருந்துண் போர் நலனை நுணுக்கமாகக் கண்காணித்து உரைக்கப்படுவது தெரிகிறது.
மருந்து பயனுடையதாக இருந்த போதிலும், மருந்துண் போரின் நலனைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மருத்துவத்தின் தலையாய கடன் என்பது தெற்றென விளங்கும்.
கற்பங்கள் உண்ணும் முறைகளையும், பத்திய உணவுகளையும் பின்பற்றி உடலைப் பாதுகாப்பதைப் போலவே, சாதாரணமாகத் தலைமுழுகப் பயன்படுத்தும் பொருளும் கற்பமுறையாக உரைக்கப் படுகிறது.
வேம்பரிசியும், மஞ்சளும் அளவில் மாறுபடுகின்றன.
மேற்கண்ட கற்பத்தினால் தலை (கபாலம்) இறுகும் என்று திருமூலரும் (கற்பமுறை. செய். 37) திருமந். செய். 849), (கபாலம்) தலை இறுகுவதுடன், முடி கருக்கும்; பகலில் வான்மீன்கள் தோன்றும். உடலிலுள்ள நச்சு நீர் வற்றும், உடல் பொன் போலாகும் என்று நந்தீசரும் உரைக்கக் காணலாம்.
தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை இப்படி முறைப் படுத்தி, ஒரு மண்டலம் உண்டு வந்தால் இரவும் பகல்போலத் தோன்ற கண்ணொளி கூடும்.
நீர்க்குளத்தைத் திருத்தி விளங்கச் செய்வதைப் போல் கண்குளமான நேத்திரத்திலிருக்கின்ற பித்த நீர் முதலான மலினங்களைப் போக்கும் செயலைத் தூதுவளை செய்யும் என்பதைக் அறியலாம்.
கூறப்படும் கற்பத்தின் பொருள்கள் சிறந்த பொருள்களிலிருந்து மட்டுந்தான் செய்யப்படுகின்றன என்ற நிலையில்லை. குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருள் என்று தூக்கி எரியப்படுகின்ற பொருள்கள் கூட கற்பங்களாக ஆகின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகவும், அதனால் விளையக் கூடிய நன்மை அதனினும் வியப்பாகவும் தோன்றும்.
பல்வேறு வகைப்பட்ட பறவைகளின் முட்டை ஓடுகள் கற்ப மாகின்றன. கோழி, பருந்து, கிளி, காக்கை, காடை, மயில் ஆகிய வற்றின் முட்டை ஓடுகள் பற்பம் எனும் முறையில் கற்பமாகின்றன. அவை, முறையே, அத்திசுரம், மூர்ச்சை, காசம், சத்தி , பிடிப்பு, வெட்டை, உப்புசம், பெருவியாதி, வெப்பம், மாரடைப்பு, கபமிகுதி, சன்னி ஆகியவற்றைப் போக்குகின்றன.
இரத்தச்சுத்தி
உடல் தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத் தூய்மையாக்கி, உடலைத் தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத் துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம்.
அதே போல், உடல் நோயுற்
றிருந்தால் துர்நாற்றமும், நிறத்தில் மாற்றமும் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இதற்கு இரத்தத்தில் நோய்க்கிருமிகள் அண்டி யிருப்பதே காரணமாகும். இவற்றையெல்லாம் முறைப்படுத்துவதே மருந்தின் பணியாகும். அதனையே காயசித்தியின் தொடக்கமாகக் கருதுவர்.
" கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி,
பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலிலுலர்த்தி
இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு, தினமும்
தேனில், ஒரு மண்டலம் உண்டால், உடல்
நோய்கள் போகும் காய சித்தியாகும்.''
மேற்கண்ட மூலிகைகள் மிகவும் எளிமையாகக் கிடைக்கக் கூடியவை. ஆடு, மாடுகள் அன்றாடம் தின்னக் கூடியவை. என்றாலும் அவற்றி லுள்ள மருத்துவக்குணங்களும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆற்றுகின்ற மருந்தாற்றலும் அறியப்படாமல் இருக்கும் செய்திகளாகும்.
" உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்
உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.''
ஒரு மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருமிகள் எவை என்று குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளதால், உடலில், இரத்தத்தில் இருக்கத் தகாத கிருமிகள் என்றே கருத வேண்டும்.
" பண்ணப்பா பவளம்போல் சிவந்தி ருக்கும்
காயமெல்லாம் சம்பழத்தின் வாசம் வீசும்
விண்ணப்பா அந்தரத்தில் மீன்க ளெல்லாம்
வெகுளாமல் பகல்காணத் தோற்று விக்கும்''
உடல் வண்ணம் பவளம் போல் சிவந்து காணும். அத்துடன் சம்பழத்தின் வாசம் போல உடலிலிருந்து மணம் வீசும். கண்ணொளி ஏற்படுவதுடன், விண்ணகத்திலுள்ள மீன்களெல்லாம் கற்பம் உண்டவர் காண்பதைக் கண்டுவெகுளாமல் கண்ணின் காட்சிக்கு ஏதுவாகித் தோற்றமளிக்கும் என்று கண்ணொளியைச் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளது
முறைகள் மிகவும் எளிதாக இருக்கின்ற போதிலும் அதனுள் புதைந்துள்ள பயன்கள் அரிதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.
கற்ப மருந்தின் சாதனை
தன் இனத்தைப் பெருக்குதலும், உயிரைப் பாதுகாத்தலும் இவ்வுலகில் ஒவ்வொரு பிராணியின் பிறவிக் கடன். இத்தலையாயக் கடன் அது அதன் பண்பு. ஆனால், பகுத்தறிவு மிக்க மனிதனோ தன் இனத்தை மட்டும் பெருக்கிப் பாதுகாப்பதுடன், ஒருபடி முன்னே சென்று தன் வாழ்நாளையும் நெடுங்காலம் பாதுகாக்கும் வழிவகைகளைக் காண முற்பட்டான்.
இந்த முயற்சியில் உடலை வாட்டும் நரைதிரை மூப்பையும், வாழ்வை வதைக்கும் நோய் நொடி சாக்காட்டையும் எதிர்த்துப் போராடும் மருந்துகள் பலவற்றையும் கண்டான்.
இந்த மருந்துகள் இருவகைப்படும். முதல்வகை இயல்பாகத் தோன்றும் உடல் நோய்களுக்கு மருந்தாக அமைந்து உடல் நலத்தைப் பேணுபவை. இரண்டாம் வகை, உறுப்புகளின் இளமையைப் பாதுகாத்து மனித வாழ்வை நெடுங்காலமாகப் பேணுகின்ற காய கற்ப மருந்துகள் (சித்த மருத்துவம் பக்.76) என்று, காயகற்பம் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர்.