Sunday, October 16, 2016

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 1



நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.
அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது.உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை :–

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.


ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 2

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டியஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். "கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது".
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில்இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation forResearch on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொருமைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது," என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு "உண்மையில் இப்படி இருக்க முடியுமா?" என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 3

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் .

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து
இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.
அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். 

No comments:

Post a Comment