மண் உயிருள்ளது என்பதையும், மண்ணில் உயிரினங்களின் செயல்பாடுகள் பற்றியும், இயற்கையின் சில விதிகளைப் பற்றியும் பார்த்தோம். இவைகளை அடிப்படையாகக் கொண்டே மண் வளத்தை மேம்படுத்தும் நுட்படங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். சரியான மண் மேலாண்மை நுட்பங்களையும், நீர் மேலாண்மை மற்றும் பயிர் வளர்ப்பு முறைகளையும் இதன் அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொண்டால் மண் வளத்தை மேம்படுத்த முடியும்.
கரிம அளவைக் கூட்டுவது
மண் மேலாண்மை நுட்பத்தின் முதல் அடிப்படை மண்ணின் கரிமச் சத்தை அதிகரிப்பதே. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவே மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கின்றது. கரிமப் பொருள் அதிகரிக்கப்பட்ட மண்ணில் அனைத்து வகை நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வாழ் உயிரினங்களின் செயல்திறனும் அதிகரிக்கின்றது. பயிர் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான அனைத்துப் பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் பயிருக்கு இயல்பான முறையிலும், சிறப்பான நிலையிலும், தேவையான அளவிலும் தொடர்ந்து கிடைக்கின்றன. மண் துகள் அமைப்பு சீர்பட்டு மண் பொலபொலப்பாகின்றது. எனவே, காற்றோட்டமும், நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கின்றது. கரிம அளவு கூடும் பொழுது மண்ணின் கார அமில நிலை (PH) மேம்படுகின்றது. பயிர்களுக்கு மிக இன்றியமையாத வேர்ப்பூசண உறவு நிலை (மைக்கோரைசா) ஏற்படுகின்றது.
கரிமச் சத்தை மண்ணிலே அதிகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
தொழு எரு (FYM - farm yard manure)
மண்ணின் கரிமச் சத்தை உயர்த்துவதற்கு நம் முன்னோர்கள் அதிக அளவில் கடைப்பிடித்த ஒரு முறை தொழு எருவைத் தொடர்ந்து நிலத்தில் சேர்த்ததே ஆகும்.
உழவுத் தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது. பயிர்ச் சாகுபடியின் போது கிடைக்கும் கழிவுகள் கால்நடைகளுக்கான உணவாகின்றன. கம்பு, சோளம், போன்ற தானியப் பயிர்களின் தட்டையும், வைக்கோலும், தவிடும், பிண்ணாக்கும், பருத்திக் கொட்டையும், வயல் வரப்புகளில் விளைந்து கிடக்கும் புல்-பூண்டுகளும் கால்நடைகளுக்கான உணவாக அமைகின்றது.
இவைகளின் கழிவுகளான மாட்டுச் சாணமும், ஆட்டுப் புழுக்கையும், கால்நடைகளின் தீவனக் கழிவுகளும், ஒன்றாக குவிக்கப்படும் ஒவ்வொரு முறை உழவின் போதும் குவிக்கப்பட்டுள்ள தொழு எரு நிலத்தில் இடப்படும் பெரும் பகுதி மட்கிய நிலையில் உள்ள இந்தத் தொழு எரு நிலத்தின் தன்மையை நன்கு மேம்படுத்தும். இவ்வெரு மண்வாழ் உயிரினங்களுக்கான மிகச் சிறந்த உணவாகும். இவ்வெரு இடுவதன் மூலம் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால் உயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் கிடைக்கின்றது.
தொழு எருவைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் தேவை. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தொழு எரு வீணாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிழலுள்ள மேடான இடத்தில் கால்நடைக் கழிவு, மற்றும் தீவனக் கழிவுகளைக் கொட்டி வைத்து அடிக்கடிப் புரட்டிக் கொடுப்பதும், போதிய ஈரம் உள்ளவாறு பார்த்துக் கொள்வதும் இன்றியமையாதது. தொழு எருவில் மணிச்சத்து சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதைச் சரி செய்ய கால்நடைகளின் சாணக் கழிவுகளோடு அவற்றின் சிறுநீரையும் சேர்த்துவர வேண்டும்.
தொழு எருவை நிலத்தில் இடும் பொழுது, நீர்பாயும் வசதியுள்ள நன்செய் மற்றும் தோட்டக்கால் நிலங்களுக்கு கூடுதலாகவும், மானாவாரி நிலங்களுக்குச் சற்றுக் குறைவாகவும் இட வேண்டும்.
அதாவது, மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்குப் பதினைந்து முதல் இருபது வண்டி அளவு போதுமானவை. பாசன வசதி உள்ள நிலங்களுக்கு 25 முதல் 35 வண்டி அளவி வரை இடலாம். நீர்வசதி நிறைந்த இடத்தில் விளைவிக்கப்படும் கரும்பு, மக்காச்சோளம், காய்கறிப் பயிர்கள், பழ மரங்கள் ஆகியவற்றுக்கு 40 முதல் 50 வண்டி வரை தொழு எரு இடலாம்.
மட்கு எரு (compost)
பண்ணையில் கிடைக்கக்கூடிய அனைத்துப் பயிர்க் கழிவுகள் கால்நடைக் கழிவுகள், சாம்பல், வண்டல், பசுந்தழைகள், கால்நடைகளின் சிறுநீர் கலந்த மண், மீன் கழிவுகள் ஆகியவைகளை வைத்து மட்கு எரு தயாரிக்கப்படும். மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்படும் மட்கு எருவில் மண் வளத்தை உயர்த்தக்கூடிய அனைத்துக் கூறுகளும் உண்டு. மட்கு எருத் தயாரிப்பையும், அதன் பயன்பாட்டையும், பல்வேறு அறிவியலாளர்களும், வெவ்வேறு முறையான ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்படும் மட்கு எருவில் மிகக் கூடுதலாகவே பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும் உள்ளன.
காய்ந்த குச்சிகள் மற்றும் பயிர்களின் கடினமான பகுதிகள் அதாவது தட்டை, தாள், சூரிய காந்திப்பூவின் அடிப்பகுதி, மக்காச் சோளக் கதிரின் தக்கை முதலான பகுதிகளை முதல் அடுக்காகப் போட வேண்டும். 5 அடி அகலத்தில் தேவையான நீளத்தில் இந்தப் படுக்கையைப் போட வேண்டும். ஏறத்தாழ, 3/4 அடி உயரத்திற்குப் போடப்பட்ட இந்த அடுக்கின் மீது சாணம், சிறுநீர் கலந்த சற்றுக் கெட்டியான கரைசல் ஊற்றப்பட வேண்டும். இதன்மீது பசுந்தழைகள் 3/4 அடி உயரம் இடப்பட வேண்டும். இதன் மீது நெல் உமிச்சாம்பல், அடுப்புச் சாம்பல் போன்றவைகளை இரண்டு அங்குல உயரம் இட வேண்டும். இப்படி அனைத்துக் கழிவுகளையும் ஒவ்வோர் அடுக்காக இட்டு வர வேண்டும். நான்கிலிருந்து ஐந்த அடி உயரம் வந்தவுடன் மேலே தோட்டத்து மண்ணை இரண்டு அங்குல அளவுச் சிதறி நீரைத் தெளித்து விடவேண்டும். கூடுதல் ஈரமும், குறைவான ஈரமும் மட்டுப்படுக்கையில் நுண்ணுயிர்களின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். எனவே, போதிய ஈரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படுக்கையை இருபது நாட்களுக்கு ஒரு முறையாகப் புரட்டிவிட வேண்டும். அப்போது போதிய ஈரம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை புரட்டியபின் இந்தப் படுக்கை நன்கு மட்கி விடும். இதை நாம் முடிந்தவரை உடனே நிலத்திலிட்டு உழுதுவிட வேண்டும். அல்லது, பயிர்களுக்கு அருகில் இட்டு மூடிவிட வேண்டும். ஏனெனில், மட்கு நன்கு உழுவானதற்குப் பின்னரும் தொடர்ந்து வைத்திருப்போமேயானால் இம்மட்கில் நுண்ணுயிரிகளால் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தழைச்சத்து முதலான சத்துக்களை படிப்படியாக இழந்துவிட வேண்டும். நிழல் மிகுந்த இடத்திலேயே மட்கு எரு தயாரிக்ப்படல் வேண்டும்.
பல்வேறு ஆய்வாளர்களின் சோதனைகள் காட்டியுள்ளபடி மட்கு எரு தொடர்ந்து இடப்பட்டு வரும் நிலம் மிக வளமான நிலமாக மாறும்.
கிடை வைத்தல்
ஆடு மற்றும் மாடுகளை நிலத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் அவைகளின் பசுஞ்சானக் கழிவையும், சிறு நீரையும் மண்ணில் சேர்ப்பது என்பது மண் வளத்தைப் பேணும் மரபு வழிப்பட்ட ஒரு நுட்பமாகும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ஆடுகள் வரை நிறுத்தப்படும். அதேபோல் இரண்டாயிரம் மாடுகள் வரை ஓர் ஏக்கர் நிலத்தில் நிறுத்தி வைக்கப்படும். இவைகள் இடும் சாணமும், சிறுநீரும் உழுவதன் மூலம் மண்ணில் நன்றாகக் கலக்கப்படும்.
கிடை வைப்பதற்கென்றே தனி இன மாடுகள் பெரும் எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. மலை மாடுகள் அல்லது கிடைமாடுகள் என்று அவை அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய இம்மாடுகள் பகலில் பல்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டு இரவில் தேவைப்படும் நிலங்களில் அடைக்கப்படும். செம்மரி மற்றும் வெள்ளாடுகளும் இவ்வாறே பகலில் மேய்ச்சலுக்குப் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு இரவில் குறிப்பிட்ட நிலத்தில் அடைக்கப்படும்.
“ஆட்டெரு அவ்வருடம், மாட்டெரு மறு வருடம்” என்ற முதுமொழி இன்றும் நடைமுறையில் உள்ளது. இளந்தளிர்களையும், பயிர்களின் மென்மையான பகுதிகளையும் உணவாகக் கொள்ளும் ஆட்டின் கழிவு உடனே மட்கம் தன்மையுடன் இருக்கும். சற்று கடினமான பயிர்ப் பகுதிகளையும், முதிர்ந்த தாள் தட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும் மாட்டின் கழிவு மட்குவதற்குச் சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும் . கிடை வைக்கப்படாத நிலமே தமிழகத்தில் இல்லை என்ற நிலை அண்மைக்காலம் வரை இருந்தது. கிடை வைப்பதன் மூலம் கால்நடைகளின் சிறுநீர் நிலத்தில் பெருமளவு சேர்வதால் தழைச்சத்தும், பாசுவரச் சத்தும் பயிர்களுக்குக் கூடுதலாய் கிடைக்கும். நிலத்தில் நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயல்பாடும் மிகுதியாகும்.
பசுந்தாள் எரு
ஒரு பயிரை சாகுபடி செய்வதற்கு முன்னால், அந்நிலத்தில் சில வகைப் பயிர்களை வளர்த்து மடக்கி உழுவதையேப் பசுந்தாள் எருவிடுதல் என்கின்றோம். இதுவும் ஒரு மரபு வழி நுட்பமேயாகும்.
தக்கைப் பூடு, சணப்பு, அகத்தி, கொளுஞ்சி, அவுரி போன்ற பயறு வகைப் பயிர்களை வளர்த்து, அப்படியே நிலத்தில் மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் பயிரை பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதால் நார்ப்பொருள் அப்பயிரில் இல்லாமலிருக்கும். எனவே, இளம் பசுந்தாள்ப் பயிர் உடனே மட்கிவிடும். கூடுதல் தழைச்சத்து நிலத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால், இளம்பயிரை மடக்கி உழும் பொழுது நிலத்தில் சேரும் கரிமப் பொருளின் அளவு குறைவாகத் தான் இருக்கும். முதிர்ந்த நிலையில் உள்ள பசுந்தாள் பயிர் நிலத்தில் கூடுதல் மட்கைச் சேர்க்கும். ஆனால் மிக மெதுவாகத் தான் இதன் பலன் பயிருக்கும் கிடைக்கும்.
எனவே, இதை அடிப்படையாகக் கொண்டு பயிரிடப் போகும் பயிருக்கு ஏற்றவாறும், சாகுபடிப் பயிர் வைக்கப் போகும் காலத்தை மனதில் கொண்டும் பசுந்தாள் எருவைப் பயன்படுத்த வேண்டும்.
பசுந்தழை எரு
ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அதே நிலத்திலேயே மடக்கி உழுது எருவாக்கப்படும் பயிரைப் போலல்லாமல், பயிரிடப்படும் நிலத்திற்கு வெளி இடங்களில் வளர்ந்திருக்கும் பல்வேறு பயிர்களின் பசும் தழைகளை நிலத்திலிட்டு உழுது எருவாக்கும் முறைக்குப் பசுந்தழை எரு விடுதல் என்று பெயர்.
பூவரசு, வேம்பு, புங்கம், ஆவாரை, எருக்கு, வாதமடக்கி, கொளுஞ்சி போன்ற நம் நாட்டு பயிர்களின் தழைகளோடு, வெளி இடங்களிலிருந்து இங்கு கொண்டு வந்து தழைக்காகவே வளர்த்து விடப்பட்டுள்ள நெய்வேலிக் காட்டமாகி, கிளைரிசிடியா போன்ற பயிர்களின் தழைகளையும் பசுந்தழை எருவாகப் பயன்படுத்தலாம்.
எருக்களை என்ற பெயரே அந்தப் பயிரின் சிறப்பைத் தெரிவிக்கின்றது. விளக்கு எரிக்கப் பயன்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்ற பெயரால் அழைக்கப்பட்டதைப் போல தழை எரு இடுவதற்கென்றே சிறப்பான முறையில் பயன்பட்ட செடியை எருக்களை என்றே அழைத்தனர். இந்தப் பெயரே பசுந்தழை எருவிடுவதன் தொன்மையைக் குறிக்கும். பொதுவாக நெல் பயிரிடப்படும் வயலுக்குப் பயிர்களை அக்களர் நிலங்களில் இட்டு உழுதனர் நம் முன்னோர்.
"களர் கெடப் பிரண்டை"
"களர் கெட வேம்பு"
"களர் முறிக்க காணம்"
"களர் கெட வேம்பு"
"களர் முறிக்க காணம்"
என்பவை இதன் அடிப்படையில் உருவான முதுமொழிகள்.
பயிரின் மிச்சங்களை மடக்கி உழுதல்
சாகுபடிப் பயிர்களின் அறுவடைக்குப் பின்பு மீதமுள்ள பயிர்ப் பகுதிகளை அப்படியே நிலத்தில் மடக்கி உழ வேண்டும். பயிரின் மிச்சங்களைத் திருப்பி மண்ணுக்கே அளிப்பதன் மூலம் மண்வளம் அதிகரிப்பதைப் பற்றிய பல ஆய்வுகள் நடந்துள்ளன.
ஒரு தொட்டியில் வளம் நிறைந்த மண்ணை இட்டு ஒரு வாழைக்கன்றை நட்டு வைப்போம். தொட்டியில் நூறு கிலோ எடை கொண்ட மண் இடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குப்பின் வாழைக்குலையை வெட்டி எடுத்து விட்டு, வாழை மரத்தை எடை போட்டுப் பார்ப்போம். அந்த வாழை மரத்தின் எடை ஏறத்தாழ ஐம்பது கிலோ இருக்கும். இப்பொழுது தொட்டியில் உள்ள மண்ணின் எடை 95 கிலோவாக உள்ளது. 5 கிலோ அளவு மண்ணின் எடை குறைந்துள்ளது. ஆனால், குலையை நீக்கி எடை போடப்பட்ட வாழை மரமோ ஐம்பது கிலோ உள்ளது. இதில் 40 கிலோ அளவுக்கு நீர் இருப்பதாய் வைத்துக் கொண்டால் கூட பத்து கிலோ அளவுக்குக் கரிமப் பொருள் நிலத்தில் சேர்கின்றது. அதாவது 5 கிலோ எடையை இழந்த மண் 10 கிலோ அளவு பயிர்க் கழிவைப் பெறுகின்றது. மண்ணில் உள்ள கரிமப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது.
அதாவது, நிலத்திலிருந்து ஒரு பயிரால் எடுத்துக்கொள்ளப்பட்ட பல்வேறு தனிமங்களும், தாதுப் பொருட்களும், மீண்டும் நிலத்திற்கே பயிர்க்கழிவு வடிவத்தில் அளிக்கப்படுகின்றது. நுண்ணுயிர்கள் இதைச் சிதைத்து மீண்டும் பயிருக்கான ஊட்டங்களை உருவாக்குகின்றன.
பல தானியப் பயிர் விதைப்பு
இது பசுந்தாள் எருவிடுவதின் மேம்படுத்தப்பட்ட முறையாகும். பல தானியப் பயிர் விதைப்பு என்பது இயற்கை வழிப்பட்ட வேளாண்மையில் தீவிர ஈடுபாடு கொண்ட தமிழக உழவர்களால், அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிக நல்ல நுட்பமாகும். ஒவ்வொருப் பயிரும் வெவ்வேறு வேதிப்பண்புகளைப் பெற்றுள்ளது. எருக்களையில் போரானம், கிளைரிசிடியாவில் மக்னீசியமும், துத்தியில் கால்சியமும் கூடுதலாய் உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டே இதன் மூலம் மண் பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களையும கொண்டதாக மாறுகின்றது.
கேழ்வரகு, தினை, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற பல்வேறு தானியப் பயிர்கள் உள்ளன. கொள்ளு, துவரை, உளுந்து, நரிப்பயறு, தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற பல்வேறு பயறுவகைப் பயிர்கள் உள்ளன. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் உள்ளன. இதைப் போன்றே கொளுஞ்சி, அவுரி, அகத்தி, சணப்பு, தக்கைப்பூடு போன்ற உயிர்ப் பயிர்களும், சீரகம், வெந்தயம், கொத்துமல்லி, சோம்பு போன்ற மணப்பொருட்களும் உள்ளன. இவைகளில் ஒவ்வொரு வகைப் பயிரிலும் நான்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் மொத்தம் இருபது வகைப் பயிர்கள் இருக்கும். இந்த இருபது வகைப் பயிர்களின் விதைகளை இருபத்தி ஐந்து கிலோ அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை எடுத்துக்கொள்ளும் போது, சிறிய விதைகளாக இருந்தால் சற்றுக் குறைவாகவும், பெரிய விதைகளாக இருந்தால் சற்று அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கேழ்வரகு ஒரு கிலோ என்றால் சூரியகாந்தி விதை மூன்று கிலோ என்று விதையின் அளவுக்குத் தகுந்தவாறு எடுத்து விதைகளைக் கலந்து விதைக்க வேண்டும். பயிர் வளர்ந்து 45 நாட்களில் இருந்து 55 நாட்களில் இவற்றை மடக்கி உழுது நிலத்தில் சேர்த்துவிட வேண்டும். பயிருக்காகன சமச்சீர் ஊட்டம் கிடைக்க இப்பல தானியப் பயிர் விதைப்பு வழிவகுக்கும்.
ஏரி, குளத்து வண்டல்
மேல் மண்ணின் தரத்தைக் கூட்டுவதில் இது கூடுதல் பங்கு வகிக்கின்றது. அதுவன்றி, மண் அரிப்பும் மூலம் ஏற்படும் மேல்மண் இழப்பையும் இம்முறை ஈடு செய்கின்றது. பெரும் மழைக்காலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடைகளிலும், கால்வாய்களிலும் ஓடி ஏரி, குளங்களைச் சென்று சேர்கின்றது. நிலத்தில் விழும் மழைநீர் வளமான மேல்மண்ணையும், பல்வேறு தாதுப் பொருட்களையும், விலங்கு, பயிர்க் கழிவுகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்று ஏரி, குளங்களைச் சேர்கின்றது. இவை யாவும் ஏரி, குளங்களின் அடியில் மெதுவாய்ப் படிகின்றது. ஊட்டங்கள் நிறைந்த இப்படிவு வண்டலாய் மாறுகின்றது. கோடை காலத்தில் ஏரி, குளங்கள் வற்றியபின் இவ்வண்டலை எடுத்து நிலத்திலிட்டு உழுவதன் மூலம் நில வளம் மேம்படுகின்றது.
சாம்பல் இடுதல்
நிலத்திற்குச் சாம்பல் இடும் நுட்பமும் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட் ஒன்றாகும். சாம்பல் இடுவதன் மூலம் நிலத்தில் பல்வேறு கனிமங்களின் அளவும், தாது உப்புக்களின் அளவும் கூடுகின்றது. சாம்பல் இட்டு உழுத நிலத்தில் பயிரிடப்படும் பயிர் தனக்குத் தேவையான சாம்பல் சத்தையும், தாது உப்புக்களையும, பல்வேறு நுண்ணு£ட்டத் தனிமங்களையும் இயூல்பான முறையில் பெற்றுக் கொள்கின்றது. அது மட்டுமின்றி பயிர் பூசண நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது. சாம்பல் இடுவது நிலத்தில் நூற்புழுத் தாக்குதலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
10 மூடை உமியை எரிக்கும் பொழுது 1 மூடை உமிச் சாம்பல் கிடைக்கின்றது. எனவே 1 மூடை உமிச்சாம்பல் இடுவது என்பது 10 மூடை உமியை நிலத்தில் இடுவதற்குச் சமமானது. அரிசி ஆலைகளில் கிடைக்கும் உமிச் சாம்பல் மட்டுமினறி செங்கல் காளவாசல்களிலிருந்து கிடைக்கும் விறகுச் சாம்பலையும் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 25 கிலோ எடை கொண்ட 40 மூடை சாம்பல் இடலாம்.
எலும்புத்தூள் இடுதல்
இறந்து போன கால்நடைகளின் எலும்புகளையும், கொம்பு போன்ற பாகங்களையும் சேகரித்து, அவைகளைத் தீயில் வேக வைக்க வேண்டும். செங்கலைக் காளவாசலில் வைத்து எரிப்பதைப் போல, எலும்பு, கொம்பு போன்றவைகளையும், விறகு, கரி போன்ற உரிபொருட்களையும் மாறி மாறி அடுக்கி மண்வைத்துப் பூசித் தீ வைத்துவிட வேண்டும். விறகு, கரி போன்றவை நன்கு வெந்து தணிந்த பின், ஓரிரு நாட்கள் கழித்து எலும்பு, கொம்பு இவைகளை எடுத்துவிட வேண்டும். இவைகள் நன்கு உடைந்து நொறுங்கும் தன்மையுடன் இருக்கும். இவைகளை நாம் நொறுக்கி நிலத்தில் தூவி விடலாம். நிலத்தில் உள்ள கரையாப் பாசுவரத்தைக் கரைத்துக் கொடுக்கும் நுண்ணுயிர்கள், வெந்து போன இந்த எரும்புக் கழிவுகளை சிதைத்துப் பயிர்களுக்கான மணிச்சத்தாக மாற்றிக் கொடுக்கும்.
No comments:
Post a Comment