''அசோலா வளர்க்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், சரி வர வளரவில்லை. சரியாக வளர்த்தெடுக்க எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும்?''
.
அசோலா வளர்ப்பு நிபுணரும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் தொழில்நுட்ப வல்லுநருமான முனைவர். பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.
''அசோலா என்பது நுண்ணியப் பெரணி வகை உயிரி. இதை உற்பத்தி செய்யும்போது, சிறு தவறு நடந்தாலும், சரியாக வளராது. பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். 5 அடி நீளம், 3 அடி அகலம் என்ற வகையில் தொட்டியில் அளவு இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும். தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை தண்ணீரை நிரப்பி, ஒரு கிலோ சாணம், ஒரு கைப்பிடி பாறைத்தூள், ஒரு கைப்பிடி அசோலா விதை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கிவிட வேண்டும்.
இந்த பாறைத்துளிதான், அசோலா வளர்வதற்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள்... போன்றவை உள்ளன. அதனால்தான், கட்டாயம் பாறைத்தூள் போட வேண்டும் என்று சொல்கிறோம். சில பகுதிகளில், பாறைகள் இருக்காது. அங்கு ஆழ்குழாய்க் கிணறு எடுக்கும் போது, வெளியில் வந்த மண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் முறையாகச் செய்தால், அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். தொடர்ந்து சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டு வந்தாலே, பல்கிப் பெருகி விடும். உங்கள் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து கிடைக்கும் தூள்தான் பாறைத் தூள். ஒருவேளை உங்கள் பகுதியில் கிடைக்கும் பாறைத் தூளில் இரும்பு, மக்னீசியம்.... போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அசோலா பெருகுவதற்கு நாட்கள் பிடிக்கும். இந்தக் குறையைப் போக்க, கடைகளில் விற்கப்படும் ராக்பாஸ்பேட் தூளை ஒரு கைப்பிடி அளவுக்குப் போடலாம். பாறைத் தூள் கிடைக்காத பகுதியில் உள்ளவர்களும், இந்த ராக்பாஸ்பேட் தூளைப் பயன்படுத்தலாம். இது இயற்கையானப் பொருள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா. நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். பால் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.''
தொடர்புக்கு, செல்போன்: 93872-12005
அசோலா தொட்டியில் நுளம்பு பெருகுகிறது; தடுப்பது எப்படி?
ReplyDeleteAAO exam preparationku uthaviyaka ungal
ReplyDeleteMateriali anupungal