உங்களுக்காக நாங்கள் எங்கள் நிலத்தில் தேக்கு வளர்க்கிறோம்... பாக்கு வளர்க்கிறோம்! இருபது ஆண்டுகளுக்குப் பிறகு... நீங்கள் லட்சாதிபதி... கோடீஸ்வரன்...!' என்றபடி 90-களில் தமிழக மக்களின் பணத்தை 'அனுபவி'த்த பலே பேர்வழிகளை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. கடைசியில், காய்ந்த செடியைக் கூட கண்ணில் காட்டாமல் அந்த 'அனுபவ'ஸ்தர்கள் ஓடிவிட, பணத்தைக் கொடுத்தவர்களின் பரிதாப நிலை இன்று வரை மாறவில்லை.
இந்த நிலையில், 'கார்பன் டிரேடிங்' என்ற பெயரில் 'மரம் வளர்த்தால் மகாராஜாவாகலாம் வாங்க' என்று உலக அளவில் தற்போது விளம்பரங்கள் கொடிகட்டுகின்றன. இன்டர்நெட்டில் கடைவிரித்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் இலுப்பக்குடி வரை 'கார்பன் டிரேடிங்' என்பது ஊடுருவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 'கார்பன் டிரேடிங் என்றால் என்ன... அது உண்மையா... எங்கள் தோட்டத்தில் நாங்கள் மரம் வளர்க்க வெளிநாட்டிலிருந்து பணம் கொடுப்பார்களாமே இது எப்படி சாத்தியம்...?' -இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் பசுமை விகடனுக்குக் கடிதங்களும் தொலைபேசி விசாரிப்புகளும் தொடர ஆரம்பித்துள்ளன. இதையடுத்து, அதைப்பற்றி தீவிரமாக விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
‘கியோட்டோ' வழிகாட்டி!
உலக அளவில் வேர்விட ஆரம்பித்திருக்கும் ஒரு வியாபாரம்தான் 'கார்பன் டிரேடிங்'. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கோடு கிளம்பிய ஒரு பொறிதான் இதற்கு அடிப்படை. உலகளவில் அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பெருமளவில் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுக்களால், குறிப்பாக கார்பன்-டை-ஆக்ஸைடினால் பூமி பெருமளவில் வெப்பமடைந்து வருகிறது. பூமி மற்றும் காற்று மண்டலத்தைக் குளிரவைக்கவும்... காற்றைச் சுத்தப்படுத்தவும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும்.
'கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக அளவில் வெளியிடும் ஒவ்வொரு தொழிற்சாலையும் உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் அவர்களின் சார்பாக மரங்களை நட்டு, காற்றில் அதிகப்படியாக இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவைக் குறைக்கவேண்டும்' என்று 1997-ம் ஆண்டு ஜப்பானின் ‘கியோட்டோ' நகரில் கூடி உலக நாடுகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதையடுத்துதான், 'கார்பன் டிரேடிங்' ஆரம்பமானது.
உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் கார்பன் டிரேடிங்கில் கால்பதித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ‘டிஸ்ட்’, ஜப்பானில் இருக்கும் ‘ஜப்பான் கார்பன் ஃபைனான்ஸ் லிமிடெட்’, பிலிப்பைன்ஸில் இருக்கும் ‘ஏசியன் டெவலப்மென்ட் பேங்க்’ ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. நம்மூரிலும் பல நிறுவனங்கள் இதில் கால்பதிக்கும் நோக்கோடு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
இந்த வியாபாரம் எப்படி நடக்கிறது?
|
குமாரவேலு
|
மரம் வளர்ப்போருடன் மேற்கண்ட நிறுவனங்கள் ஒப்பந்தமிட்டுக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு குறைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு பணம் கொடுக்கும். அந்த மரங்களால் குறிப்பிட்ட வாயு எந்த அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை அளவெடுத்துக் கொள்ளும் அந்த நிறுவனம், ஏதாவது ஒரு தொழிற்சாலையிடம் அதைக் கணக்குக் காட்டி பணமாக்கிக் கொள்ளும். இதைக் 'கிரிடிட்' என்கிறார்கள். இந்த 'கிரிடிட்', தொழிற்சாலையின் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, அந்தத் தொழிற்சாலை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைக் குறைத்திருக்கிறது என்று அர்த்தமாகிவிடும்.
கார்பன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நேரடியாகவும் சேட்டிலைட் மூலமாகவும் மரங்களை கண்காணித்தபடி இருப்பார்கள். அதாவது, செடி நன்றாக வளர்கிறதா... பாதுகாப்பாக இருக்கிறதா... என்றெல்லாம் பார்ப்பார்கள்.
கார்பன் டிரேடிங் மூலம் பணம் கிடைப்பதுடன், மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் உட்பட அனைத்துப் பயன்களையும் விவசாயிகளே எடுத்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் லாபம்.
கார்பனும்... கத்திரிக்காயும்...
இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம்... உண்மையிலேயே பணம் கிடைக்குமா... இதற்காக யாரை அணுகுவது..? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைதேடி, தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலுவைச் சந்தித்தோம்.
‘‘கார்பன் டிரேடிங் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை கிரகித்து சீதோஷண நிலையை சமமாக வைத்திருக்க மரங்கள் உதவுகின்றன. இதை வைத்துக் கணக்குப் போட்டுதான் உலக அளவில் கார்பன் டிரேடிங் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தமிழக வனத்துறையில் இதற்கென தனியாக ஒரு செல் உள்ளது. வனத்துறையின் உயர் அதிகாரிகளான ஓஜா மற்றும் ஜெயின் அலாவுதீன் ஆகியோர் அதற்கு பொறுப்பாளர்களாக உள்ளனர்'' என்று சொன்னவர், அவர்களை நம்மிடம் பேச வைத்தார்.
''கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ளவென்று பூமியில் இருக்கும் ஒரே பொருள் மரம்தான். அதனால்தான் மரம் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறோம். ஐ.பி.சி.சி. என்றழைக்கப்படும் 'இன்டர்கவர்மென்டல் பேனல் ஃபார் க்ளைமேட் சேஞ்சஸ்' என்ற அமைப்புதான் 'கார்பன் டிரேடிங்' என்பதை மேற்பார்வையிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம்தான் இந்த அமைப்பு.
பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது கார்பன் டிரேடிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வியாபாரம் நேரடியாக நடைபெறவில்லை. பங்கு வர்த்தகம் போல இன்டர்நெட் மூலமாக நடக் கிறது. அதனால், கார்பனின் விலை என்பது கத்திரிக்காய் விலை போல இஷ்டத்துக்கு ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. விலையைக் குறைவாக கொடுத்து கொள்முதல் செய் வதிலேயே பலரும் குறியாக இருக்கிறார்கள். உலக அளவில் நடக்கும் கார்பன் டிரேடிங் குறித்த விஷயங்களை மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறோம்.
நம்ப வேண்டாம்!
இந்தியாவைப் பொறுத் தவரை எந்த நிறுவனமும் கார்பன் டிரேடிங்கில் இதுவரை ஈடுபடவில்லை. அப்படி யாராவது சொன்னால் அதை நம்ப வேண்டாம். இது தொடர்பாக முழு அதிகாரம் படைத்தது மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்தான். அங்கிருந்து முழுமையான தகவல் கிடைத்த பின்பு நாங்களே கார்பன் டிரேடிங் பற்றி தகவல் வெளியிடுவோம். தற்போதைக்கு பல்வேறு நிறுவனங்களும் மரம் வளர்ப்புக்காக அங்கே பதிவு செய்து வைத்துள்ளன. ஆனால், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வேறு வகைகளில் (பார்க்கப் பெட்டிச் செய்தி) குறைக்கும் தொழிற்சாலைகள் கார்பன் டிரேடிங் மூலம் லாபம் பார்க்கின்றன. மற்றபடி மரம் வளர்ப்புக்கு அனுமதி வரும் வரை காத்திருப்பதே நல்லது'' என்று விஷயத்தைத் தெளிவாக எடுத்து வைத்தனர் ஓஜாவும் ஜெயின் அலாவுதீனும்.
எப்படியும் லாபம்தான்!
கடைசியாக நம்மிடம் பேசிய குமாரவேலு, ‘‘தமிழகத்தில்தான் தரிசு நிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இப்படி நிலங்களைப் போட்டு வைத்திருக்கும் விவசாயிகள் பெரிதாகச் செலவு செய்யாமல் மரம் வளர்ப்பில் ஈடுபடலாம். மரமாக வெட்டி விற்பனை செய்தாலே ஆயிரக்கணக்கில் வருமானம் வரும். இன்னொரு பக்கம் கார்பன் டிரேடிங் என்பது கூடுதல் வருவாயாக வரவிருக்கிறது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மரம் வளர்ப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வரவேண்டும். எல்லா வகையிலும் உதவ வனத்துறை தயாராக இருக்கிறது.'' என்றார் குமாரவேலு.
கார்பன் கணக்கு!
‘‘கார்பன் டிரேடிங் எப்படி கணக்கிடப்படுகிறது’’ என்ற கேள்விக்கு, வனத்துறை உயரதிகாரியான ஜெயின் அலாவுதீன் (அலைபேசி: 94436-72068) பதில் கொடுத்தார்.
''மரம் நட்ட முதலாம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளில் அந்த மரம் எந்த அளவுக்கு கார்பன்-டை- ஆக்ஸைடை கிரகித்துள்ளது என்பதைக் கணக்கிட்டுதான் விவசாயிக்குப் பணம் கொடுக்கப்படும். ஒரு தோட்டத்தில் இருக்கும் மரங்கள் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைக் கிரகித்துள்ளன என்பதை ஒரு மரத்தை வெட்டுவதன் மூலம் சராசரியாக கணக்குப்போடு வார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். உங்களிடம் ஒப்பந்தம் செய்வதற்கேற்ப ஒவ்வொரு முறையும் கணக்கெடுத்து பணம் கொடுப்பார்கள்.
உதாரணத்துக்கு... ஒரு ஹெக்டேரில் இருக்கும் தேக்கு மரங்கள் ஓராண்டில் கிரகிக்கும் கார்பன் -டை-ஆக்ஸைடு, 10 டன் கார்பனாக மரங்களில் சேர்ந்திருக்கும். அந்த நிலத்தில் 2 டன் அளவுக்கு கார்பன் சேர்ந்திருக்கும். மொத்தம், 12 டன் கார்பன். ஒரு டன் கார்பனில் 3.67 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இருக்கும். 12 டன்னுக்கு கணக்குப்போட்டால் மொத்தம் 44,040 கிலோ. ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடு என்பதை '1 கிரிடிட்' என்று கணக்கிடுகிறார்கள். 1 கிரிடிட் 10 முதல் 15 டாலர் என நாடுகளுக்கு ஏற்ப விலை வைக்கப்படுகிறது. 1 டாலர் 45 ரூபாய் வீதம் கணக்கிட்டால், குறைந்தபட்சமாக 1 கிரிடிட் என்பது 450 ரூபாய். ஒரு ஹெக்டேரில் 44 கிரிடிட் வருகிறது. ஆக, ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்துக்கு 19,800 ரூபாய் கிடைக்கும்'' என்றார்.
மரம் மட்டுமல்ல..!
ஓரிடத்தில் வசிக்கும் மக்கள், அந்த இடத்தை மரம் வளர்ப்புக்காக கொடுத்துவிட்டு, நகர்ப்புறங்களைத் தேடிச் சென்று கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும் ஏதாவது ஒரு தொழில் ஈடுபட்டால், ஆண்டுதோறும் அவர்கள் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியாகக் காரணமாக இருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுத்து, அதை ஏற்கெனவே அவர்கள் வசித்த இடத்தில் மரம் வளர்க்கும் நபரின் கணக்கில் கழித்துவிடுவார்கள்.
மரங்களிலிருந்து மட்டுமல்ல... ஏற்கெனவே கார்பன் -டை-ஆக்ஸைடை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிலை கைவிட்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை குறைவாக வெளியிடும் அல்லது அறவே வெளியிடாத வேறு தொழிலை மேற்கொண்டாலும் கார்பன் டிரேடிங் மூலம் பணம் பார்க்கலாம். அதாவது, கார்பன்-டை -ஆக்ஸைடை அளவுக்கு அதிகமாக வெளியிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இத்திட்டம். சூரிய ஒளி, காற்றாலை போன்ற இயற்கை சார்ந்த விஷயங்களை பயன்படுத்துவதன் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியாவதைக் குறைக்க முடியும். இந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரை 76 கம்பெனிகள் பலனடைந்து வருகின்றன.
அனுமதியா.. எதற்கு?‘
'கார்பன் டிரேடிங்கிற்கு இந்தியாவில் இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை' என்று சொல்லப் படும் அதேசமயம், 'ஒரு ஏக்கரில் மரம் வளர்த்தால் கார்பன் டிரேடிங் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் கிடைக்கும்' என்று அடித்துச் சொல்லிக் கொண் டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.ஆர்.தமிழ்வாணன். 'கிரீன் இந்தியா கார்பன் மிட்டிகேஷன் அண்டு டிரேடிங் லிட்' என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், ‘‘கார்பன் வியாபாரம் செய்ய யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மத்திய வனத்துறை இதற்கு எந்தக் கொள்கையையும் வகுக்கவில்லை. இதைக் கட்டுப்படுத்தச் சட்டமும் கிடையாது. எல்லாமே இன்டர்நெட்டில் நடக்கும் வியாபாரம்தான். வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் இங்கே கார்பன் டிரேடிங்கில் ஈடுபடுகின்றன. அதை வைத்து தமிழக விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெற்றுத் தருவதற்காக எங்கள் நிறுவனம் பாடுபட்டு வருகிறது’’ என்று சொல்கிறார்.
அனுமதியில்லை... ஆனாலும்!
கார்பன் டிரேடிங்கில் கால்பதித்திருக்கும் அமெரிக்காவின் 'டிஸ்ட்' நிறுவனத்துக்கு சென்னையில் ஆலோசகராக இருப்பவர் பிரபாகரன். அவர் பேசும்போது, ‘‘டிஸ்ட் நிறுவனத்தின் சார்பாக 2002-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார்பன் டிரேடிங் வர்த்தகத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை. மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அதற்குள்ளாகவே நாங்களே முன்வந்து விவசாயிகளை மரம் வளர்ப்பில் ஈடுபடுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் செய்யாறு, வந்தவாசி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் மத்தியில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 45 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்க வைத்துள்ளோம். பெரும்பாலும் சவுக்கு மரத்தைதான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். விலை உயர்ந்த மரங்களை நடவு செய்ய ஆலோசனை வழங்கி வருகிறோம். எந்த வகையான மரமாக இருந்தாலும் நடவு செய்து 3 மாதம் கழித்து மரக்கன்று நன்றாக வளர்ந்திருந்தால் மரம் ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 12 காசு என்கிற விகிதத்தில் மானியம் கொடுக்கிறோம். நிலத்தில் அந்த மரம் உயிரோடு நிற்கும் வரை மானியம் தொடரும்.
மரத்துக்கு நாங்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. அம்மரங்கள் உறிஞ்சும் கார்பன் எவ்வளவு என்ற அளவு மட்டும்தான் எங்களுக்குத் தேவை. இதற்காக மட்டுமே விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை கொடுக்கிறோம். இப்போதைக்கு இது அதிகாரப்பூர்வமான தல்ல. ஆனால், நிச்சயமாக வரவிருக்கும் ஒரு வியாபாரம்தான். அதனால்தான் கைக் காசைப் போட்டு நாங்களே இதைத் தொடங்கியுள்ளோம். அனுமதி கிடைத்துவிட்டால், நாங்கள்தான் இதில் முன்னோடியாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்துவருகிறோம்’’ என்றார் (அலைபேசி: 98411-36570)
தமிழக வனத்துறையின் கார்பன் டிரேடிங் செல் அமைப்பின் தொலைபேசி: 044-22750297.
|
No comments:
Post a Comment