சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி?
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சேரன்மாதேவி தோட்டக்கலை உதவி இயக்குனர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு மானியம்
உலகமெங்கும் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி, வருங் கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும் அபரிமிதமாக நீரை பயன்படுத்துவதை விட, அளவாக நீரை பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே தான் நீர் சிக்கனத்துக்கும், நிறைமகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும் சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அவற்றை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்க உதவுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்குகிறது.
பயன்கள்
சொட்டுநீர் பாசனத்தினால் நீரும், சத்துக்களும் வேரினில் கிடைக்கின்றன. நீரை சிக்கனப்படுத்தலாம். பாசனத்துக்கு தனியே ஆள் விட தேவையில்லை. அதனால் பாசன ஆள் செலவு முற்றிலும் குறைகிறது. சத்துக்குள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. ஒரு ஆய்வின்படி தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்போது உரத்தில் 30 முதல் 50 சதம் வரை மட்டுமே பயிருக்கு கிடைக்கிறது. அதையே கரையும் உரப்பாசனமாக சொட்டுநீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 95 சதம் தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும் போது 50 சதம் மட்டுமே கிடைக்கும் சாம்பல் சத்து, கரையும் உரப்பாசனமாக சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 80 சதம் கிடைக்கிறது.
வேரை நீர் நேரடியாக சென்றடைவதால், இடையே களைகள் முளைப்பது குறைகிறது. களையெடுக்கும் செலவு பெருமளவு மிச்சமாகிறது. குறிப்பாக களையெடுத்து மீள முடியாத வாழையில் சொட்டு நீர் பாசனம் ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றி பயிர்கள வளர்வதால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. மொத்தத்தில் 30 சதம் முதல் 60 சதம் வரை மகசூல் கிடைக்கிறது. முன்னதாகவே முதிர்ச்சிக்கு வருவதால், முன்கூட்டியே கையில் காசு பார்த்து விடலாம். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும், எடையும், பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
யாருக்கு மானியம்?
சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளை கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக நீராதாரம் கொண்ட சின்னச் சிறு விவசாயிகள் இரண்டு, மூன்று பேர் சேர்ந்தும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
வருவாய்த்துறை நில வகைபாட்டின்படி நன்செய் நிலமென்றால் 2½ ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமென்றால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலமுள்ளவர்கள் சிறு, குறு விவசாயி. பயன் பெற விரும்புவோர் சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வருவாய் தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்
நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியை தெளிவாக குறிப்பிடும் ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் அதற்கான வருவாய் தாசில்தாரிடம் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்ப்பயிர்கள், பழ மரப்பயிர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் சேரன்மாதேவி, அம்பை வட்டார சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் சேரன்மாதேவி, அம்பை பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இதர வட்டார சிறு, குறு விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
No comments:
Post a Comment