Friday, September 2, 2016

விவசாய நிலம் வாங்க 10 லட்சம் வரை கடன்

விவசாய நிலம் வாங்க 10 லட்சம் வரை கடன்

சாதாரணமாக, நிலம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெறுவது சற்றுக் கடினமே. வியாபார நோக்கில் இல்லாமல், சொந்தமாக பயிர் செய்ய நினைக்கும் சிறு, குறு விவசாயிகள், சொந்தத்தில் நிலம் வாங்கி பயிர் செய்வதற்கு கடன் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில், பொதுமக்களுக்கு உதவி வருகிறது ‘தேசிய விவசாய கிராமப்புற மேம்பாட்டு வங்கி’யான ‘நபார்டு’ (NABARD-National Bank for Agriculture and Rural Development).இதற்காகவே, ‘விவசாயிகள் நிலம் வாங்கும் திட்டம்’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது நபார்டு. இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் வாங்க உதவி செய்கிறார்கள். 2 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடன் பெற சாத்தியம் உண்டு.
நபார்டு வங்கியானது, நேரடியாக கடன் தருவதில்லை. நாடு முழுக்க ஆங்காங்கே இருக்கும் வங்கிகள் மூலம் தான் இந்தக் கடனை வழங்கிவருகின்றது. இந்தக் கடனைப் பெற விரும்பும் நபர், சிறு அல்லது குறு விவசாயி என்கிற வரையறைக்குள் இருக்க வேண்டும் (2.5 ஏக்கருக்கு கீழே நிலம் வைத்திருப்பவர்கள்தான் சிறு, குறு விவசாயிகள் என்று வரையறுக்கப்படுகின்றனர்), வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உள்ளன. நிலமற்ற விவசாயிக்கும் இந்தக் கடன் வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ‘தாட்கோ’ (TAHDCO – Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited) மூலமாக நிலம் வாங்க சிறப்புத் திட்டத்தையும் நடைமுறையில் வைத்திருக்கிறது நபார்டு.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற, உங்களின் வருட வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்; வயது 18 – 55 வரை இருக்கவேண்டும்; உங்கள் குடும்பத்தில் யாரும் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த வகையிலும் மானி யம் பெற்றவராக இருக்கக் கூடாது; வேறு இனத்தவரிடம் நிலத்தை வாங்க வேண்டும்; 5 ஆண்டுகள் வரையில் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது; நிலத்தை வாங்கியதும் விவசாயத்தைத் தொடங்க வேண்டும்; நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் இதற்கு உண்டு. இந்த வகையில், நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வழி காட்டி மதிப்பைப் பொறுத்தே கடன் தொகை கிடைக்கும்; அதிகபட்சமாக 7.5 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். இதற்கு 30% மானியம் உண்டு. அதிகபட்சமாக 2.25 லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்க நினைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், ‘தாட்கோ’ நிறுவனத்துக்கு ‘ஆன் லைன்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் தரச்சொல்லி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடனைப் பெறலாம்.
உங்களிடம் சொந்த நிலம் இருக்கும்பட்சத்தில், குறுகியகால பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இது, விளைபொருட்களுக்கு தகுந்தபடி மாறுபடும். நெல், கரும்பு, வாழை என ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் என்று வங்கிகள் நிர்ணயம் செய்து வைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்தப் பயிர்க்கடன் வழங்கப்படும். நிலத்தின் மதிப்பில் 80% முதல் 90% வரை, நிலத்தை மேம்படுத்துவதற்காகவும் கடன் வழங்கப்படுகிறது. கிணறு வெட்டுதல், போர் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்தலாம்.
நாட்டின் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் சுமார் 30 சதவிகித பொருட்கள், போதுமான கிடங்கு, சந்தை, பதப்படுத்தல் போன்றவை இல்லாமையால், வீணாகி குப்பைக்குச் செல்கின்றன. இதற்காகவே உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு தனி அமைச் சகம் அமைக்கப்பட்டு, அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 25% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தியையும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்!”

No comments:

Post a Comment