மாபெரும் புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக கியூபாவின் அரசின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கியூபா மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.(November 26, 2016)
ஹவானா: தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.தடம் பதித்து நடப்பவனே மாமனிதன் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. மாபெரும் புரட்சி நாயகனாக அமெரிக்காவை அலற வைத்தவர் பிடல் காஸ்ட்ரோ. உடல் நலக்குறைவினால் இரவு 10.30 மணிக்கு அவர் மரணமடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது கியூபா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு
அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. 90 ஆண்டுகாலம் கியூபாவில் வாழ்ந்து கியூபா மக்களின் மனதில் மட்டுமல்லாது உலக மக்களின் புரட்சியை ஆதரிக்கும், ரசிக்கும் மக்களின் ஹீரோவாக மனதில் நிறைந்திருந்த பிடல் காஸ்ட்ரோ இன்று ஹவானாவில் காலமானதாக கியூபா அதிபரும் சகோதருமான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
• 1926 ஆகஸ்ட் 13 அன்று கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறந்தார். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.
•விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
•சிறு வயது முதலே அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ, தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். 1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார்.
•கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை. என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.
•பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பரவலாகப் பேசப்பட்டாலும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
•பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
•தொழில் முறை வழக்கறிஞரான இவர் மிகச்சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கு மக்கள் மட்டுமல்ல நீதிபதிகளும் கூட மயங்கிப் போவார்களாம்.
• சேகுவேரா உடன் இணைந்து கியூபாவில் ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கொரில்லா முறை தாக்குதலை நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைபற்றினார் பிடல் காஸ்ட்ரோ. பாடிஸ்டாவை தலை தெறிக்க ஓட வைத்தார்.
• காஸ்ட்ரோவின் பல முயற்சிகள் தோல்வியை தழுவினாலும் இறுதியில் அவரே வெற்றி பெற்றார். தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, கடந்த 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், கடந்த 1976 முதல் 2008 வரை அந்நாட்டு அதிபராகவும் பொறுப்பு வகித்தார்.
•கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கிய இவர், 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்டார். கியூபாவில் அனைவருக்கும் இலவச கல்வியை அறிமுகம் செய்தார்.
•உடல்நிலை சரியில்லா காரணத்தால் கடந்த 2008ம் ஆண்டில் பதவியில் இருந்து விலகினார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்நாட்டு அதிபரானார். சகோதரருக்கு ஆலோசனைகளை வழங்கினார். •மாபெரும் புரட்சி நாயகனாக திகழ்ந்த பிடல் உலகின் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ, இன்று ஹவானாவில் மரணமடைந்து விட்டதாக அவரது சகோதரரும், அந்நாட்டு அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
•அவரது மறைவு கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் புரட்சியை விரும்பும் நேசிக்கும் அனைவருக்கும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
• புரட்சியாளராகவும் போராளியாகவும் மட்டுமல்ல சிறந்த ஆட்சியாளராகவும் வெற்றி பெற்ற பிடல் காஸ்ட்ரோவின் பெயரை இன்றைய தலைமுறையினர் அத்தனை எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்பதே உண்மை
தாய் நாட்டு விடுதலை அல்லது வீர மரணம்.. புரட்சியாளர்களின் ஆதர்ஷ நாயகன் பிடல் காஸ்ட்ரோ
ஹவானா: 1959 ஹவானா நகருக்குள் வெற்றி நாயகனாக நுழைந்தபோது, உலக வரலாற்றிலும் நுழைகிறோம் என பிடல் காஸ்ட்ரோ அறிந்திருக்கவில்லை. தேசிய வாதியாகவும், ஜனநாயக வாதியாகவும் அரசியல் பயணத்தை தொடங்கிய காஸ்ட்ரோ, உலகெங்கிலும் உள்ள புரட்சியாளர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் விளங்கியவர். லத்தின் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளர்களான சைமன் போலிவார், ஜோஸ் மார்டி, சேகுவேரா ஆகியோர் வரிசையில் இடம் பிடித்துள்ளார் பிடல் காஸ்ட்ரோ. "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தாய் நாடு அல்லது வீர மரணம்.." என்ற அவரின் வீர முழக்கம் உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. தனது மக்களுக்கு சமத்துவமும், சுயமரியாதையும் கொண்ட வாழ்க்கையை ஏற்படுத்தி தருவதற்காக தனது உயிரையும் பணயம் வைத்தார்.
கொலை முயற்சி
ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பெடரலை கொல்ல சுமார் 700 முறை முயற்சித்தது அமெரிக்கா. 1960க்கு பிறகு பதவியேற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களும், இக்கொலை முயற்சியை தங்களது அரசியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தனர். உலகளாவிய அதிகாரம் இல்லாத ஒரு சிறிய தீவின் தலைவரை கொல்ல அமெரிக்கா தொடர்ந்து முயன்றது. ஆனால் தன்னை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.
சேகுவாராவை கொன்றனர்
சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏவும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தணித்துக் கொண்டது. ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது அணு குண்டுகளாலோ, போராலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோதான்.
கம்யூனிஸ்ட்டானார்
1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 1941இல் தனது 15வது வயதில், பிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் அறிமுகமானது. காஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறினார்.
அமெரிக்க கையாள்
காஸ்ட்ரோவிற்கு கம்யூனிசம் பற்றி முதலில் எதுவும் தெரியாது. ஆனால் கியூப மக்களை முதலாளித்துவ நாடுகள் எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார். அப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் என கூறப்படும் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.
வரலாறு என்னை விடுதலை செய்யும்
பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே பிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைந்தார். அவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில்'வரலாறு என்னை விடுதலை செய்யும்'
என்ற பெயரில் வெளிவந்தது.
ஆயுத புரட்சி
1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர். 1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.
அசராத பிடல் காஸ்ட்ரோ
1959ஆம் ஆண்டுக்கு பிறகு கியூபா தன்னை கம்யூனிஸ நாடாக அறிவித்துக்கொண்டது. தனது நாடு ஒருபோதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாது என்று அறிவித்தார். தனது நாட்டின் செல்வ வளங்கள் அனைத்து கியூப மக்களுக்கே என்றார். அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகள், கியூபாவை பணிய வைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. இதனால், கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்ற முத்திரையையும் அபாண்டமாக சுமத்தியது. ஆனாலும், பிடல் காஸ்ட்ரோ அசரவில்லை.
புரட்சியாளர்களின் ஆதர்ஷ நாயகன்
1960ஆம் ஆண்டு, ஐநா மன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. 4 மணி 29 நிமிடம் கொண்ட இந்த மிக நீண்ட உரையாகும். "உலகத்தில் எந்த மூலையிலும், சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்... உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்ககள் நமது சகோதரர்கள்" என்ற அவரின் வார்த்தைகள் உலகமெங்கும் புரட்சியாளர்கள் மனதில் எப்போதும் எதிரொலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
No comments:
Post a Comment