Friday, October 28, 2016

இது மட்டும் இருந்தா போதும்.. நீங்களும் 'அம்பானி' ஆகலாம்..!

  ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து மாதம் சம்பளம் வாங்குவதை விட ஒரு தொழில் தொடங்கி அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசையா உங்களுக்கு..

  நாட்டில் சுமார் 80% மக்கள் வேலை பார்த்து வரும் நிலையில் 20% பேர்தான் தொழிலதிபர் ஆகி அவர்களுக்கு வேலைக் கொடுக்கின்றனர். இவர்களில் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர்கள் சுமார் 10% பேர்கள்தான். எனவே நீங்களும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆக வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.

  உறுதியான நோக்கம் மற்றும் முடிவெடுக்கும் திறன் 
  வாழ்க்கையில் ஒரு உறுதியான நோக்கத்தைக் கையில் எடுத்து அதை நோக்கி எடுக்கும் சரியான முடிவுகள்தான் உங்களை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றும். நீங்கள் இரவு பகல் பாராது எந்தவித சோர்வும் இன்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வேலையில் சலிப்பு வந்துவிட்டால் நீங்கள் சறுக்கிவிடுவீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தூக்கம் வரவில்லையா? 
  ஒரு பணியை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்தப் பணி முடியும் வரை உங்களுக்குத் தூக்கம் வரவில்லையா? அப்படியென்றால் நீங்களும் ஒருநல்ல தொழிலதிபர்தான். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் ஒரு ஏற்றம் இருக்க வேண்டும். மேலும் மேலும் உயர வேண்டும் என்ற இலக்குதான் உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்து வரும் பணியை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்ற வேண்டும்.

ரிஸ்க் எடுக்க வேண்டும் 
  எந்த ஒரு தொழிலதிபரும் ரிஸ்க் எடுக்காமல் தொழிலதிபர் ஆக முடியாது. அதே நேரத்தில் ரிஸ்க் எடுத்தவர்கள் அனைவருமே வெற்றிகரமான தொழிலதிபர் என்று அர்த்தம் கிடையாது.

ரிஸ்க் எடுப்பதற்கு முன்பு 
  ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை எடுப்பதற்கு முன், இந்த ரிஸ்க் நம்மையும் நமது நேரம், முதலீடு ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கும், இந்த ரிஸ்க் பெயிலர் ஆனால் அதற்கு என்னென்ன மாற்று ஏற்பாடு என்பதைத் திட்டமிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒருவேளை அந்த ரிஸ்க் நமக்கு எதிராகத் திரும்பினாலும் அதைச் சந்திக்கும் மன வலிமை வேண்டும்.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய ஈடுபாடு 
   வெற்றி பெற்ற தொழிபதிபரை பாருங்கள் அல்லது அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் படித்து பாருங்கள். நிச்சயம் அனைத்து வெற்றிகரமான தொழிலதிபர்களும் கண்டிப்பாகத் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். இதுதான் ஒரு தொழிலதிபருக்கு தேவையான முதல்படி. அதேபோல் கடின உழைப்பு. மனதிலும் உடலிலும் சோர்வின்றி உழைக்கும் தன்மை மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடனும் நேர்மையுடனும் தொழிலில் கொண்ட ஈடுபாடு நிச்சயம் ஒருவரை வெற்றி பெற செய்யும்.

ஒத்துப் போகுதல் மற்றும் வளைந்து கொடுத்தல் 
  நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதம் தொழிலுக்குச் சரியாக வராது. நம்மைவிட வயது குறைந்தவரோ அல்லது அனுபவம் குறைந்தவரோ ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் தற்போதைய தொழில் போட்டி நிலையில் வளைந்து கொடுக்கும் குணமும் முக்கியம். நெளிவு சுளிவுகளுடன் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் நீங்களும் ஒரு தொழிலதிபர் தாங்க...

மனிதாபிமானம் 
  தொழில் நடத்துபவர்களுக்குக் கண்டிப்பாக மனிதாபிமானம் இருக்க வேண்டும். நம்முடைய தொழிலை பெருக்கி கொள்ளை லாபம் பெற வேண்டும் என்பதற்காக அளவு கடந்த இலாபத்திற்குப் பொருட்களை விற்பது, வாடிக்கையாளர்களிடம் ஏளனமாகப் பேசுவது, நம்மிடம் வேலை பார்ப்பவர்களை சக்கையாகப் பிழிவது, சக தொழிலதிபர்களை மனிதாபிமானம் இன்றி நசுக்குவது போன்ற செயலைச் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் நல்ல தொழிலதிபர் என்று வேண்டுமானால் பெயர் எடுக்கலாம், ஆனால் நல்ல மனிதன் என்ற பெயரை எடுக்க முடியாது.

மார்க்கெட்டிங் அறிவு நிச்சயம் 
  ஒரு நல்ல தொழிலதிபருக்கு தான் உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மற்றும் மார்க்கெட்டிங் குறித்த நுட்பமான அறிவு அவசியம். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நமது தயாரிப்புக்குரிய மரியாதை, ஏற்ற இறக்க விலைகள் மற்றும் இதே பொருளை தயாரிக்கும் நமது போட்டியாளரின் விலை ஆகியவை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்

முதலீட்டைக் கையாளும் திறன் 
  ஒரு தொழிலதிபரின் வெற்றியின் ரகசியம் அவர் செய்யும் முதலீட்டில்தான் உள்ளது. எந்தத் தொழிலாக இருந்தாலும் இக்கட்டான நிலை ஒன்று வரும். அந்தச் சமயத்தில் கூடுதல் முதலீடு தேவைப்படும். எனவே இருக்கும் பணத்தை இம்மாதிரியான இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க எனத் தனியாக ஒரு தொகையை ஒதுக்கியிருக்க வேண்டும். இருக்கும் பணத்தை மொத்தமாகத் தொழிலில் முதலீடு செய்துவிட்டு பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழிபிதுங்கி இருப்பவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராக முடியாது

திட்டமிடல் தேவையா?
   வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவருக்குத் திட்டமிடல் முக்கியம்தான். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு செயலுக்கும் திட்டமிடல் ஒத்துவராது. சில விஷயங்களை அதன் போக்கில் விட்டுவிட்டுக் கவனிக்க வேண்டும். ஒரே ஒருமுறை திட்டமிட்டாலே அந்தக் காரியம் வெற்றிகரமாக முடிவடைந்துவிடும் என்று எண்ணக்கூடாது. ஒரு திட்டம் பலிக்கவில்லை என்றால் அடுத்த திட்டத்தை தொடங்க வேண்டும். அதேபோல் ஒரு தொழிலை ஆரம்பிக்கும்போது நமது திறமையைத் தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்தத் தொழிலில் நமக்கு என்னென்ன எல்லாம் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிளசும் மைனசு 
  பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பிளசும் மைனசும் கலந்தே இருக்கும். நம்மிடம் உள்ள பிளசை மட்டுமே களமிறங்குவது பிரேக் இல்லாத வண்டியைப் போல. எனவே நம்மிடம் என்னென்ன மைனஸ் இருக்கின்றது என்பதைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் மைனஸ் இக்கட்டான நேரத்தில் நம்மைப் பதம் பார்த்துவிடும். மைனஸ் என்ன என்பது அனுபவம் இல்லாமை, புத்தம் புதிய முயற்சி, தொழிலுக்கான சரியான நேரம் மற்றும் இடம் உள்பட ஒருசில விஷயங்கள் ஆகும். முதலில் நம்முடைய மைனசுக்கு மாற்று வழியைத் தேட வேண்டும். மாற்று வழி தெரிந்த தொழிலதிபர்கள் எந்த நேரத்திலும் தோல்வி அடைவதில்லை

நெட்வொர்க் ரொம்ப முக்கியம் 
  தொழில் செய்பவர்களுக்கு பழக்கவழக்கங்கள் ரொம்ப முக்கியம். நமது துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் வேறு துறைகளை சார்ந்தவராக இருந்தாலும், நண்பர்களை அதிகமாக்கிக் கொள்வது தன்னம்பிக்கையை வளர்க்கும். திடீரென தோன்றும் சிக்கல்களில் இருந்து விடுபட நமது நண்பர்களின் அனுபவங்கள் நமக்குப் பயன்படும். மேலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் சொல்வதற்கு நான்கு நண்பர்கள் இருந்தால் நமக்குக் கவலையே இருக்காது.

தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு 
   ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதே தொழிலை செய்யும் பலரிடம் பேசுங்கள். இந்தத் தொழிலின் இன்றைய நிலை, எதிர்காலம் ஆகியவை குறித்து புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்வதை விட அந்தத் தொழிலில் ஈடுபடும் ஒருவரிடம் பேசினால் கிடைக்கும் அனுபவங்கள் மிகப்பெரியவை.

வெளியேறத் தயங்க கூடாது 
  தொழிலில் ஈடுபடும் அனைவரும் வெற்றி பெறமுடியாது. போதுமான முதலீடு இருந்தும், துறை சார்ந்த அறிவாற்றல் இருந்தும் சிலசமயம் நாம் செய்யும் தொழில் நஷ்டமடைய நேரிடும். இருப்பினும் நஷ்டமடைந்த தொழிலை விடாப்பிடியாகத் தொடர வேண்டாம். அதை அப்படியே விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறுங்கள். எத்தனையோ தொழிலதிபர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவதாக ஆரம்பித்த தொழிலில்தான் வல்லவர் ஆகியுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சந்தேகப்படுங்கள் ஆனால் அதிலும் அளவு இருக்க வேண்டும் 
  எந்த ஒரு தொழிலையும் ஆரம்பிக்கும் முன்னர் நமக்கு நாமே சற்று சந்தேகப்பட வேண்டும். இதை நம்மால் செய்ய முடியுமா? நம் கேரக்டருக்கு இந்தத் தொழில் ஒத்து வருமா? இதே தொழிலில் உலக அளவில் சாதித்தவர்கள் இருக்கும்போது புதியதாக நுழையும் நம்மால் எந்த அளவுக்கு இதைப் புதுமையாக செய்ய முடியும் என்று சந்தேகப்படுங்கள். இதற்கு பாசிட்டிவ் பதில் கிடைத்துவிட்டால் உடனே நீங்கள் ஸ்டார்ட் செய்யலாம். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் பலமுறை யோசிப்பதில் தவறில்லை. ஆனால் ஆரம்பித்தவுடன் முழு மனதுடன் நமது எண்ணம் முழுவதும் வெற்றி என்ற இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்


No comments:

Post a Comment