Thursday, April 6, 2017

இதை உடனடியாக செய்யுங்கள்: வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!




Image result for வழுக்கை தலையிலும்தலைமுடி உதிர்வதை தடுக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் உள்ளதா?
கவலை வேண்டாம், தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியை நன்றாக வளரச் செய்வதற்கு, இயற்கையில் அற்புதமான ஒரு வழி உள்ளது.
அதிலும் முக்கியமாக இந்த முறையை செய்தால், வழுக்கை விழுந்த இடத்திலும் கூட முடியின் வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
  • தேங்காய் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்
  • விட்டமின் E கேப்ஸ்யூல்
  • கற்றாழை
செய்முறை
முதலில் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, அதை முடியின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள கிண்ணத்தை சிறிது நேரம் வைக்க வேண்டும்.
பின் அந்த எண்ணெயை முடியின் ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
குறிப்பு
இந்த செயல்முறையை வாரத்திற்கு 5 முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

விளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு



முன்னுரை

நாட்டின் எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்படும்போது காடுகளும் தோட்டங்களும் விவசாய விளைநிலங்களுமே ஆக்கிரமிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாது காப்பதில் நாட்டமுள்ள சிலரின் ஆட்சேபங்கள் பொருட்படுத்தப் படுவதில்லை. ஏதோ பெயருக்குச் சில மரங்களை நட்டுவிட்டுச் சமாதானமாகிவிடுகிறார்கள்.
நதிகளின் டெல்டாப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகத் தீவிரமான விவசாயத்தை மேற்கொண்டதால் அங்குள்ள மண் வளம் குறைந்து, விளைச்சலும் குறைந்திருக்கிறது. அணைகள் கட்டப்பட்டதால் விவசாய நிலங்களில் புதிய வண்டல் படிவதும் தடுக்கப்பட்டுவிட்டது. மண் வளமிழந்து போவது பல நாடுகளிலும் நடைபெறுகிற நிகழ்வு. விவசாய விஞ்ஞானிகள் அவ்வாறான நிலங்களுக்குப் புத்துயிரூட்டி அவற்றுக்கு வளத்தை மீட்டுத்தரப் பலவித உத்திகளைக் கையாளுகிறார்கள்.
அளவுக்கு மீறிச் சாகுபடி செய்யப்பட்டுச் சக்தியிழந்து போன மண்ணுக்குத் திரும்பவும் விளைச்சல் திறனை உண்டாக்கப் பழுப்பு நிலக்கரியையும் மரபு மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளையும் மண்ணில் கலக்கும் ஓர் உத்தியை ரஷ்ய விவசாய விஞ்ஞானி கள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உத்தி வியப் பூட்டும் வகையில் எளிமையானதாகவும் மிகுந்த பலனளிப் பதாகவும் உள்ளது.

பழுப்பு நிலக்கரித் தூள்

இந்த உத்தி தற்செயலாகக் கண்டறியப்பட்டதுதான். வளமிழந்த தோட்டங்களில் சுற்றுவட்டாரத்தில் கிடைத்த பழுப்பு நிலக்கரித் தூள் கலந்த மண்ணைப் பயன்படுத்தி ஆய்வுப் பாத்திகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்தபோது எதிர்பாராத விதமாக, அந்தப் பாத்திகளில் பயிரிடப்பட்ட தாவரங்கள் கூடுதலான பலன்களை அளித்தன.
பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகளை உட்கவர்ந்து வளர்கின்றன. அவை மடியும்போது அந்தச் சத்துகள் மீண்டும் மண்ணுக்கே போய்ச் சேர்ந்து விடுகின்றன. இது இயற்கையின் இயல்பான செயல் சுழல். தாவரங்கள் மண்ணில் புதைந்து மக்குகிறபோது பல வகையான நுண்ணுயிரிகள் அதில் உருவாகிப் பெருகிப் பழைய தாவரங்களைச் சிதைத்து அடுத்த தலைமுறைப் பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளாக விளங் கக்கூடிய சேர்மங்களாக மாற்றுகின்றன. ஆனால், தீவிரமான விவசாய நடவடிக்கைகளின்போது மண்ணுக்குத் திருப்பியளிக்கப்படுவதைவிட அதிகமான ஊட்டச்சத்துகளை அதிலிருந்து வெளியேற்றிக்கொண்டே யிருந்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மண் வளமற்றுப்போகும்.
அதன் பிறகு பெரும் பொருட்செலவில் செயற்கையான ரசாயன உரங்களைச் சரியான அளவிலும் சரியான காலங் களிலும் இட்டுத்தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். அந்த ரசாயன உரங்கள் ஓரளவுக்கு மேல் பலனளிப்ப தில்லை. அவை சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளையும் மாசுபடுத்திவிடும். பாரம்பரியமான தானியங்களின் சுவையையும் மணத்தையும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தானியங்களில் காண முடிவதில்லை. தொழு உரங்கள் ரசாயன உரங்களைவிடச் சிறந்தவை என்றாலும், அவற்றைச் சேகரிப்பது, மக்க வைப்பது போன்ற செயல்பாடுகள் காலம் பிடிப்பதுடன் கூடுதலான உழைப்பும் தேவைப்படுகிறவை.
பழுப்பு நிலக்கரி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்துபோன தாவரங்களிலிருந்து உருவானது. விவசாயப் பயிர்களையும் தோட்டப் பயிர் களையும் வளர்க்கத் தேவையான இன்றியமையாத எல்லாச் சத்துகளும் அதில் உள்ளன. அதில் நைட்ரஜன், கார்பன் போன்ற இயற்கையான ரசாயனங்கள் மிகுதியாக இருந்தாலும் உயிரிச் சேர்மங்கள் மட்டும் இல்லை. பழுப்பு நிலக்கரியை உண்டு ஜீரணித்து வளரக்கூடிய நுண்ணுயிரிகளைப் பழுப்பு நிலக்கரித் துகள்களில் வளரவிட்டு அவற்றில் உயிரியல் சத்துகளை உண்டாக்க முடியுமென ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பன்மடங்கு செயல்வேகம்

ஓர் எஃகுத் தொட்டியில் பழுப்பு நிலக்கரித் தூள்களை நீரில் கலந்து அதனுடன் சில வகை நுண்ணியிரிகளையும் சேர்த்தபோது ஆறு மணி நேரம் கழித்து அந்தக் கலவை கருப்பான ஒரு கூழாக மாறிவிட்டது. அது இயற்கையான மண்ணுக்குச் சமானமாக எல்லாப் பண்புகளையும் பெற்று வளமான விவசாய நிலங்களில் காணப்படும் கரிசல் மண்ணை ஒத்திருக்கும்.
அந்த மண்ணில் பூச்செடிகளும் காய்கறிச் செடிகளும் வேகமாக வளர்ந்து கூடுதலான விளைச்சலையும் தருகின்றன. பூச்செடிகள் ஒரு மாதம் முன்னதாகவே பூக்கத் தொடங்குகின்றன. வெள்ளரிச் செடிகளில் இரு மடங்கு அதிகமான காய்கள் காய்க்கின்றன. இயற்கையில் காணப்படும் நுண்ணுயிரிகளைப் போலவே செயற் கையாகச் சேர்க்கப்பட்ட நுண்ணுயிரிகளும் மண்ணைப் பதப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் செயல்வேகம் பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. நம் நாட்டில் பழுப்பு நிலக்கரித் துகள்கள் கலந்த மண்ணுள்ள நிலங்களில் அத்தகைய நுண்ணுயிரிகளைக் கலந்து வளப்படுத்தலாம்.

விண்வெளி மண்

ரஷ்ய விஞ்ஞானிகள் அயோனைட் தாதுக்களிலிருந்து மஞ்சள் நிறமுள்ள மணலை உருவாக்கி, அதில் பயிர் களுக்குத் தேவையான பதினைந்து ஊட்டச் சத்துகளைக் கலந்து செயற்கை மண்ணைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மண்ணை விண்வெளிக் கலங்களில் உணவுப் பயிர்களை வளர்க்கப் பயன்படுத்த முடியுமென நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
இந்த மண்ணில் தாவரங்கள் மிக விரைவாக முதிர்ந்து, குறுகிய காலத்தில் பலன் தருகின்றன. சாதாரண மண்ணிலுள்ள மாசுகள் அதில் இல்லாததால் கலப்படமில்லாத தாவரங்களை வளர்க்க முடிகிறது. அந்த மண்ணை முடிவேயில்லாமல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். மண்ணை உருவாக்கும்போதே ஊட்டச் சத்துகளையும் நோயெதிர்ப்பு ரசாயனங்களையும் கலந்து விடுவதால் அவ்வப்போது தண்ணீர் மட்டும் விட்டால் போதும். லெட்டூஸ், பார்லி, தண்டுக்கீரை, முள்ளங்கி போன்ற 30 வகைத் தாவரங்களை வெற்றிகரமாகப் பயிரிட்டுச் சாதனை படைத்திருக்கிறார்கள். விண்வெளி மண் பரப்பப்பட்ட ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள பாத்தியில் முள்ளங்கி பயிரிட்டபோது 21 நாட்களில் 10 கிலோ முள்ளங்கி விளைந்தது. சாதாரண மண் பாத்தியில் 70 நாட்களுக்குப் பிறகு ஒரு கிலோ மட்டுமே கிடைத்தது.
விண்வெளிப் பயணங்களின்போதும், நீண்ட கடற்பயணங்களின்போதும் புதிய காய்கறிகளை அளிக்கும் செடிகளை வளர்க்க இத்தகைய செயற்கை மண் உதவும். ஒரு தாவரத்துக்கு 20 சென்டிமீட்டர் ஆழமுள்ள தொட்டியில் செயற்கை மண்ணை நிரப்பி, உயர்ந்து வளர 70 சென்டிமீட்டர் உயரமுள்ள இடமும் தந்தால் போதும். இவ்வாறான தாவரக் கூண்டுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கித் தாவரங்களைப் பயிரிட்டு வளர்ப்பதன் மூலமாகத் தேவையான காய்கறி மற்றும் கீரை வகைகளைத் தினமும் பசுமை மாறாமல் பறித்து உண்ணும் வகையில் காய்கறித் தொழிற்சாலைகளாக உருவாக்கலாம். அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு இது மிகவும் ஏற்றது. வெயில் குறைவாக அடிக்கிற துருவப் பிரதேசங்களில் கூடச் செயற்கை ஒளியைப் பயன்படுத்தித் தாவரங்களை வளர்க்க முடியும்.
பயிர் ஆய்வாளர்களுக்கு இந்தச் செயற்கை மண் பெரிதும் உதவுகிறது. குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஓர் இனத் தாவரத்தை வளர்த்து ஆராய்வதற்கு சுத்தமான, சுயம் மாறாத மண் அவசியம். அதன் மூலம் தாவரத்தின் செயல்களைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்த இயலும். வேறு எந்தத் தாவரமும் வளர்ந்திருக்காத கன்னித்தன்மையுள்ள மண்ணாகச் செயற்கை மண் அமைகிறது.
ஆதாரம் : கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு)

உலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்



தீவனப்பயிர்கள் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றைச் சேகரித்துப் பதப்படுத்திச் சேமித்து வைப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் கோடை வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குச் சத்துமிக்க தீவனம் வழங்க இயலும். பசும்புல்லில் 60 விழுக்காடு முதல் 90 விழுக்காடு அதிகமாகவும மற்ற தீவனப் பயிர்களில் சற்று குறைவாகவும் (60 – 80) விழுக்காடு இருக்கும்.  பசுந்தீவனப்பயிர்களில் ஈரப்பதம் அதிகமிருப்பதால் எளிதில் கெட்டுவிடும்.  ஆகவே பசுந்தீவனப்பயிர்களின் ஈரப்பத்தை 10 – 12 விழுக்காடுக்குக் குறைத்து சேமித்து வைக்கலாம்.  நம் நாட்டில் “வெயிலில் உலர்த்தும் முறை” பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.  பசுந்தீவனங்களை அறுவடை செய்யும் காலங்களில் போதிய சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும் அல்லது தொடர்ச்சியாக மழை பெய்தாலும் ஈரப்பத்தைக் குறைப்பது கடினம். அச்சமயத்தில் பசுந்தீவனங்களை அப்படியே ஊறுகாய் புல்லாக மாற்றிப் பதப்படுத்தலாம்.

உலர்புல் தயாரித்தல்

தீவனப் பயிர்களை அறுவடை செய்த பின்னும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.  இதனால் தீவனப்பயிர்களில் உள்ள சத்துகளின் அளவு குறைகிறது. மேலும் நுண்கிருமிகள் முக்கியமாகப் பூஞ்சை நச்சுகள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம். உலர்புல் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை.
  1. அறுவடை செய்த பின பசும்புல்லில் உள்ள ஈரப்பதத்தை 10 -15 விழுக்காடு வரும் வரை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குறைக்க வேண்டும்.
  2. உலர்புல் தயாரிக்கும் பொது இலைப்பகுதி விரையம் ஆவதைக் குறைக்க வேண்டும்.  ஏனெனில் இலைப்பகுதியில்தான் தண்டு, வேர்ப்பகுதிகளை விட அதிகச் சத்துகள் உள்ளன.

உலர்புல்லின் வகைகள்

பயறு வகைத் தீவனப்பயிர்களான தட்டைப்பயறு, கொள்ளு, நரிப்பயிறு, சணப்பு, முயல்மசால், குதிரைமசால், சோயா பீன், தக்கைப் பூண்டு மற்றும் நிலக்கடலை போன்றவற்றை வெயிலில் உலரவைத்து உலர்புல் தயாரிக்கலாம். பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களை அதிக வெயிலில் முக்கியமாகக் கோடைக்காலத்தில் பகல்வேளையில் உலர வைக்கும்போது இலை தழை இழப்பு அதிகமாக இருக்கும்.  ஆகவே காலை மாலை வேளையில் வெயில் குறைவாக உள்ள போது பயறுவகைத் தீவனங்களைக் கையாள்வது நல்லது. பொதுவாகப் பயறுவகைத் தீவனங்களில் புரதம், கால்சியம் சத்து அதிகம்.

பயறு வகைசாராத் தீவனங்கள்

  • சோளம்,
  • மக்காச்சோளம்,
  • கம்பு,
  • ராகி,
  • ஓட்ஸ்
போன்ற பயறு வகை சாராத் தீவனப்பயிர்கள் உலர்த்தி உலர்புல் தயாரிக்கலாம்.

கலப்பு வகை உலர்புல்

பயறு வகை மற்றும் பயறு வகை சாராத் தீவனப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட்டு இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்து உலர்புல் தயாரிக்கலாம். பயறுவகை சாராத் தீவனங்களுடன் பயறு வகைத் தீவனங்களைச் சேர்க்கும் போது சரிவிகிதச் சமச்சீர் தீவனம் கிடைக்கிறது. பயறு வகைத் தீவனங்களில் புரதசத்து 15 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும். ஆனால் பயறு வகை சாராத் தீவனங்களில் புரதச் சத்தின் அளவு 5 முதல் 10 விழுக்காடு வரை இருக்கும்.

தரமான உலர்புல்லின் குணாதிசயங்கள்

  1. பசுமை நில இலைகள் நிறைந்திருக்க வேண்டும்.
  2. எளிதில் செரிக்க வேண்டும்.
  3. மண், அழுக்கு மற்றும் களைச் செடிகள் இன்றிச் சுத்தமாக இருக்கவேண்டும்
  4. பூஞ்சாணப் பாதிப்பு இருக்ககூடாது

உலர்புல் தயாரிக்கும் முறைகள்

நிலத்தில் பரப்பி உலர வைத்தல்
அறுவடை செய்த தீவனப்பயிர்களை நிலத்தில் பரப்பி அவ்வப்போது திருப்பிப்போட வேண்டும்.  பெரும்பாலும் இம்முறையில் உலர்புல் தயாரிக்கப்படுகிறது.
சிறு கத்தைகளாகக் கட்டி உலரவைத்தல்
சோளம், கம்பு, ராகி போன்ற தீவனப்பயிர்கள் அறுவடைக்குப்பின் சிறு கத்தைகளாகக் கட்டி கலர வைக்கலாம். எனினும் கத்தைகளை அவ்வப்போது திருப்ப வேண்டும்
முக்கோணக் கூம்பு வடிவ முறை
சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களைச் சிறு கத்தைகளாகக் கட்டியபின் கூம்பு வடிவத்தில் நிற்க வைத்து உலர வைக்கலாம்.  இம்முறையானது மழைக் காலத்தில் பயனள்ளதாக இருக்கும்.

உலர்புல் தயாரித்தல் மற்றும் சேமிக்கும்போது ஏற்படும் இழப்புகள்

  1. பயறு வகைத் தீவனப்பயிர்களை அதிக வெயிலில் உலர்த்தும்போது இலைகள் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் பசும்புல்லில் உள்ள கரோட்டின்கள் இழப்பு அதிகரிக்கலாம்.
  2. மழைக் காலம் பனி பெய்யும் காலங்களில் தீவனங்களைப் பாதுகாக்க வேண்டும். உலர வைக்கப்பட்ட தீவனங்கள் மழையில் நனைந்தால் சத்துகள் விரயம் அதிகரிக்கும்.  மேலும் பூஞ்சை காளான் வளர ஏதுவாகும்.
  3. தீவனப்பயிர்களை அப்படியே உலர வைப்பதைவிட சில சமயங்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உலர வைப்பது எளிது.

உலர்புல் தயாரிப்பதற்கான புதிய உத்திகள்

மழை மற்றும் பனிக் காலங்களில் போதிய வெயில் கிடைக்காத போது சூரிய சக்தி உலர் கலன்களைப் பயன்படுத்தலாம். தற்காலத்தில் சூரிய உலர்கலன்கள் 2 முதல் 4 இலட்சம் செலவில் அமைக்க முடியும்.
நன்மைகள்
  1. மழை மற்றும் பனியில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
  2. விரைவில் உலர வைப்பது எளிது
  3. சத்துகள் சேதாரம் குறைவு
  4. கால்நடைகள் விரும்பி உண்ணும்
  5. பயறு வகைத் தீவனங்களை இம்முறையில் உலரவைத்துச் சேமிப்பது எளிது.
ஹைட்ரோபோனிக் பசுமைக்குடில்
மக்காச்சோளம், சோளம், கம்பு, திணை, கொள்ளு, காராமணி, சணப்பை போன்ற தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டி 4 முதல் 8 நாள்கள் வளர்ந்தபின் பசுந்தீவனமாகக் கால்நடைகளுக்கு வழங்கலாம்.  இம்முறையில் மண் இன்றித் தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படுகிறது.  இவ்வகைத் தீவனங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.
புரத சத்தின் அளவு தானியத்தில் உள்ள புரத அளவைப் பொறுத்தது. பசு, எருமைகளுக்குத் தினமும் 15 – 20 கிலோ, ஆடுகளுக்கு 1-2 கிலோ பன்றி, முயல்களுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை அளிக்கலாம். பொதுவாக 1 கிலோ தானியத்தில் 4 கிலோ முதல் 5 கிலோ வரை பசுந்தீவனம் பெறமுடியும். ஹைட்ரோபோனிக் பசுமைக் குடில் அமைத்துக் கோடையிலும் வறட்சிக் காலங்களிலும் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு வழங்கலாம். எனினும் ஹைட்ரோபோனிக் பசுந்தீவன உற்பத்திச் செலவு அதிகம்.

ஊறுகாய்ப் புல் தயாரித்தல்

பசுந்தீவனப் பயிர்களை அதிக ஈரப்பதத்துடன் காற்றுப்புகாமல் நொதிக்க வைப்பதன் மூலம் ஊறுகாய் புல் கிடைக்கிறது.
பசுந்தீவனங்கள் தேவைக்குப் போக அதிக அளவில் கிடைக்கும் போதும் பசுந்தீவனப் பயிர்களை உலர வைப்பதற்கு போதிய சூரிய ஒளி கடைக்காமல் மோசமான வானிலை நிலவும் சமயங்களிலும் ஊறுகாய் புல் தயார் செய்வதன் மூலம் பசுந்தீவனப் பயிர்களைச் சேமித்து; வைக்கலாம். மேலும் முற்றிப்போன தடிமனான தண்டுகள் உடைய தீவனப்பயிர்களையும் இம்முறையில் பதப்படுத்துவதன் மூலம் அவற்றின் தரத்தை உயர்த்த முடியும்.
ஊறுகாய்ப் புல் தயாரிக்க உகந்த தீவனப் பயிர்கள்
மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி போன்ற தானியப் பயிர்கள் சிறந்தவை.  எனினும் பயறு வகைத் தீவனப் பயிர்களையும் மற்ற தீவனப் பயிர்களுடன் கலந்து அல்லது சர்க்கரை பாகு, தானியங்கள் போன்ற மாவுச் சத்து அதிகமுள்ள பொருள்களைச் சேர்த்துப் பதப்படுத்தமுடியும்.
ஊறுகாய்ப் புல் தயாரிப்புக்குப் பூக்கும் பருவத்தில் உள்ள தீவனப் பயிர்களை அறுவடை செய்து ஊறுகாய்ப் புல் தயாரிக்க வேண்டும். ஊறுகாய்ப் புல் குழியின் ஆழம் மற்றும் அகலம் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக ஒரு கன மீட்டர் அளவில் 400 – 500 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தலாம். தினமும் 20 முதல் 25 கிலோ வரை ஊறுக்காய்ப் புல்லை மாடுகள் உண்ணும்.
செய்முறை
ஊறுகாய் புல் செய்வதற்கு ஊறுகாய்ப் புல் குழி தேவைப்படுகிறது. இக்குழியானது மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும். சுற்றில் விரிசல் இருக்க கூடாது. குழி அமைக்க முடியாத இடங்களில் சிமெண்ட் கோபுரம் அமைத்து அதில் ஊறுகாய்ப் புல் தயார் செய்யலாம். குழியின் சுவர் மேடு பள்ளம் இன்றியும் போதிய வலிமை உடையதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டி, பெரிய பிளாஸ்டிக் கேன், அதிகமான பாலித்தீன் பைகள் கொண்டும் ஊறுகாய்ப் புல் தயாரிக்கலாம்.
அறுவடை செய்தல்
பசுந்தீவனப் பயிர்களைப் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 - 65 விழுக்காடு வரும் வரை வயலில் உலர்த்த வேண்டும். இதற்காக 3-4 மணி நேரம் வெயிலில் உலர்த்தினால் போதுமானது.
நிரப்புதல்
முதலில் குழியில் சிறிதளவு வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லைப் பரப்ப வேண்டும். பின் தீவனப் பயிர்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய்ப் புல் குழியில் இட்டு நிரப்ப வேண்டும். குழி நிரப்புதலை ஓரிரு நாள்களில் முடித்து விட வேண்டும். குழியை நிரப்பும்போது மழை பெய்யக்கூடாது. நில மட்டத்துக்கு மேல் 5 அடி உயரம் வரை நிரப்பியபின், வைக்கோலைப் பரப்பி அதன் மீது மண் கொண்டு காற்று புகாவண்ணம் மொழுக வேண்டும்.  தேவைப்படின் ஒன்று இரண்டு லோடு மண் கொண்டு அமுக்கவும்.

ஊறுக்காய்ப் புல் குழியில் சேர்க்க வேண்டிய பொருள்கள்

சர்க்கரைப் பாகு
கரும்புச் சர்க்கரை பாகுவை 2 விழுக்காடு (பசும்புல் எடையில்) வரை ஊறுக்காய்ப்புல் குழியில் சேர்க்கலாம். குழியில் உள்ள நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து, சர்க்கரை பாகு எளிதில் கிடைப்பதால் அதிக அளவு லாக்டிக் அமிலம் உற்பத்தியாகிப் புல் நன்கு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
தானியங்கள்
சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி, குருணை அரிசி போன்ற தானியங்களை 4-5 விழுக்காடு சேர்க்கலாம்.  இதனால் நுண்ணுயிர்களுக்குத் தேவையான மாவுச்சத்து கிடைக்கிறது.
கரிம அமிலங்கள்
அசிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், புரகியோனிக் அமிலம் போன்ற அமிலங்களை ஒரு (1.0) விழுக்காடு வரை சேர்க்கலாம்
தகுந்த தருணத்தில் அறுவடை செய்து சைலேஜ் தயாரித்தால் மேற்கண்ட பொருள்களைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை
நுண்ணுயிர்கள் சேர்க்கை
தயிர், மோர் மற்றும் ஊறுகாய்ப் புல் தயாரிப்புக்கான தனிப்பட்ட சிறப்பு நுண்ணுயிர்க் கலவையை தேவைக்கு ஏற்பக் குழியில் சேர்க்கலாம்
சுண்ணாம்புத் தூள்
0.5 விழுக்காடு முதல் 1.0 விழுக்காடு வரை சுண்ணாம்புத்தூளைச் சேர்க்கலாம்.  இதனால் கால்சியம் சத்து கால்நடைகளுக்கு கிடைக்கும்.

ஊறுகாய்ப்புல் குழியில் ஏற்படும் மாற்றங்கள்

குழியில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் காற்றில்லா நொதித்தல் மூலம் தீவனப் பயிரில் உள்ள மாவுச் சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. இதனால் கார அமில நிலை குறைந்து மற்ற நுண்ணுயிர்கள் வளராவண்ணம் தீவனப் பயிர் பாதுகாக்கப்படுகிறது. தீவனப் பயிரில் ஈரப்பதம் 65 விழுக்காட்டுக்கு அதிகமிருந்தால் சத்துகள் நீரில் கரைந்து வீணாக வாய்ப்புள்ளது. அதே போல் தீவனப்பயிரில் போதிய அளவு மாவுச்சத்து இல்லாத போது சர்க்கரை பாகு, ஸ்டார்ச், தானியங்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், லாக்டிக் அமிலம் உருவாகப் போதிய மாவுச் சத்து இல்லாமல், புல் கெட்டுப்போக வழியுண்டு.
ஒரு முறை குழியினைத் திறந்துவிட்டால் பதனப் பசுந்தீவனத்தை எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த வேண்டும். குழிகளில் பதனப் பசுந்தீவனம் தயாரிக்கும்போது புல் கெட்டுவிடும் வாய்ப்பு அதிகம். மேலும் வேலைப்பளுவும் அதிகம். அதனால் தற்பொழுது பாலிதீவன பைகளில் தயாரிக்கும் முறை பிரபலம் ஆகிவருகிறது.

புதப்படுத்தும் முறை

சுமார் 100 கிலோ பசுந்தீவனத்தைப் பதப்படுத்தக் கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படுகின்றன.
வெல்லம் (அ) கரும்பாலைக் கழிவுப்பாது           -           20 கிலோ
சமையல் உப்பு                                    -           10 கிலோ
தண்ணீர்                                          -           30 கிலோ
செயல்முறை
  1. சுமார் 6*6*4 அடி அளவுள்ள பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம்.
  2. ஒரு பாத்திரத்தில் 1000 கிலோ பசுந்தீவனத்திற்க்கு தேவையான 10 கிலோ உப்பு மற்றும் 20 கிலோ வெல்லத்தினை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துப் பின்பு அடுக்கி வைத்த பசும் புல்லின் மேல் சற்று தெளிக்கவேண்டும். திரும்பவும் பசும்புல்லை அரை அடி உயரம் அடுக்கி முன்பே கூறியதுபடி வெல்ல உப்புக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
  3. அல்லது மொத்தக் கரைசலையும் புல்லின் மீது தெளித்துப் புல்லைக் கிளறிவிட்டு மீண்டும் தெளித்து மொத்தப் புல்லிலும் வெல்ல உப்புக் கரைசல் சமமாகக் கலந்து இருக்கும்படி செய்து குழியில் அல்லது பைகளில் அடைக்கலாம். ஒவ்வொரு முறையும் புல்லினை அடுக்கும் சமயம் அதற்குக் கால்களால் நன்றாக அழுத்தம் கொடுத்து மிதித்து அடைப்பட்டு இருக்கும் காற்றை வெறியேற்ற வேண்டும்.
  4. இதன் பின் பாலீதின் பையைக் காற்று புகாமல் இறுகக் கட்டி நிழலில் வைக்க வேண்டும்.
  5. இந்தப் பசும்புல்லில்  சுமார் 55 முதல் 60 நாட்களில் இரசாயன மாற்றங்கள் முழுமைபெற்று சாதாரணப் பதனப் பசும்புல்லாக மாறிப் பசும் மஞ்கள் நிறத்தில் பதப்படுத்தப்பட்டுவிடும். எனவே, 2 மாதங்களுக்கு பிறகு இந்த பசும் புல்லினைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்த முடியும்.

கரும்புத் தோதை ஊறுகாய்ப்புல்

கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் கரும்புத் தோகையைத் தீவனமாகப் பயன்படுத்த முடியும்.  பொதுவாக ஓர் ஏக்கர் கரும்புச் சாகுபடியில் சுமார் 4 முதல் 5 டன் வரை கரும்புத் தோகை உபபொருளாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்க பெறும் உபபொருளை அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாகக் கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யும் கூலித்தொழிலாளிகளுக்கு இலவசமாகக் கொடுத்து விடுகின்றனர் அல்லது அத்தோகையை குறைந்த அளவில் அவரவர் தம் கால்நடைகளுக்குப் பசுந்தீவனமாகப் பயன்படுத்துவதுடன் மீதமுள்ள தோகையை விவசாயிகள் தத்தம் கரும்புச் சாகுபடி செய்த நிலத்தில் எரித்து வீண் செய்கின்றனர். பொதுவாகத் தமிழகத்தில் கரும்பு அறுவடை நவம்பர் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. மேலும், அறுவடைக்கு முன்பு பருவமழை பொழிந்து போதிய அளவிற்குப் பசுந்தீவன உற்பத்தி இருப்பதால், கட்டத்தில் அறுவடை செய்யும் கரும்பின் உபபொருளான கரும்புத் தோகையை மேற்கூறிய முறையில் 10 கிலோ யூரியாவினையும் சேர்த்து ஊறுகாய்ப் புல்லாக சேமித்து அல்லது பதப்படுத்தி வைத்தால் கோடைக் காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை அறவே அல்லது போதிய அளவு தவிர்க்க முடியும்.
நல்ல தரமான ஊறுகாயப் புல்லின் குணாதிசயங்கள்
  1. புல்லின் பசுமை அதிகம் மாறாமல் இனம் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்
  2. கெட்ட வாசனை ஏதுமின்றி நல்ல ஈர்க்ககூடிய மணம் கமழும்.
  3. கார – அமில நிலை சுமார் 4.0 ஆக அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்
  4. அதிக அளவு லாக்டிக் அமிலமும் குறைந்த அளவு பியூட்ரிக் அமிலமும் இருக்கும்.
அரசு மானியம்
குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் பசுந்தீவனம் அல்லது ஓர் ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு தலா 250 கிலோ கொள்ளளவு உள்ள 4 ஊறுகாய்ப்புல் பைகள் மற்றும் வெல்லம் உப்பு போன்ற இடுபொருள்கள் வாங்குவதற்கும் சேர்த்து ரூபாய் 2030 தமிழ்நாடு அரசு கால்நடைப் பராமரிப்பு துறை மூலம் ஊறுகாய்ப் புல் தயாரிக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஊறுகாய்ப் புல் தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

  1. உலர்புல் தயாரிக்க ஏதுவாக வானிலை அமையவில்லை என்றால், பசுந்தீவனத்தை ஊறுகாய்ப் புல் தயாரிப்பதன் மூலம் பதப்படுத்தலாம். மழைக் காலங்களில் இம்முறை பெரிதும் உதவும்.
  2. ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால், பசுந்தீவனத்தின் தன்மை மாறுபடுவதில்லை. பசுந்தீவனத்தை போலவே ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகள் சேதாரமில்லாமல் விரும்பி உண்ணும். வறட்சி மற்றும் கோடைக் காலங்களில் போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்காதபோது ஊறுகாய்புல்லைப் பசுந்தீவனத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.
  3. தடிமனான தண்டு மற்றும் முற்றிய புற்களைக் கூட ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதன் மூலம் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
  4. தீவனப் பயிருடன் உள்ள களை விதைகள், இதன் மூலம் அழிக்கப்படுகிறது.
  5. ஊறுகாய்ப் புல்லைப் பல ஆண்டுகளுக்கு 10 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
  6. குடற்புழுக்களின் முட்டைகள் அழிக்கப்படுவதால் குடற்புழுத் தொல்லை குறைகிறது.
இடர்பாடுகள்
  1. தகுந்த முறையில் பதப்படுத்தாவிட்டால் புல் கெட்டுப்போகவும் சத்துகள் வீணாகவும் வழியுண்டு
  2. ஊறுகாய்ப் புல் குழி அமைக்கச் செலவு அதிகம் மற்றும் தீவனப்பயிரை நறுக்கிக் குழியில் நிரப்ப ஆட்கள் தேவை
  3. போதிய அளவு விழிப்புணர்வு மற்றும் செய்முறைப் பயிற்சி விவசாயிகளுக்கு இல்லாத காரணத்தால் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு பிரபலமடையவில்லை.
நமது நாட்டின் சில அரசு மற்றும் தனியார் கால்நடைப் பண்ணைகளில் மட்டுமே ஊறுகாய்ப் புல் மூலம் தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுக் கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.
இம்முறையைப் பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால் கால்நடைகளுக்குத் தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்க முடியும்.

மண்ணை வளப்படுத்த


இயற்கை வழி விவசாயத்தை கையில் எடுப்போர் , இரசாயணத்திலிருந்து இயற்கை வழி விவசாயத்துக்கு மாறுவோர் முதலில் செய்யவேண்டியது மண்ணை வளப்படுத்துவது ஆகும்.
soil_whattype
மண் எவ்வளவு வளமாக உள்ளதோ அந்த அளவுக்கு நாம் மகசூல் எடுக்கலாம் இயறக்கை ஒத்துழைத்தால். மண்ணை எடுத்து பார்த்தல் புட்டு போல பொலபொலன்னு இருக்கனும் அது தான் வளமிக்க மண் ஆகும். அதை எவ்வாறு செய்வது என்று கீழே பார்ப்போம்.
ஒரு முறை பசுந்தாள் உரப் பயிரிட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதை விட சிரமம் பாராது மூன்று முறை பயிரிட்டு மடக்கி உழுதால் உங்கள் மண் வளமிக்கதாக ஆகும். பசுந்தாள் வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் எதாவது ஒரு சத்து அபரிமிதமாக இருக்கும்.
1. முதலாவதாக விதைத்து 20வது நாளில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
2. மீண்டும் விதைத்து அடுத்த முறை 45 வது நாளில் மடக்கி உழுதுவிடவேண்டும்.
3. அடுத்து விதைத்து 90 நாட்கள் வளரவிட்டு மீண்டும் மடக்கி உழுதுவிடவேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் அனைத்து சத்துகளும் முழுமையாக மண்ணில் சேரும். இதை செய்து முடிக்க 6 மாத காலம் பிடித்தாலும் இப்போது உங்கள் மண்ணில் போதுமான சத்துக்கள் உருவாக்கி இருக்கும்.  அய்யா நம்மாழ்வார் கூறியது.

கோடீஸ்வரனாக்குமா கார்பன் டிரேடிங்!? - மரம் வளர்ப்பு முழு அலசல்

உங்களுக்காக நாங்கள் எங்கள் நிலத்தில் தேக்கு வளர்க்கிறோம்... பாக்கு வளர்க்கிறோம்! இருபது ஆண்டுகளுக்குப் பிறகு... நீங்கள் லட்சாதிபதி... கோடீஸ்வரன்...!' என்றபடி 90-களில் தமிழக மக்களின் பணத்தை 'அனுபவி'த்த பலே பேர்வழிகளை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. கடைசியில், காய்ந்த செடியைக் கூட கண்ணில் காட்டாமல் அந்த 'அனுபவ'ஸ்தர்கள் ஓடிவிட, பணத்தைக் கொடுத்தவர்களின் பரிதாப நிலை இன்று வரை மாறவில்லை.
இந்த நிலையில், 'கார்பன் டிரேடிங்' என்ற பெயரில் 'மரம் வளர்த்தால் மகாராஜாவாகலாம் வாங்க' என்று உலக அளவில் தற்போது விளம்பரங்கள் கொடிகட்டுகின்றன. இன்டர்நெட்டில் கடைவிரித்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் இலுப்பக்குடி வரை 'கார்பன் டிரேடிங்' என்பது ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'கார்பன் டிரேடிங் என்றால் என்ன... அது உண்மையா... எங்கள் தோட்டத்தில் நாங்கள் மரம் வளர்க்க வெளிநாட்டிலிருந்து பணம் கொடுப்பார்களாமே இது எப்படி சாத்தியம்...?' -இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் பசுமை விகடனுக்குக் கடிதங்களும் தொலைபேசி விசாரிப்புகளும் தொடர ஆரம்பித்துள்ளன. இதையடுத்து, அதைப்பற்றி தீவிரமாக விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
‘கியோட்டோ' வழிகாட்டி!
உலக அளவில் வேர்விட ஆரம்பித்திருக்கும் ஒரு வியாபாரம்தான் 'கார்பன் டிரேடிங்'. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கோடு கிளம்பிய ஒரு பொறிதான் இதற்கு அடிப்படை. உலகளவில் அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பெருமளவில் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுக்களால், குறிப்பாக கார்பன்-டை-ஆக்ஸைடினால் பூமி பெருமளவில் வெப்பமடைந்து வருகிறது. பூமி மற்றும் காற்று மண்டலத்தைக் குளிரவைக்கவும்... காற்றைச் சுத்தப்படுத்தவும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும்.
'கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக அளவில் வெளியிடும் ஒவ்வொரு தொழிற்சாலையும் உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் அவர்களின் சார்பாக மரங்களை நட்டு, காற்றில் அதிகப்படியாக இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவைக் குறைக்கவேண்டும்' என்று 1997-ம் ஆண்டு ஜப்பானின் ‘கியோட்டோ' நகரில் கூடி உலக நாடுகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதையடுத்துதான், 'கார்பன் டிரேடிங்' ஆரம்பமானது.
உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் கார்பன் டிரேடிங்கில் கால்பதித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ‘டிஸ்ட்’, ஜப்பானில் இருக்கும் ‘ஜப்பான் கார்பன் ஃபைனான்ஸ் லிமிடெட்’, பிலிப்பைன்ஸில் இருக்கும் ‘ஏசியன் டெவலப்மென்ட் பேங்க்’ ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. நம்மூரிலும் பல நிறுவனங்கள் இதில் கால்பதிக்கும் நோக்கோடு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
இந்த வியாபாரம் எப்படி நடக்கிறது?
குமாரவேலு
மரம் வளர்ப்போருடன் மேற்கண்ட நிறுவனங்கள் ஒப்பந்தமிட்டுக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு குறைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு பணம் கொடுக்கும். அந்த மரங்களால் குறிப்பிட்ட வாயு எந்த அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை அளவெடுத்துக் கொள்ளும் அந்த நிறுவனம், ஏதாவது ஒரு தொழிற்சாலையிடம் அதைக் கணக்குக் காட்டி பணமாக்கிக் கொள்ளும். இதைக் 'கிரிடிட்' என்கிறார்கள். இந்த 'கிரிடிட்', தொழிற்சாலையின் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, அந்தத் தொழிற்சாலை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைக் குறைத்திருக்கிறது என்று அர்த்தமாகிவிடும்.
கார்பன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நேரடியாகவும் சேட்டிலைட் மூலமாகவும் மரங்களை கண்காணித்தபடி இருப்பார்கள். அதாவது, செடி நன்றாக வளர்கிறதா... பாதுகாப்பாக இருக்கிறதா... என்றெல்லாம் பார்ப்பார்கள்.
கார்பன் டிரேடிங் மூலம் பணம் கிடைப்பதுடன், மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் உட்பட அனைத்துப் பயன்களையும் விவசாயிகளே எடுத்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் லாபம்.
கார்பனும்... கத்திரிக்காயும்...
இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம்... உண்மையிலேயே பணம் கிடைக்குமா... இதற்காக யாரை அணுகுவது..? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைதேடி, தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலுவைச் சந்தித்தோம்.
‘‘கார்பன் டிரேடிங் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை கிரகித்து சீதோஷண நிலையை சமமாக வைத்திருக்க மரங்கள் உதவுகின்றன. இதை வைத்துக் கணக்குப் போட்டுதான் உலக அளவில் கார்பன் டிரேடிங் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தமிழக வனத்துறையில் இதற்கென தனியாக ஒரு செல் உள்ளது. வனத்துறையின் உயர் அதிகாரிகளான ஓஜா மற்றும் ஜெயின் அலாவுதீன் ஆகியோர் அதற்கு பொறுப்பாளர்களாக உள்ளனர்'' என்று சொன்னவர், அவர்களை நம்மிடம் பேச வைத்தார்.
''கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ளவென்று பூமியில் இருக்கும் ஒரே பொருள் மரம்தான். அதனால்தான் மரம் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறோம். ஐ.பி.சி.சி. என்றழைக்கப்படும் 'இன்டர்கவர்மென்டல் பேனல் ஃபார் க்ளைமேட் சேஞ்சஸ்' என்ற அமைப்புதான் 'கார்பன் டிரேடிங்' என்பதை மேற்பார்வையிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம்தான் இந்த அமைப்பு.
பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தற்போது கார்பன் டிரேடிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வியாபாரம் நேரடியாக நடைபெறவில்லை. பங்கு வர்த்தகம் போல இன்டர்நெட் மூலமாக நடக் கிறது. அதனால், கார்பனின் விலை என்பது கத்திரிக்காய் விலை போல இஷ்டத்துக்கு ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. விலையைக் குறைவாக கொடுத்து கொள்முதல் செய் வதிலேயே பலரும் குறியாக இருக்கிறார்கள். உலக அளவில் நடக்கும் கார்பன் டிரேடிங் குறித்த விஷயங்களை மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறோம்.
நம்ப வேண்டாம்!
இந்தியாவைப் பொறுத் தவரை எந்த நிறுவனமும் கார்பன் டிரேடிங்கில் இதுவரை ஈடுபடவில்லை. அப்படி யாராவது சொன்னால் அதை நம்ப வேண்டாம். இது தொடர்பாக முழு அதிகாரம் படைத்தது மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்தான். அங்கிருந்து முழுமையான தகவல் கிடைத்த பின்பு நாங்களே கார்பன் டிரேடிங் பற்றி தகவல் வெளியிடுவோம். தற்போதைக்கு பல்வேறு நிறுவனங்களும் மரம் வளர்ப்புக்காக அங்கே பதிவு செய்து வைத்துள்ளன. ஆனால், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வேறு வகைகளில் (பார்க்கப் பெட்டிச் செய்தி) குறைக்கும் தொழிற்சாலைகள் கார்பன் டிரேடிங் மூலம் லாபம் பார்க்கின்றன. மற்றபடி மரம் வளர்ப்புக்கு அனுமதி வரும் வரை காத்திருப்பதே நல்லது'' என்று விஷயத்தைத் தெளிவாக எடுத்து வைத்தனர் ஓஜாவும் ஜெயின் அலாவுதீனும்.
எப்படியும் லாபம்தான்!
கடைசியாக நம்மிடம் பேசிய குமாரவேலு, ‘‘தமிழகத்தில்தான் தரிசு நிலங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இப்படி நிலங்களைப் போட்டு வைத்திருக்கும் விவசாயிகள் பெரிதாகச் செலவு செய்யாமல் மரம் வளர்ப்பில் ஈடுபடலாம். மரமாக வெட்டி விற்பனை செய்தாலே ஆயிரக்கணக்கில் வருமானம் வரும். இன்னொரு பக்கம் கார்பன் டிரேடிங் என்பது கூடுதல் வருவாயாக வரவிருக்கிறது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மரம் வளர்ப்பில் ஈடுபட விவசாயிகள் முன்வரவேண்டும். எல்லா வகையிலும் உதவ வனத்துறை தயாராக இருக்கிறது.'' என்றார் குமாரவேலு.
கார்பன் கணக்கு!
‘‘கார்பன் டிரேடிங் எப்படி கணக்கிடப்படுகிறது’’ என்ற கேள்விக்கு, வனத்துறை உயரதிகாரியான ஜெயின் அலாவுதீன் (அலைபேசி: 94436-72068) பதில் கொடுத்தார்.
''மரம் நட்ட முதலாம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளில் அந்த மரம் எந்த அளவுக்கு கார்பன்-டை- ஆக்ஸைடை கிரகித்துள்ளது என்பதைக் கணக்கிட்டுதான் விவசாயிக்குப் பணம் கொடுக்கப்படும். ஒரு தோட்டத்தில் இருக்கும் மரங்கள் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவைக் கிரகித்துள்ளன என்பதை ஒரு மரத்தை வெட்டுவதன் மூலம் சராசரியாக கணக்குப்போடு வார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். உங்களிடம் ஒப்பந்தம் செய்வதற்கேற்ப ஒவ்வொரு முறையும் கணக்கெடுத்து பணம் கொடுப்பார்கள்.
உதாரணத்துக்கு... ஒரு ஹெக்டேரில் இருக்கும் தேக்கு மரங்கள் ஓராண்டில் கிரகிக்கும் கார்பன் -டை-ஆக்ஸைடு, 10 டன் கார்பனாக மரங்களில் சேர்ந்திருக்கும். அந்த நிலத்தில் 2 டன் அளவுக்கு கார்பன் சேர்ந்திருக்கும். மொத்தம், 12 டன் கார்பன். ஒரு டன் கார்பனில் 3.67 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயு இருக்கும். 12 டன்னுக்கு கணக்குப்போட்டால் மொத்தம் 44,040 கிலோ. ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடு என்பதை '1 கிரிடிட்' என்று கணக்கிடுகிறார்கள். 1 கிரிடிட் 10 முதல் 15 டாலர் என நாடுகளுக்கு ஏற்ப விலை வைக்கப்படுகிறது. 1 டாலர் 45 ரூபாய் வீதம் கணக்கிட்டால், குறைந்தபட்சமாக 1 கிரிடிட் என்பது 450 ரூபாய். ஒரு ஹெக்டேரில் 44 கிரிடிட் வருகிறது. ஆக, ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்துக்கு 19,800 ரூபாய் கிடைக்கும்'' என்றார்.

மரம் மட்டுமல்ல..!
ஓரிடத்தில் வசிக்கும் மக்கள், அந்த இடத்தை மரம் வளர்ப்புக்காக கொடுத்துவிட்டு, நகர்ப்புறங்களைத் தேடிச் சென்று கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும் ஏதாவது ஒரு தொழில் ஈடுபட்டால், ஆண்டுதோறும் அவர்கள் எவ்வளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியாகக் காரணமாக இருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுத்து, அதை ஏற்கெனவே அவர்கள் வசித்த இடத்தில் மரம் வளர்க்கும் நபரின் கணக்கில் கழித்துவிடுவார்கள்.
மரங்களிலிருந்து மட்டுமல்ல... ஏற்கெனவே கார்பன் -டை-ஆக்ஸைடை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிலை கைவிட்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை குறைவாக வெளியிடும் அல்லது அறவே வெளியிடாத வேறு தொழிலை மேற்கொண்டாலும் கார்பன் டிரேடிங் மூலம் பணம் பார்க்கலாம். அதாவது, கார்பன்-டை -ஆக்ஸைடை அளவுக்கு அதிகமாக வெளியிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இத்திட்டம். சூரிய ஒளி, காற்றாலை போன்ற இயற்கை சார்ந்த விஷயங்களை பயன்படுத்துவதன் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியாவதைக் குறைக்க முடியும். இந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரை 76 கம்பெனிகள் பலனடைந்து வருகின்றன.

அனுமதியா.. எதற்கு?‘
'கார்பன் டிரேடிங்கிற்கு இந்தியாவில் இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை' என்று சொல்லப் படும் அதேசமயம், 'ஒரு ஏக்கரில் மரம் வளர்த்தால் கார்பன் டிரேடிங் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் கிடைக்கும்' என்று அடித்துச் சொல்லிக் கொண் டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.ஆர்.தமிழ்வாணன். 'கிரீன் இந்தியா கார்பன் மிட்டிகேஷன் அண்டு டிரேடிங் லிட்' என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், ‘‘கார்பன் வியாபாரம் செய்ய யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மத்திய வனத்துறை இதற்கு எந்தக் கொள்கையையும் வகுக்கவில்லை. இதைக் கட்டுப்படுத்தச் சட்டமும் கிடையாது. எல்லாமே இன்டர்நெட்டில் நடக்கும் வியாபாரம்தான். வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் இங்கே கார்பன் டிரேடிங்கில் ஈடுபடுகின்றன. அதை வைத்து தமிழக விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெற்றுத் தருவதற்காக எங்கள் நிறுவனம் பாடுபட்டு வருகிறது’’ என்று சொல்கிறார்.

அனுமதியில்லை... ஆனாலும்!
கார்பன் டிரேடிங்கில் கால்பதித்திருக்கும் அமெரிக்காவின் 'டிஸ்ட்' நிறுவனத்துக்கு சென்னையில் ஆலோசகராக இருப்பவர் பிரபாகரன். அவர் பேசும்போது, ‘‘டிஸ்ட் நிறுவனத்தின் சார்பாக 2002-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார்பன் டிரேடிங் வர்த்தகத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை. மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அதற்குள்ளாகவே நாங்களே முன்வந்து விவசாயிகளை மரம் வளர்ப்பில் ஈடுபடுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டில் செய்யாறு, வந்தவாசி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் மத்தியில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 45 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்க வைத்துள்ளோம். பெரும்பாலும் சவுக்கு மரத்தைதான் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். விலை உயர்ந்த மரங்களை நடவு செய்ய ஆலோசனை வழங்கி வருகிறோம். எந்த வகையான மரமாக இருந்தாலும் நடவு செய்து 3 மாதம் கழித்து மரக்கன்று நன்றாக வளர்ந்திருந்தால் மரம் ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 12 காசு என்கிற விகிதத்தில் மானியம் கொடுக்கிறோம். நிலத்தில் அந்த மரம் உயிரோடு நிற்கும் வரை மானியம் தொடரும்.
மரத்துக்கு நாங்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. அம்மரங்கள் உறிஞ்சும் கார்பன் எவ்வளவு என்ற அளவு மட்டும்தான் எங்களுக்குத் தேவை. இதற்காக மட்டுமே விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை கொடுக்கிறோம். இப்போதைக்கு இது அதிகாரப்பூர்வமான தல்ல. ஆனால், நிச்சயமாக வரவிருக்கும் ஒரு வியாபாரம்தான். அதனால்தான் கைக் காசைப் போட்டு நாங்களே இதைத் தொடங்கியுள்ளோம். அனுமதி கிடைத்துவிட்டால், நாங்கள்தான் இதில் முன்னோடியாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்துவருகிறோம்’’ என்றார் (அலைபேசி: 98411-36570)

தமிழக வனத்துறையின் கார்பன் டிரேடிங் செல் அமைப்பின் தொலைபேசி: 044-22750297.

Tuesday, March 21, 2017

தொல்லுயிர் கரைசலை எவ்வாறு தயாரிக்கலாம்?



50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து 5 கிலோ சாணத்துடன் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை, 26 கிராம் கடுக்காய் தூள், 2.5 கிராம் அதி மதுரப்பொடி சேர்த்து பிசைந்து காற்றுப்புகாமல் 10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும். இதனை இலைவழி ஊட்டமாக 1க்கு 10 பங்கு நீர் கலந்து தெளிக்கலாம். இது ஓர் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி


கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி- மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும்.

செய்முறை- 13௦ லிட்டர் கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் உற்றி மழை, வெய்யல்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய் கொட்டை( பொடியாக வாங்க கூடாது) வாங்கி( கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது) அதை இடித்து வைத்து கொள்ளுங்கள். 1௦ லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கோட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 1௦ எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.

தெளிப்புமுறை- 15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 7௦ லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும்.(களைகள் முற்றி இருந்தால் 5௦ லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.
குறிப்பு- கடுக்காய் கொட்டையை உடைக்கும் பொழுது மூக்கை துணியில் கட்டி கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசகுழாயின் வழியே நமது உடலுக்குள் சென்றால் காய்ச்சல் வரும்.
தெளிப்பிர்க்கு கைத்தெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தெளிப்பிர்க்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.
காலை 7 மணி முதல் 1௦ மணி வரைதான் தெளிக்க வேண்டும்.